Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விருதுநகரில் அமைச்சருக்கு எதிராக வரிந்து கட்டும் அதிருப்தியாளர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் முக்குலத்தோர், நாடார், நாயக்கர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு நாயக்கர் சமுதாயத்தினர் வாக்குகள் இருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் சீட்டு கேட்டு சிலர் தலைமையிடம் விண்ணப்பித்தனர்.

குறிப்பாக நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்துரார் ஆண்டாள் கோவில் தக்கார் ஸ்ரீபதி ரவிச்சந்திரன், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதியில் சீட்டு பெற காய்களை நகர்த்தி வந்தார். அதேபோல், நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த சிவகாசி தொகுதி செயலாளர் சிவக்குமாரும் சிவகாசியை குறி வைத்து, சில வேலைகளை செய்து வந்தார்.

ராஜபாளையம் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கோபால்சாமியும் மீண்டும் அ.தி.மு.க.வில் சீட்டு பெற முயற்சித்து வந்தார். ஆனால், விருதுநகர் மாவட்டச் செயலாளரும், செய்தித்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த இந்த மூன்று பேருக்கும் சீட்டு கிடைக்க கூடாது என்பதற்காக  சத்தம் இல்லாமல் காய்களை நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நீலாங்கரை பங்களாவில் நடந்த அ.தி.மு.க. நேர்காணல் விவகாரத்தில் சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மாவட்டச் செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இது தொடர்பாக கட்சி தலைமைக்கு நோட் வைக்கவும், கடந்த மாதம் சிவகாசி தொகுதி செயலாளரான சிவக்குமார் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், சாத்தூரில் ஸ்ரீபதி ரவிச்சந்திரனுக்கு சீட் கிடைக்காமல் பார்த்து கொண்டார்.

அத்துடன், தனது ஆதரவாளரான எதிர்க்கோட்டை சுப்பிரமணியம் என்பவருக்கும், ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமுதாயத்தை சேர்ந்த ஷியாம்ராஜ் என்பவருக்கும் வேட்பாளர் பட்டியலில் பரிந்துரை செய்து அவர்களுக்கு சீட் வாங்கி கொடுத்து விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த நாயக்கர் சமுதாயத்தினர், தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அணி திரண்டு வருவதாகவும், தேர்தல் நேரத்தில் இது கட்சியின் நலனுக்கு எதிராக அமைந்துவிடக்கூடாது என்பதால், தலைமைக்கு விஷயம் போகும் முன்னர் எதிர்ப்பு தீயை அணைக்க பாலாஜி பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

- எம்.கார்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ