Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூட்டணியால் தேமுதிகவில் போர்க்கொடி- ம.ந.கூ. தலைவர்கள் சொல்வது என்ன?

"மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து விட்டதால் தி.மு.க தலைமைக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த பதற்றத்தில்தான் தே.மு.தி.கவை உடைக்க முயற்சி செய்கிறார்கள்" என மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "இரண்டு மாதங்களாக தே.மு.தி.கவை,  கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுத்து அதில் தோற்று விட்டது தி.மு.க. ஆனாலும் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து விட்டதால், தி.மு.க தலைமைக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த பதற்றத்தில்தான் தே.மு.தி.கவை உடைக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்சி உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் கட்சியை உடைக்க பார்ப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு மாற்று எதுவும் உருவாகக் கூடாது என்று கருதுகின்றன. சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன்  அதிமுக, தே.மு.தி.க எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. திமுகவுடன் உடன்பாட்டுக்கு வரமறுத்த ம.தி.மு.கவை உடைக்க தி.மு.க முயற்சி எடுத்தது. இப்போது தே.மு.தி.க.வை உடைக்க முயல்கிறது.  தி.மு.க., அதிமுக வேண்டாம் என்று மக்கள் கருதுகிறார்கள். தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். தே.மு.தி.க - மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், "தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை ஊழல் நிறைந்த கட்சிகள். தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடித்த கட்சிகள். மக்களை மது குடிக்க வைத்த கட்சிகள். அதிகாரிகளை நேர்மையாக செயல்பட விடாமல் தடுத்த கட்சிகள். எனவே ஆட்சியிலிருந்து அ.தி.மு.க அகற்றப்பட வேண்டும். அந்த இடத்துக்கு தி.மு.க மீண்டும் வரக் கூடாது. இதற்கு மாற்றாக ஊழற்ற ஆட்சி அமைக்க,  கொள்கை அடிப்படையில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டவுடன் ம.தி.மு.க.வை உடைக்க முயற்சி செய்தார்கள். அதில் வெற்றிப் பெற முடியவில்லை. அந்த கட்சியிலிருந்து ஒரு சில மாவட்ட செயலாளர்களை  இணைத்துக் கொண்டு மதிமுக அழிந்து போய்விட்டது என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். வைகோ மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரையும் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னது அகம்பாவமான கருத்து. ம.தி.மு.க அழிந்து போகவில்லை. தேமுதிகவை இணைக்க தி.மு.கவினர் முயற்சித்தார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழுந்ததாக சொன்னார். ஆனால் பழம் நழுவி பாலில் விழவில்லை. மாறாக மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க இணைந்து விட்டது. தே.மு.தி.கவை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது. இப்போது சந்திரகுமார் உள்ளிட்ட சிலரை பிடித்துள்ளது.  இதற்கு பின்னாலிருந்து இயக்குவது திமுக என்பது அப்பட்டமான உண்மை. திமுக முயற்சி ஒருபோதும் வெற்றிப் பெறாது.  சந்திரகுமார் போன்றவர்கள் அந்த வலையில சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்து வந்தால் அவர்களுக்கு நல்லது. இதனால் அக்கட்சி பலவீனமடையாது; பலம் அடையும். இதற்கு எடுத்துக்காட்டு மாமண்டூர் மாநாட்டில் நிரூபிக்கப்படும். திமு.க, அ.தி.முக. தோற்கடிக்கப்பட்டு தே.மு.தி.க, மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்றார்.

தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்து சமீபத்தில் அ.தி.மு.கவில் இணைந்த மைக்கேல் ராயப்பன், "விஜயகாந்துக்கு சரியான அரசியல் முடிவு எடுக்கத் தெரியாது. இதனால்தான் நான் உள்பட 8 எம்.எல்.ஏ.க்களும் அம்மா வழியைப் பின்பற்றினோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் தயவால் தான் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றனர். மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால் தற்போது தே.மு.தி.கவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளவர்கள், அ.தி.மு.க.வில் சேர்வதுதான் சிறந்த முடிவு" என்றார்.

-எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ