Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏன்...? -பின்னணி தகவல்கள்!

மிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க.,  அதில், இலவச கலர் டி.வி. வழங்குவோம் என்று அறிவித்த தேர்தல் வாக்குறுதிதான் அந்த தேர்தலில் ஹீரோவாக விளங்கியது. அதன்படி, எதிர்பார்த்த மாதிரி தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

அதற்கு பிறகு 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்,  அ.தி.மு.க.விற்கு முன்னதாகவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில்,  'இலவசமாக மிக்சி, ஃபேன் வழங்குவோம், திருமண உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்குவோம். முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும்' என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானதும், அதை  அ.தி.மு.க. தலைமை அப்படியே காப்பி அடித்தது. குறிப்பாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்சி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அ.தி.மு.க.வோ ஒருபடி மேலே போய் மிக்சி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

தங்களது தேர்தல் அறிக்கையை ஈயடிச்சான் காப்பியாக எடுத்து அதில் கூடுதலாக சில விஷயங்களை சேர்த்து அ.தி.மு.க. தலைமை தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது என்பதை தி.மு.க. தலைமை லேட்டாக புரிந்து கொண்டது. அதனால், இந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, தி.மு.க. முன்னதாக வெளியிடாமல், அ.தி.மு.க. தலைமை வெளியிட்ட பிறகு வெளியிட திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட 10 பேர் கொண்ட குழுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். இந்த குழுவினரும் வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை ''மிகவும் ரகசியமாக"  தயாரித்தனர்.

தங்களது தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் வெளியே லீக்காகாமல் பார்த்துக் கொண்ட இந்த குழுவினர், நேற்று ஏப்ரல் 7-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அதை ஒப்படைத்தனர். பூரண மது விலக்கு மற்றும் கல்வித்துறை உட்பட முக்கிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றிருப்பதாக, தற்போது தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதுபோல், அ.தி.மு.க. தலைமையும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ. அய்யர், தம்பித்துரை உள்பட சீனியர் கட்சி நிர்வாகிகளை கொண்டு தேர்தல் அறிக்கையை சத்தம் இல்லாமல் தயாரித்து,  வெளியிடாமல் வைத்திருக்கிறது. முதலில் அ.தி.மு.க. வெளியிடட்டும் என்று தி.மு.க.வு.ம், தி.மு.க. வெளியிடட்டும் என்று அ.தி.மு.க.வும், தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிடாமல் கண்ணா மூச்சி ஆட்டம் காட்டி வருகின்றனர்.

ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால் தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமை ஏப்ரல் 10-ம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அப்போது, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆக தேர்தல் அறிக்கை தொடர்பான, இரு திராவிட கட்சிகளின் விளையாட்டுகளும் விரைவில் முடிவுக்கு வந்து விடும்.

- எம்.கார்த்தி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ