Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜோதிமணி தனித்தே போட்டியிடட்டும்...! -'கிரீன் சிக்னல்' காட்டும் குஷ்பு

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தப் பட்டியலில் அரவக்குறிச்சி இல்லாததால் கொந்தளித்துப் போயிருக்கிறார் கரூர் ஜோதிமணி.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், " தி.மு.க அணியில் எங்களுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளால் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் கேட்ட தொகுதிகளை கலைஞர் ஒதுக்கியிருக்கிறார்" என சந்தோஷப்பட்டார். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரவக்குறிச்சி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணியை, காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை. அரவக்குறிச்சி தொகுதியை தி.மு.கவே எடுத்துக் கொண்டது. இதனை ஜோதிமணி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட நம்மிடம் பேசிய ஜோதிமணி, " தலைமையின் அனுமதியோடுதான் அரவக்குறிச்சி மக்களை சந்தித்து வருகிறேன். எனக்கு இந்தத் தொகுதியை தி.மு.க கூட்டணி ஒதுக்கும். பட்டியல் வெளியான பிறகு விரிவாக பேசுகிறேன்" என்றார். ஆனால், பட்டியலில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ந்துபோன ஜோதிமணி, " நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நேற்றுகூட தொகுதி மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். இப்படிச் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை" என்றார் ஆவேசமாக.

ஜோதிமணியின் அதிரடி முடிவு குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, " தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகளையும், நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என முன்பே பேசி முடிவு செய்துவிட்டோம். ஜோதிமணி கேட்கும் தொகுதியில் பழனிச்சாமி என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தலைமையின் முடிவுக்கு எதிராக தனித்து போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக தனித்துப் போட்டியிடட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார் நிதானமாக.

வழக்கமாக, சீட் பங்கீட்டின்போது காங்கிரஸின் மூத்த தலைவர்கள்தான் கோஷ்டி சண்டையில் வேட்டியைக் கிழித்துக் கொள்வார்கள். இப்போது தலைவர்கள் அமைதியாக இருக்க, தனி ஒருவர் போர்க்கொடி உயர்த்தியது காங்கிரஸ் வரலாற்றில் அதிசயம்தான்.

ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ