Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பச்சைக் குத்தி சீட் வாங்கினார் பச்சைமால்... குமரி அ.தி.மு.க.வின் 'ஹாட் டாக்'!

டந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் பச்சைமால். அப்போதைய மாவட்ட செயலாளரும் அவர் தான். தேர்தல் வெற்றிக்கு பின் பச்சைமாலுக்கு உடனே வனத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. அதன்பின், 2013 ஆம் ஆண்டு பச்சைமாலிடம் இருந்த வனத்துறை இலாகா மாற்றப்பட்டு, அவருகு தொழிலாளர் நலத்துறை கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

உடனே நாகர்கோவில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மாவட்ட செயலாளர் ஆனார். அவரையும் ஒரு வாரத்தில் ஜெயலலிதா அப்பதவியில் இருந்து தூக்கினார். சில மாதம் தமிழ்மகன் உசேன் பொறுப்பாளராக இருந்தார். அதற்கு பின்னர், குமரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கிழக்கிற்கு சிவ.செல்வராஜனும், மேற்கிற்கு ஜான் தங்கமும் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே பச்சைமாலின் ஆதரவாளர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டபோது, குமரியில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று அமைச்சரானார். அப்போது, அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதன் பிறகு தான் பச்சைமாலுக்கு சோதனை காலம் தொடங்கியது என கூறலாம். அவரிடம் இருந்த தொழிலாளர் நலத்துறையையும் ஜெயலலிதா பறித்துவிட்டு பச்சைமாலை 'டம்மி' ஆக்கினார்.

மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் வந்தவுடன், பச்சைமாலின் மவுசு மேலும் இறங்கியது. அதை தொடர்ந்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பச்சைமாலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி குமரி அ.தி.மு.க.வினரிடம் எழுந்தது. இந்நிலையில், தனது செல்வாக்கை தக்க வைக்க நினைத்த பச்சைமால், கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, தனது வீட்டில் ஜெயலலிதா படத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் முதல் நபராக பச்சைமால், ஜெயலலிதா உருவத்தை தனது வலது கையில் பச்சை குத்திக் கொண்டார். அவரை தொடர்ந்து, சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தி கொண்டனர். இதை தொடர்ந்து, பச்சைமாலுக்கு சீட் கிடைக்காது என்று கூறி வந்த அ.தி.மு.க.வினரே, இவருக்கு இந்த முறை சீட் நிச்சயம் கிடைக்கும் என்று பேசத் தொடங்கினர். அதேபோல், குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பச்சைமாலை ஜெயலலிதா தற்போது அறிவித்து உள்ளார்.

ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டு குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன பச்சைமால், 2006-ம் ஆண்டு தேர்தலில் அதே குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலிடம் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் குளச்சல் தொகுதி வேட்பாளராக பச்சைமால் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், ''அம்மாவின் திருவுருவத்தை பச்சைக் குத்தியதால் தான், ஓரங்கட்டபட்ட பச்சைமாலுக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது'' என்பது குமரி அ.தி.மு.க.வினரின் 'டாக்'காக உள்ளது.

- த.ராம்
படம்:
ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ