Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகாசி டூ சென்னை - விற்பனையின்றி முடங்கிய கட்சிக் கொடிகள்!

 

தேர்தல் தேதி அறிவித்த பின்னும் கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் முழுமையாகாத காரணத்தால் சிவகாசியில் இருந்து தன் 'பயணத்தை' தொடங்கியிருக்கும் பல வண்ண கட்சிக் கொடிகள் விற்பனைக்கு வராமல் அப்படியே கிடங்குகளில் முடங்கிக் கிடக்கிறது.

நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள், தோரணக் கொடிகள், ஸ்டிக்கர் கொடிகள், சின்னங்கள் பொறித்த துணிப்பைகள், பேட்ஜ்கள் என்ற பல விதமான தயாரிப்புகள்  இருந்த இடத்திலேயே இருப்பதுதான் வணிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் பாரிமுனை பகுதியில்தான் அதிகளவு இப்படியான தேர்தல் காலத்துக்கான சமாச்சாரங்கள் விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன. பாரிமுனைக்கு அடுத்தபடியாக சென்னையில் தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய இடங்களைச்  சொல்லலாம். தேர்தல் ஆணையத்தின் நியாயமான கெடுபிடியால் கொடி, தோரணங்களை வாங்குகின்ற கட்சியினர் மட்டுமல்லாது, விற்பனையாளர்களும் நொந்து போயுள்ளதாக வேதனைக் குரல்கள் எழவே சென்னையின் விற்பனை மையங்களுக்கு நேரில் சென்று விசாரித்தேன். சொல்லி வைத்தது போல் அனைத்து வணிகர்களுமே சொன்ன ஒரு வார்த்தை 'எங்க பேர் விபரம் எதையும் போட்டு எங்களைச் சிக்கலில் மாட்டி விட்டுடாதீங்க' என்பதுதான்.

தி.நகர் ஏரியா வணிகர்கள் பேசியதிலிருந்து, "பொதுவாக அதிகளவு செவ்வக கொடிகள்தான் எங்களிடம் விற்பனையாகும். அது விலையும் கூடுதல். அதிமுகவினர்தான் அந்த மாதிரியான செவ்வக வடிவ கொடிகளை வாங்குவார்கள் என்பதால் அவர்களை நம்பி அது மாதிரியான மாடல்களை அதிகளவில் வாங்கி அதை பாதுகாக்க தனியாக கிடங்குகளை வாடகைக்குப் பிடித்து வைப்போம். எல்லாமே அதிகபட்சம் நாற்பது நாள் கூத்துதான். இந்த முறை அது கூட இல்லை என்பதால் எவ்வளவு கொடிகளும், பேட்ஜ்களும் விற்கும் என்பதே தெரியவில்லை" என்றனர்.

பாரிமுனை வணிகர்கள் கூறுகையில், "அப்போதெல்லாம் இது மாதிரியான கொடிகளுக்கு நாங்கள் சிவகாசியில் ஆர்டர் கொடுக்கும் போதே தயாரிப்புக்கான அட்வான்சும் கொடுத்து விடுவோம். இந்த முறைதான் அதாவது ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே தேர்தலின் போக்கு மாற ஆரம்பித்ததால் நாங்கள் அட்வான்ஸ் ஏதும் கொடுக்காமல் நிறுத்தி விட்டோம். எங்கள் தரப்பிலிருந்து அட்வான்ஸ் போகாததால் அவர்களும் தங்களின் தயாரிப்பை அப்படியே நிறுத்தி வைத்து விட்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நாங்களும் மெயின் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் பழைய கையிருப்பு கொடிகளை வைத்து ஒப்பேத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம். கம்யூனிஸ்ட்டுகள் எப்போதாவதுதான் அபூர்வமாக கொடிகளை வாங்குவார்கள் என்பதால் அது எங்களை பாதிக்காது.

சரத்குமார், வேல்முருகன், செ.கு.தமிழரசன், பூவைஜெகன் மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் வரிசையில் வருகிற சிறு கட்சிகளால்தான் எங்கள் பிழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.
இவர்களுக்கென்று தனியாக சின்னங்கள் ஏதும் இல்லாததால் இவர்கள் யாரோடு கூட்டணி வைத்தாலும் அந்த கட்சிக் கொடியோடு சேர்த்து இவர்களின் தலையை அங்கே பொருத்தி கொடிகள், பேட்ஜ்கள் என்று ஆர்டர் கொடுப்பார்கள். இன்றைய தேதி வரையில் இவர்களின் கூட்டணித் தலைமை எதுவென்று முடிவாகாததால் அந்த மாதிரியான கொடிகள் இந்த நிமிடம் வரையில் தயாரிக்கப்படவில்லை. அதே போல் வாசனின் புது சின்னமான நான்கு தென்னைமரம் கொடியைக் கொடுங்கள் என்று கேட்டால் நாங்கள் காலி. இந்த முறை எங்களைக் காப்பாற்ற அவர் ஏதாவது கூட்டணிச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்" என்றனர்.

திருவல்லிக்கேணி ஏரியா வணிகர்களிடம் பேசும்போது, "தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த முறை அதிகளவு கெடுபிடிகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக ஒரு மீட்டிங் போட்டு எங்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். அதன்படி நாங்களும் சிங்கிள் பேட்ஜ் விற்றால் கூட அதை நாங்கள் விற்பனைக் கணக்கில் கொண்டு வந்து விடுகிறோம்.  ஆனால், 'சிங்கிள் பேட்ஜ் விற்பது சாத்தியமா? நீங்கள் குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேட்ஜாவது விற்றிருப்பீர்களே, அதற்கான பில்லைக் கொண்டு வந்து தேர்தல் அதிகாரியைப் பாருங்கள்' என்று வெறுப்பேற்றுகின்றனர். நாங்கள் என்ன செய்யட்டும்" என்கின்றனர் வேதனையுடன்.

கொடிகள், தோரணங்கள் மட்டுமல்லாமல் பேட்ஜ் போன்ற தேர்தல் நேரத்து விற்பனைப் பொருட்களும் தொழில் நகரமான சிவகாசியிலிருந்துதான் சென்னைக்கும் தமிழகத்தின் பிற மாவட்ட தலை நகரங்களுக்கும் வணிக ரீதியான, வாழ்வாதாரப் பயணமாக இருந்து வந்தது. இன்றைய அரசியல் பரமபத ஆட்டத்தில் சிவகாசி மக்களின் அடிவயிற்றில் பட்டாசு மருந்துகள் தானாகவே உற்பத்தியானாலும் வியப்பில்லை.

  -ந.பா.சேதுராமன்

படங்கள்:
ப.சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ