Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் மாறும்ங்க, நம்பிக்கையில் காத்திருக்கும் ர.ர-க்கள்!

 

ட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் சூழலில், அ.தி.மு.க 227 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. பிற கட்சிகளைப் போல அல்லாமல், அ.தி.மு.க.வில் மட்டுமே கட்சியின் அடிமட்டத் தொண்டனும் வேட்பாளராகும் வாய்ப்பு இருக்கிறது. அங்கே, ’கொடிப்பிடிப்பவனும் கோட்டைக்குள் செல்ல முடியும்’ என்று கட்சியினர் பெருமையாக பேசிக் கொள்வது வழக்கம். அதே சம்யம் அ.தி.மு.க.வில் மட்டுமே தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர், அடுத்த சில நாட்களிலேயே தூக்கி அடிக்கப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவது நடக்கக் கூடும்.

இந்த நிலையில், இந்த முறை அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் புதிய நபர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட சிலரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்களில் பலர் நிராகரிக்கப்பட்ட நிலையும் அரங்கேறி இருக்கிறது. கட்சியால் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற பலர் தங்களாலேயே நம்ப முடியாத நிலையில் இருகிறார்கள். அ.தி.மு.க.வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தனக்காக வாக்கு சேகரிக்கும் சூழலில் கூட, தனக்கு பதிலாக வேறொருவர் பெயர் அறிவிக்கப்பட்டு அந்த பிறருக்காக வாக்கு சேகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். தற்போது, அருப்புக்கோட்டை தொகுதியில் அந்த நிலை உருவாகி விட்டது. அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முத்துராஜாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக வைகைசெல்வனை வேட்பாளராக அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
 

இந்த நிலையில், இன்னும் கூட வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்படக் கூடும் என்கிற நம்பிக்கை அ.தி.மு.க.வினருக்கு அசைக்க முடியாமல் உருவாகி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, முழு பட்டியலையுமே மாற்றி தமிழகத்தையே அதிர வைத்த ஜெயலலிதா, இந்த முறையும் அப்படி செய்து விட மாட்டாரா என்கிற ஏக்கத்துடன் ‘சீட்’ கிடைக்காத பலரும் சென்னையில் தங்கி இருக்கிறார்கள். சென்னையில் குவிந்துள்ள வெளியூர் கரைவேட்டிகள் பலரும் திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள லாட்ஜுகளில் தங்கி இருக்கிறார்கள். பகல் முழுவதும் கட்சித் தலைமை அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் இவர்கள் ஏதாவது ’நல்ல தகவல்” வந்து விடாதா என ஏங்கித் தவிக்கிறார்கள். இது பற்றி ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சியினர் சிலரிடம் பேசியபோது, ‘’நாங்க வெளியூர்களில் இருந்து வந்திருக்கோம். கட்சிக்காக பல போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கோம். ஆனால், கட்சிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவருக்கு எங்க தொகுதியில் சீட் குடுத்திருக்காங்க. அம்மாவுக்கு நாங்க புகார் அனுப்பி இருக்கோம். அதைப் பார்த்ததும் அம்மா அவரை நீக்கி விட்டு எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க’’ என நம்பிக்கையோடு சொல்றார்கள்.

நம்பிக்கை தானே வாழ்க்கை! அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சொல்வது இதைத்தானோ?!

-ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ