Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளியூர் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார் ஜெயலலிதா?

சென்னை தீவுத்திடலில் வரும் 9ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, வெளியூர்களுக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. என்றாலும், மொத்தம் உள்ள 234 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே களம் இறங்குகிறது. சென்னையில் வரும் 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தீவுத்திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும், பொதுக்கூட்ட மேடையிலேயே சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.  மேலும், அதே மேடையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சென்னை தீவுத்திடல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் நேரடி வீடியோ காட்சிகள், உடனடியாக சென்னையில் உள்ள 21 தொகுதிகளிலும் மக்கள் மத்தியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, செயற்கைகோள் வசதியுடன் டிஜிட்டல் திரை பொருத்தப்பட்ட 75 பிரசார வேன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசார வேன்கள் 21 தொகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு, ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.

மேலும், ஜெயலலிதா பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்வதற்கு வசதியாக பிரத்யேக வாகனமும் தயார் செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் வடிவமைக் கப்பட்ட இந்த சொகுசு வேன் ஜெயலலிதா பார்வையிடுவதற்காக நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த சொகுசு வேனில் தான் அவர் தமிழகம் முழுவதும் சென்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, அந்த மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர்.

வெளியூர் பிரசாரத்திற்கு ஜெயலலிதா ஆகாய மார்க்கமாகவே செல்ல இருக்கிறார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் ஜெயலலிதா செல்ல இருக்கிறார். இதற்காக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்துவிட்டால், பயணத்தொடக்கம் மற்றும் முடிவில் தேர்தல் கமிஷனால் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு அவர் பிரசார வேனில் பயணிக்கிறார். வழிநெடுக மக்கள் மத்தியில் அவர் வாக்கு சேகரித்தபடி செல்ல இருக்கிறார். ஜெயலலிதாவின் பிரசார பயணத்தை தொடர்ந்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ