Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றும் மர்மம் இதுதான்..! - மீண்டும் தலையெடுத்த திவாகரன்

'எப்போது யார் மாற்றப்படுவார்கள்?' என 24 மணிநேரமும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள். போயஸ் கார்டனுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தின் ரகசியம் புரியாமலும் அவர்கள் தவிக்கிறார்கள்.


அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியான நாள்முதல்,  தொடர்ந்து வேட்பாளர்களை மாற்றிக் கொண்டு வருகிறார் ஜெயலலிதா. நேற்று ஒரே நாளில் 13 வேட்பாளர்களை மாற்றியமைத்தார் ஜெயலலிதா. இத்தனைக்கும், சீட் அறிவிக்கப்பட்டவர்களில் பலர் பூச்செண்டுகளுடன் கார்டன் வாசலில் காத்துக் கிடந்தனர். ஜெயலலிதாவிடம் பூங்கொத்து தரலாம் என்று ஆவலுடன் போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவர்களிடமிருந்து பூங்கொத்தை பெற்றுக்கொண்டனர். போயஸ்கார்டனின் ஃபேக்ஸ் மிஷின், பேஸ்&புக் போன்ற வலைதளங்களில் காலை முதல் நள்ளிரவு வரை புகார் கடிதங்கள் குவிந்தவண்ணம் இருந்தன. ஜெயலலிதாவும் அவற்றை கவனமாக பரிசீலித்து, ஏப்ரல் 4&ம் தேதி மத்தியம் வரை 13 பேர்களை மாற்றியுள்ளார்.  'வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 15 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. புதியதாக கூட்டணிக்கு ஒரிரு கட்சியினர் வர இருக்கிறார்கள். தனிப்பட்டபுகார்கள் தவிர, இந்தமாதிரியான பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் லிஸ்டில் ஜரூராக களையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதுவரை பொறுங்கள். எல்லாம் முடிந்ததும், உங்களுக்கு அழைப்பு வரும். அப்போது வாருங்கள்' எனத் திருப்பி அனுப்பப்பட்டனர். 'அம்மாவிடம் உண்மையிலேயே பூங்கொத்து கொடுக்கப் போவது யார்? ' என்ற கேள்விகளோடு கலைந்தனர் வேட்பாளர்கள். 

"கார்டனில் நடக்கும் அதிரடிகளின் ரகசியம் சாதாரணத் தொண்டனுக்குப் புரியாமல் இருக்கலாம். வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் தம்பி திவாகரன் சாதுர்யமாக விளையாடுகிறார். ஓ.எஸ்.மணியன், வைரமுத்து ஆகியோருக்கு கிடைத்திருக்கும் எம்.எல்.ஏ சீட்டுகளின் பின்னணியில் திவாரகன் இருக்கிறார். இந்தத் தேர்தலிலும் சுந்தரக்கோட்டைதான் ராஜ்ஜியம்தான் நடக்கிறது" என முன்னோட்டம் கொடுத்துவிட்டுப் பேசினார் அ.தி.மு.கவின் சீனியர் நிர்வாகி ஒருவர். 

"கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டு, போலீஸ் நடவடிக்கைக்கு ஆளான பிறகு எந்த விஷயத்திலும் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார் திவாகரன். தேர்தல் நெருக்கத்தில் அவருடைய சுந்தரக்கோட்டை வீட்டுக்கு சென்னையிலிருந்து சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் வந்து போக ஆரம்பித்தனர். மற்றபடி, உள்ளூர் கட்சிக்காரர்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை. வெளியாட்கள் காரில் அந்த வீட்டு வளாகத்திற்குள் போனால், மற்றவர்கள் அவர்களை பார்க்கவே முடியாது. இந்தமாதிரிதான், வேட்பாளர் லிஸ்ட் இந்த வீட்டில் ரெடியானது என்றே சொல்கிறவர்களும் உண்டு. திவாகரன் யாரையும் நேரில் சந்திப்பதில்லை. ஆனால், அவரது எண்ண ஒட்டத்தை தெரிந்த நண்பர்கள், 'இந்தமுறை நாம் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும். அதன்பிறகு நடக்க வேண்டியவை நல்லபடியாக நடக்கும்' என்று சொல்லிவந்தனர். எந்த அர்த்தத்தில் இப்படி பொடி வைத்துப் பேசுகிறார்கள் என்பது மன்னார்குடியில் உள்ள கட்சியினருக்கே விளங்கவில்லை. வேட்பாளர் பட்டியலை அதிரடியாக மாற்றிக் கொண்டே இருப்பது சென்டிமென்டாக வெற்றியைக் கொடுக்கும் என்பதால், தனக்கு பக்கத்தில் மாற்று வேட்பாளர் பட்டியலையும் தயாராகவே வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அவர் கையில் இருக்கும் அந்தப் பட்டியல் முழுக்க மன்னார்குடி வாரிசுகளின் திருவிளையாடல்கள்தான்" என்றவர், 

" திவாகரனின் முதல் வெற்றி தொடங்கியது திருமயத்தில்தான். எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைரமுத்து, அடிப்படை உறுப்பினரில் இருந்து நேரடியாக மாவட்டச் செயலாளராக ஆனவர். இதற்குக் காரணம். திவாகரனின் ஆசிதான். கடந்த முறை எம்.எல்.ஏவாகி வெற்றி பெற்றாலும், திவாகரன் தொடர்பால், கட்டம் கட்டி வைக்கப்பட்டார் வைரமுத்து. இன்றைக்கு கார்டனில் சமையல் வேலை பார்ப்பவர்கள் பலர் வைரமுத்துவின் ஆட்கள்தான். எந்தப் பதவியும் இல்லாமல் முடங்கிக் கிடந்த வைரமுத்துவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடித்தது. அ.தி.மு.க விவசாய அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் பின்னால் அமரும் பத்து பேரில் ஒருவராக வைரமுத்து மாறிவிட்டார். இந்நிலையில், காலியான புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த விஜயபாஸ்கர் இடத்தில் வைரமுத்துதான் அமரவைக்கப்பட்டிருக்கிறார். இப்போது திருமயம் வேட்பாளரும் வைரமுத்துதான். திவகாரன் கை ஒங்கிதற்கான அறிகுறிதான் வைரமுத்துவிற்கு அடுத்தடுத்த பதவிகள் கிடைப்பது! 

மன்னார்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுதா அன்புச் செல்வனை மாற்றிவிட்டு, எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இவர் திவாகரனின் வலதுகரம் என்பது ஊருக்கே தெரியும். திவாகரன் மீது கார்டன் நடவடிக்கை எடுத்த காலகட்டத்தில்தான் கொஞ்சம் அடக்கி வாசித்தார் காமராஜ். அடுத்து, வேதாரண்யத்திற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.மணியன், திவாகரனோடு முன்பு நெருக்கமாக இருந்த காரணத்தால்தான் கட்டம் கட்டப்பட்டார். இந்த நிலையில், முதல் வேட்பாளர் லிஸ்டில் நாகை மாவட்டச் செயலாளர் ஜெயபாலுக்கு சீட் கொடுத்துவிட்டு, அதை மாற்றிவிட்டு எம்.எல்.ஏ சீட்டும், மா.செ பொறுப்பும் மணியனுக்கு கிடைக்கிறது. இதற்கெல்லாம் பின்னணியில் திவாகரன் தவிர வேறு யார் இருக்க முடியும்? சசிகலாவின் உறவினரான டாக்டர்.வெங்கடேஷின் தீவிர ஆதரவாளரான வைகைச்செல்வனும் இரண்டாவது லிஸ்டில் அருப்புக் கோட்டை தொகுதியின் வேட்பாளராகியிருக்கிறார். 'வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரையில், நாங்கள் நினைப்பது மட்டும்தான் நடக்கும்' என மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார் திவாகரன். சசிகலாசின் ஆசிர்வாதத்தோடு வேட்பாளர் தேர்வில் மன்னார்குடியின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறதுÕ எனச் சொல்லி முடித்தார் அவர். 

இதுபற்றி நம்மிடம் பேசிய திவாகரன் தரப்பினர், " அவர் எந்த தலையீடும் செய்யாமல் அவருடைய கல்லூரியை மட்டும் கவனித்து வருகிறார். புதிதாக மாற்றப்பட்ட வேட்பாளர்கள் கட்சியின் சீனியர்கள். மாற்று என்று வரும்போது அவர்களைத்தான் நியமிக்க முடியும். இது முழுக்க அம்மா எடுத்த முடிவு. இதில் எங்கே திவாகரன் வந்தார்? அவருடைய எதிரிகள் திட்டமிட்டு பரப்பும் தகவல் இது" என்கின்றனர். 

ஆ.விஜயானந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close