Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துரோகிகளுக்கு 'சீட்' டா? புலம்பும் அதிமுக தொண்டர்கள்!

மிழகம் முழுவதுக்குமான அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அதிரடியாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இந்த வேட்பாளர்கள் பட்டியல், கூட்டணி கட்சியினராக இருந்த பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்றுவரை தங்களுக்கு 'சீட்' என நம்ப வைத்து, கழுத்தறுத்து விட்டதாக அக்கட்சியினர் அ.தி.மு.க.விற்கு எதிராக கொதித்து வருகின்றார்கள். அதைவிடக்கொடுமை அ.தி.மு.க.வினரே இந்த வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இருக்காதா என்ன புலம்பி வருவதுதான்.

கரூர் மாவட்டத்தில் பதவி பறிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. கரூரில் விஜய பாஸ்கரும், கரூர் சிட்டிங் எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜியிடமிருந்த பதவி பறிக்கப்பட்டது முதல், இப்போதுவரை அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதனின் பினாமி என்றும், அதனால் பதவி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், 'நடவடிக்கை எடுத்தேன் என்கிற பெயரில் பதவி பறிப்பு எல்லாம் சும்மா ஆக்டிங்கா...?' என புலம்புகிறார்கள் கரூர் அ.தி.மு.க.வினர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ராமஜெயலிங்கம். அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது ஜானகி அணிக்கு சென்று, 1989-ல் ஜெயங்கொண்டத்தில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டு, ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளரை தோற்கடிக்க காரணமாக இருந்தார். அன்று ஜானகி அணியில் இருந்தவருக்கு இப்போது ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியிருக்கிறார் என்றும், ஜெயங்கொண்டம் அ.தி.மு.க.வில் உண்மையான அ.தி.மு.க.வினருக்கு பஞ்சமா என்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

இதேபோல், விருத்தாச்சலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.டி.கலைச்செல்வன், போட்டி அ.தி.மு.க.வில் நகர செயலாளராக இருந்தவர் எனவும், அ.தி.மு.க.வில் பதவி, பணம், சுகம் காணும் போட்டி அதிமுகவினர் என்றும் கூறி, கலைச்செல்வனை ஜானகி அணியினர் நகரசெயலாளராக அறிவித்த செய்தித்தாளை ஆதாரமாக காண்பித்து வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் உலாவ விட்டுள்ளனர். இதேபோல், அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள செ.கு.தமிழரசன், நடிகர் கருணாஸ் உள்ளிட்டவர்களுக்கு சீட் வழங்கியதும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படியான தகவல்களால்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் பல ரத்தத்தின் ரத்தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, வெளிப்படையாக தெரிகிறது. 'என்னாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா...!' என இவர்கள் புலம்புவது வெளிப்படையாக கேட்கிறது.

வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வருமா... வராதா? என பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பந்தயம் கட்டுகிறார்களாம்

-சி.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ