Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நலமாக இருக்கிறாரா விஜயகாந்த்?' -நெருக்கடியிலும் தலைகாட்டாத மர்மம்

மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது தே.மு.தி.க. சட்டமன்றத்தின் தே.மு.தி.கவின் முகமாக ஆளுங்கட்சியை அதிர வைத்த சந்திரகுமார், இப்போது விஜயகாந்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்.

'கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அணி மாறலாம்' என முன்கூட்டியே கணித்த பிரேமலதா, அதற்காக வருத்தப்படவும் இல்லை. கடந்த காலங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரச்னைக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தோம் எனச் சொல்லிக் கொண்டு பிரிந்தபோது, அவர்களை உதிர்ந்த ரோமங்கள் என வர்ணித்தார் பிரேமலதா.

கட்சியைப் பொறுத்தவரையில் கேப்டன் மட்டும்தான். மற்றவர்கள்,  தலைமையின் செயலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற ஒற்றை அஜென்டாதான் பிரதானம். அதை மீறி செயல்படுபவர்கள் கட்சியில் நீடித்ததும் இல்லை. இப்போது வெளியேறிய அதிருப்தி அணியும், " தி.மு.க கூட்டணியைத்தான் கேப்டன் விரும்பினார். மாறாக, மக்கள் நலக் கூட்டணிக்கு தே.மு.தி.கவைக் கொண்டு சென்றது பிரேமலதா மட்டும்தான். கட்சி சீரழிவுக்கும் அவர்தான் பிரதான காரணம்" என பகிரங்கமாக பேட்டியளித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. வரக் கூடிய பிரசாரக் கூட்டங்களில் இவர்களை விமர்சித்து பிரேமலதா பேசக் கூடும்.தே.மு.தி.கவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் பற்றிய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டாலும், நேரடியாக விளக்கம் அளிக்க முயற்சி செய்யவில்லை. கடந்தகாலங்களில் அவ்வாறு விளக்கமளிக்கும் செயலில் விஜயகாந்த் ஈடுபட்டதில்லை என்றாலும், 'தேர்தல் பிரசாரத்திற்குக் கூட செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது ஏன்?' என்ற கேள்வி தே.மு.தி.க வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.

ஈரோடு, சேலம் உள்பட பல மாவட்டங்களுக்கு பிரேமலதாவே பிரசாரத்திற்குச் செல்கிறார். விஜயகாந்த்தைவிட அவர் பேசும் தெளிவான அரசியல் பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் கட்சி நிர்வாகி ஒருவர், " தேர்தல் அரசியல் என்று வரும்போது கேப்டனின் வருகையையே பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் நெருங்கும் வரையில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தால், முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு எப்படி ஓட்டு வாங்க முடியும்? எங்கப்பா உங்கள் சி.எம். வேட்பாளர்? என எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டால், என்ன பதில் சொல்வது? என்றுதான் தெரியவில்லை. இப்போது வரையில் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொது இடத்திற்கு விஜயகாந்த் வரும்போது விபரீதம் நடந்துவிடக் கூடாது எனவும் பயப்படுகிறோம்" என்றார்.

தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ பார்த்திபனிடம் இதுபற்றிக் கேட்டபோது, " கடவுள் அருளால் கேப்டன் நன்றாக இருக்க வேண்டும். நலம் பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். கேப்டனையும் காப்பாற்ற வேண்டும். கட்சித் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், கட்சியின் எதிர்காலம் காணாமல் போய்விடும்" என்றார் ஆதங்கத்தோடு.

'கட்சி நிர்வாகிகளைக்கூட சந்திக்க முடியாத அளவுக்கு கேப்டனுக்கு என்னதான் பிரச்னை?' என்றோம் தே.மு.தி.க நிர்வாகி ஒருவரிடம். அவர் விவரித்த தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

"   முப்பது ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர். 2011-ம் ஆண்டிலேயே மது அருந்துவதை முழுமையாக நிறுத்திவிட்டார் கேப்டன். ஆனால், உடல் அளவில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. சிங்கப்பூரில் ரஜினிக்கு சிகிச்சை நடந்த அதே மருத்துவமனையில்தான் கேப்டனுக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சை கிட்னி தொடர்பானது.

அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தாக்கம் இப்போது வரையில் தொடர்கிறது. ஆரம்பகாலங்களில் மேடையில் பேசும்போதுகூட கோர்வையாக பேசியது கிடையாது. இப்போது வார்த்தைகளில் தடுமாற்றம் வருவதற்குக் காரணம், சிகிச்சையில் ஏற்பட்ட மாற்றம்தான். தவிர, கடந்த சில வாரங்களாக தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிரமப்படுகிறார். கூடவே, சைனஸ் தொல்லை வேறு. அதனால்தான் சரிவர பேச முடியாமல் தவிக்கிறார். முழு ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்திவிட்டதால், கட்சி கூட்டங்களில் பிரேமலதா பேசி வருகிறார். இது முன்கூட்டியே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடம் பேசி வைத்துக் கொண்ட ஏற்பாடுதான். இப்போது கேப்டன் ஓரளவுக்கு தேறி வருகிறார்.

வருகிற 10-ம் தேதி மாமண்டூர், ஆண்டாள் அழகர் கல்லூரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கேப்டன் பேச இருக்கிறார். பழைய கேப்டனை அங்கே பார்க்க முடியும் என நாங்கள் நம்பவில்லை.  அதை அப்பட்டமாக வெளிக்காட்டினால், மக்கள் மத்தியில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வாக்குகளைப் பெற முடியுமா என்ற சந்தேகம் இருப்பதால்தான், பிரேமலதா களத்திற்குச் செல்கிறார்" என்றார் உண்மையை நிலையை பிரதிபலித்தபடி.

'கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை. கிங்காக இருக்கவே விரும்புகிறேன்' என சினிமா பாணியில் டயலாக் பேசினாலும், ஒரு முதலமைச்சர் வேட்பாளர் இப்படி முடங்கிக் கிடப்பது சரியானதுதானா?

-ஆ.விஜயானந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close