Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பல முன் மாதிரிகளை உருவாக்கிய தமிழக தேர்தல்!

2001-ம் ஆண்டு வரை நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல்களில் தமிழக மக்கள் ஏதாவது ஒரு கட்சியை தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வகையில்தான் தங்கள் வாக்குகளை அளித்து வந்தனர். முதன் முறையாக 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைந்தது. 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்த சுவராஸ்யமான விஷயங்களின் தொகுப்பு இது.

* தி.மு.க தலைவர் கருணாநிதி 11-வது முறையாக 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெருமை பெற்ற கருணாநிதி 5-வது முறையாக முதல்வர் ஆனவர் என்கிற சாதனையையும் 2006-ல் படைத்தார். 

* தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று வைகோ தனிக் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் ஆன நிலையில், 2006 சட்டசபைத் தேர்தலில்தான் ம.தி.மு.க. முதன்முறையாக வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

* 2006-ம் ஆண்டு தேர்தலில் அதுவரை இல்லாத அளவுக்கு பல முனை போட்டி ஏற்பட்டது. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி என்ற பலம் வாய்ந்த இரு அணிகளை தவிர, நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், பி.ஜே.பி மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் போட்டியிட்டன. நடிகர் விஜயகாந்த், கட்சி தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், விருத்தாசலம் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். பல தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பெற்று தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தார்கள்.

* நடிகர், நடிகைகள் அதிகமான அளவில் பிரசாரத்தில் குதித்ததும் இந்த தேர்தலில்தான். இலவச அறிவிப்புகள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளவுக்கு அதிகமாக அள்ளி வீசப்பட்டதும் அப்போதுதான்.

* ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் நடந்த 1991-ம் ஆண்டு தேர்தலை தவிர, எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வந்தது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் மற்ற கட்சிகள் வெற்றி பெற்று வந்தன. ஆனால் 2006-ம் ஆண்டு தேர்தலில் சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க அதிரடியாக கைப்பற்றி புதிய அத்தியாயத்தை எழுதியது. 

* திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், கருணாநிதியின் வாக்கிங் நண்பரான நாகநாதனை தோற்கடித்தார்.

* கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியான ஐ.என்.டி.யூ.சி வேட்பாளர் சின்னசாமி போட்டியிட்டு வென்றார். தமிழ்நாட்டிலேயே மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் (14 வாக்குகள்) வென்றவர் இவர்தான்.

* கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 தொகுதிகளை கைப்பற்றியது அ.தி.மு.க கூட்டணி.

* மதுரை கிழக்கு தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் நன்மாறன் 51 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

* வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை டி.ராமச்சந்திரன். (தளி தொகுதி)

* சென்னை மைலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் நடிகர் நெப்போலியனும், அ.தி.மு.க. சார்பில் நடிகர் எஸ்.வி.சேகரும் மோதியதில் நெப்போலியன் வீழ்ந்து போனார். 2001 சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நெப்போலியன். 

* ஆண்டிப்பட்டி தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா 2-வது முறையாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சீமானை விட 25 ஆயிரத்து 186 ஓட்டுகளை கூடுதலாக பெற்றார். சீமானுக்கு 48 ஆயிரத்து 741 ஓட்டுகள் கிடைத்தது. தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சந்திரன் 6 ஆயிரத்து 795 ஓட்டுகளை பெற்றார்.

* 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 130 பெண்கள் களத்தில் நின்றனர். இதில் 22 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்று வாகை சூடினார்கள். ஜெயலலிதா, பதர் சயீத், செல்வி ராமஜெயம், பிரேமா, தேன்மொழி, இளமதி சுப்பிரமணியன், சந்திரா ஆகிய 7 பேர் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் சங்கரி நாராயணன், அங்கயற்கண்ணி, பிரபாவதி, தமிழரசி, ராணி, டாக்டர் பூங்கோதை, கீதா ஜீவன், ஆகிய 7 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் காயத்ரி தேவி, டி.யசோதா, ராணி வெங்கடேசன் என மூன்று பேரும், பா.ம.க. சார்பில் சக்தி கமலம்மாளும், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஜி.லதா, கே.பாலபாரதி, பி.பத்மாவதி, லீமாரோஸ் என நான்கு பேரும் வெற்றி பெற்றனர். 

* கடலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட தேசிய கட்சியான பி.ஜே.பி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. புதிதாக தேர்தல் களத்தில் குதித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைவிட மிகக் குறைந்த வாக்குகளையே பி.ஜே.பி வாங்கியது.

* கடலூர் மாவட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (16,810) வென்றவர், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க.). குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற தி.வேல்முருகன் (பா.ம.க.).

* நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க கூட்டணி 3 இடங்களை கைப்பற்றி தனது பழைய செல்வாக்கை நிலை நாட்டியது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.- 3 தொகுதிகளிலும், தி.மு.க. -3 தொகுதிகளிலும் காங்கிரஸ் -2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபைத் தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. தஞ்சாவூர், கும்பகோணம் தொகுதிகளை தி.மு.க தக்க வைத்துக் கொண்டது. திருவோணம், திருவையாறு ஆகிய இடங்களை அ.தி.மு.க.விடமிருந்து தி.மு.க. கைப்பற்றியது. பட்டுக்கோட்டை தொகுதியை காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் தக்க வைத்தார். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். அ.தி.மு.க வேட்பாளர்கள் வலங்கைமான், திருவிடைமருதூர் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டனர். பாபநாசம், பேராவூரணி ஆகிய தொகுதிகளை காங்கிரஸிடமிருந்து அ.தி.மு.க கைப்பற்றியது.

* சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காரைக்குடியில் காங்கிரஸ், திருப்பத்தூர் மற்றும் இளையான்குடியில் தி.மு.க.வும், மானாமதுரையில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.
 
* ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

* திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை வென்றது. திருச்சி 1, 2, முசிறி, லால்குடி, உப்பிலியபுரம், திருவெறும்பூர், மருங்காபுரி ஆகிய 7 தொகுதிகளில் தி.மு.க.வும், தொட்டியம், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 6 தொகுதிகளிலும், ம.தி.மு.க. 2 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருச்சி 1 - அன்பில் த.பெரியசாமி, திருச்சி 2 - கே.என்.நேரு, முசிறி - என்.செல்வராஜ், திருவெறும்பூர் -கே.என்.சேகரன், உப்பிலியபுரம் ரா.ராணி, லால்குடி அ.சௌந்தரபாண்டியன், தொட்டியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் மு.பரஞ்சோதி ஸ்ரீரங்கத்திலும், மருங்காபுரியில் சி. சின்னசாமியும் வெற்றி பெற்றனர். 2001 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி 1, 2, திருவெறும்பூர் ஆகிய 3 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொண்ட தி.மு.க. அ.தி.மு.க.விடமிருந்து முசிறி, லால்குடி, உப்பிலியபுரம் தொகுதிகளையும் கைப்பற்றியது. இதேபோல் காங்கிரஸ் தொட்டியம் தொகுதியை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 121 பேரில் 22 பேரைத் தவிர, எஞ்சிய 99 பேரும் ‘டெபாசிட்’ இழந்தனர். டெபாசிட் இழந்த அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியைச் தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.
 
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. 2 அமைச்சர்கள் உள்பட எல்லோரும் தோற்றதால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்தது. ஆலந்தூர், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுபாக்கம், உத்தரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் உள்பட 9 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. ஆலந்தூரில் மாவட்ட தி.மு.க செயலாளர் தாமோ.அன்பரசன், தாம்பரத்தில் எஸ்.ஆர்.ராஜா, உத்தரமேரூரில் கே.சுந்தர், அச்சிறுபாக்கத்தில் சங்கரி நாராயணன், திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பா.ம.க. வேட்பாளர்கள் முறையே டி.மூர்த்தி, கே.ஆறுமுகம், சக்தி கமலம்மாள் ஆகியோரும், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் வேட்பாளர்கள் காயத்ரிதேவி, டி.யசோதா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
 
* கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க 4 இடங்களிலும், பா.ம.க 2 இடங்களிலும், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்டவை தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. கடந்த 2004-ம் ஆண்டு எம்.பி தேர்தலில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி இதே கூட்டணி சார்பில் 1.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு 2-வது முறையாக தோற்றுப் போனார். 

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஒசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒசூர், தளி மற்றும் காவேரிப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 9 வேட்பாளர்களும், கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் தலா 11 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் ஒசூரில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், காவேரிப்பட்டினத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டி.ஏ.மேகநாதன், கிருஷ்ணகிரியில் தி.மு.க. வேட்பாளர் டி.செங்குட்டுவன் வெற்றி பெற்றனர்.

* விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில், தி.மு.க கூட்டணி 9 தொகுதிகளில் வென்றது. திண்டிவனம், திருநாவலூர், வானூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 உறுப்பினர்களில் 6 பேர் புது முகங்கள். திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தி.மு.க சார்பில் கீதா ஜீவன், விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் பி.சின்னப்பன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் பி.மோகன், கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எல்.ராதாகிருஷ்ணன், சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராணி வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மட்டுமே சட்டசபைக்கு பழைய முகம். இவர், 2001-ம் ஆண்டு முதல் திருச்செந்தூர் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். மற்ற 6 உறுப்பினர்களும் சட்டசபைக்கு புதுசு.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மொத்தமுள்ள 7 தொகுதிகளில் நாகர்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில், ம.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ரத்தினராஜ் போட்டியிட்டார்.

* கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருவட்டார் தொகுதி வேட்பாளர் பி.சி.என்.திலக்குமார், விளவங்கோடு தொகுதி வேட்பாளர் பிராங்கிளின், கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் குமாரதாஸ் ஆகியோர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ