Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழக காங்கிரஸை நம்பவில்லை... ராகுல் காந்தியை நம்புகிறேன்!‍' - மனம் தளராத ஜோதிமணி

 

 ப்போது யார் யாருடன் கூட்டணி என்று தெரியாது, ஏன் தேர்தல் தேதி கூட அறிவிக்கப்படவில்லை. சொல்லப்போனால், தமிழகத்தில் முதல் நபராக தேர்தல் வேலையை துவக்கியவர்  ஜோதிமணி.
வீதி வீதியாக பிரசாரம் சென்றார். வயல்வெளிகள், தேநீர் கடைகள் என மக்கள் கூடிய இடங்களில் எல்லாம், அவர்களுடன் உரையாடினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், கட்சிகள் தாண்டி அவருக்கு ஆதரவு கரம் நீண்டது.  மாற்று கட்சியினரும் அவரது வேகத்தை கண்டு வியந்தார்கள், பாராட்டினார்கள். சமூக வலைத்தளங்களிலும் பல லைக்குளை அள்ளி குவித்தார். ஆனால், ஒரு நல்ல திரைப்படத்திற்கு, மோசமான கிளைமாக்ஸ் இருப்பது போல,  தொகுதி உடன்படிக்கையில் அவர் சார்ந்த கட்சிக்கு தொகுதியே ஒதுக்கப்படவில்லை.


இந்நிலையில் ஜோதிமணியின் ரியாக்‌ஷன் என்பதை அறிய அவரிடம் பேசினோம்.


நீங்கள் எந்த நம்பிக்கையில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவதற்கு முன்பே, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினீர்கள்...?

தயவு செய்து, இதை தேர்தல் பிரசாரமாக சுருக்கி பார்க்காதீர்கள். இந்த தலைமுறை இளைஞர்கள், பெரும்பாலான மக்கள் தேர்தல் அரசியலின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மக்களிடம் கை கால்களை ஆட்டி, வாக்கை பெற முயற்சிப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இந்த நடைமுறைகளால் மக்கள்,  அரசியல் மீதே நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அரசியல் மீதான நம்பிக்கையை மீட்க, மக்களுக்கு காங்கிரஸ் மீது, இந்த ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை ஏற்படுத்தும் களமாகதான் நான் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த பல மாதங்களாக, மக்களுடன் நீண்ட உரையாடலை நடத்தினேன். அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றேன். என் பிரசாரத்தை முன் எடுத்ததே எளிமையான மக்கள்தான்.

எளிமையான அரசியலை மக்களிடம் முன் வைப்பதுதான் என் நோக்கம். என் தலைவர் ராகுல் காந்தியும் இதைதான் விரும்பினார்.

அதுமட்டுமல்லாமல்,  நான் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன் மாநில தலைவர் இளங்கோவனிடம் முன் அனுமதியையும், வாழ்த்தையும் பெற்று விட்டே கிளம்பினேன். அப்போதெல்லாம், அரவக்குறிச்சி தொகுதியை பெற்றுவிடலாம் என்று மிகுந்த நம்பிக்கை அளித்த இளங்கோவன், பின்னர்  திமுகவை சேர்ந்த கே. சி.பழனிசாமிக்கு ஆதரவாக நடந்து கொண்டு,  இந்த தொகுதியை விட்டு கொடுத்துள்ளார். இது மட்டுமல்ல காங்கிரஸ் போட்டியிட்டு வெல்லக் கூடிய எந்த தொகுதியையும், தமிழக தலைவர் கேட்டுப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் மீது வைக்கிறேன். 

ராகுலிடம் பேசினீர்களா...?

கடந்த இரண்டு நாட்களாக தமிழக தலைவர்களுடன்  ராகுல் காந்தி, இந்த தொகுதி விஷயத்தில் பேசிவருகிறார். ஆனால், ராகுல் காந்தி தலையீட்டிற்கும் பின்பு கூட, இந்த தொகுதியை பெறுவதில், இளங்கோவன் எந்த அழுத்தத்தையும் தரவில்லை.

உங்களுக்கு கட்சியை தாண்டி, அனைத்து தலைவர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறது... திமுக தலைமையிடம் நேரடியாக பேசுவீர்களா...?

எனக்கு அந்த அளவிற்கு பதவி வெறியெல்லாம் இல்லை. நான் இன்னும் காங்கிரஸில்தான் இருக்கிறேன்.  அவர்கள்தான் பேச வேண்டும்.

சுயேட்சையாக போட்டி இடுவீர்களா...?

இன்னும் நாட்கள் இருக்கிறது. அவசியமான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன். நான் என் தலைவர் ராகுலை நம்புகிறேன். நான் அரவக்குறிச்சி தொகுதியில் என் பிரசாரத்தை எந்த காரணத்திற்காகவும் நிறுத்த மாட்டேன்.  மக்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். என் பிரசாரத்தை அவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், மக்கள் விரோதமாக அதிமுக செயல்படுகிறது. மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும். எளிமையான அரசியலை முன் வைக்க வேண்டும் என்று சொல்லிய இளங்கோவன்,  இப்போது மணல் கொள்ளை புகழ்  பழனிசாமியுடன் கரம் கோர்த்து இருக்கிறார். அவருடன் இணைந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இளங்கோவன் நம்புகிறார்...? அரவக்குறிச்சி ஒன்றும் குப்பை தொட்டியல்ல, மக்கள் விரோதிகள் எல்லாம் இங்கு போட்டியிட நினைக்க.

சரி. அதிமுக மக்கள் விரோத கட்சி என்றால், திமுக மக்கள் நேச கட்சியா...?

நான் அப்படி சொல்லவில்லை. இது குறித்து என் கருத்தை நான் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும், மத்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறேன். அது உள்கட்சி விவகாரம் என்பதால் நான் அதை வெளியே சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை தமிழகத்தில் பணம், இயற்கைவள கொள்ளை இல்லாத,  அடாவடி அரசியல் இல்லாத மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நீங்கள் சுயேட்சையாக நிற்கும்பட்சத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆதரவை கோருவீர்களா...?

பரிசீலிப்பேன்.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா...?

காங்கிரஸில் இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள் ஓரங்கட்டபட்டிருக்கிறார்கள். ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவார்கள். 

மம்தா போல் வெளியேறி தனிக்கட்சி தொடங்குவீர்களா...?

எனக்கு காங்கிரஸ் மீதோ, தேசிய தலைமை மீதோ எந்த வருத்தமும் கிடையாது. மாநில தலைமை  தவறு இழைத்து இருக்கிறது என்பதை பதிவு செய்யவிரும்புகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள், தேசிய தலைமைக்கு கட்டுப்படவில்லை என்று எடுத்து கொள்ளலாமா...?

இதை நீங்கள் இளங்கோவனிடம்தான் கேட்க வேண்டும். நானும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close