Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2006 தேர்தல் ஃபிளாஷ்பேக்: 29 இடங்களில் மண்ணை கவ்விய மதிமுக!

2006 சட்டசபைத் தேர்தல் சமயத்தில்,  கடைசி வரையில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு,  ஒரு ‘சீட்’ பிரச்னையில் அ.தி.மு.க.வுக்கு தாவிய ம.தி.மு.க 29 இடங்களில் தோல்வியை தழுவியது. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க நீடித்திருந்தால்,  தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று,  தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் என்கிற பேச்சும் அப்போது எழுந்தது. தமிழகத்தில் அப்போது  மைனாரிட்டி அரசு அமைய ம.தி.மு.கதான் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

2006 தேர்தலைப் போலவே 2001 சட்டசபைத் தேர்தலிலும் ம.தி.மு.க கடைசி நேரம் வரையில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து கடைசியில் கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக போட்டியிட்டது. 2001 தேர்தலில் ம.தி.மு.க அதிக ஓட்டுகளை பிரித்ததால் 23 இடங்களில் தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருந்திருந்தால் அப்போதே தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி ஆட்சிதான் ஏற்பட்டிருக்கும். ம.தி.மு.க.வால் அந்த வாய்ப்பு பறிபோனது. 2001-ல் நடக்காத விஷயம் 2006-ல் அரங்கேறியது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்த வைகோ 2006 சட்டசபை தேர்தல் சமயத்தில் கூட்டணியில் இருந்து கழன்று கொண்டார். அதுவரை தி.மு.க கூட்டணியிலே ம.தி.மு.க அங்கம் வகித்து வந்த நிலையில்,  அந்த கூட்டணியில் ம.தி.மு.க தொடருமா? என்கிற கேள்வி எழுந்து நின்றது.

‘கருணாநிதிதான் அடுத்த முதல்வர்’ என்று அடித்து சொல்லிக்கொண்டிருந்த வைகோ,  ஒரு 'சீட்' பிரச்னையில் கூட்டணியை விட்டு வெளியேறினார். திருச்சியில் தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருந்த சமயம். அதிரடியாக போயஸ் கார்டனுக்கு போய் கூட்டணி போட்டார் வைகோ. அங்கே ம.தி.மு.க.வுக்கு 35 இடங்கள் கிடைத்தன. தி.மு.க தலைமையை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார் வைகோ. அந்த தேர்லில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது ம.தி.மு.க.

ம.தி.மு.க. வென்ற 6 தொகுதிகள்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தது. ம.தி.மு.க. வென்ற தொகுதிகள்,

1. தொண்டாமுத்தூர் (கோவை மாவட்டம்)
2. கம்பம் (தேனி மாவட்டம்)
3. சிவகாசி (விருதுநகர் மாவட்டம்)
4. விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்)
5. திருமங்கலம் (மதுரை மாவட்டம்)
6. வாசுதேவநல்லூர் (நெல்லை மாவட்டம்)

இதில், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ இளவரசன் இறந்து போனார். அங்கே நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ மற்றும் கம்பம் எம்.எல்.ஏ,  தி.மு.க.வில் இணைந்தால் அங்கேயும் இடைத்தேர்தல்கள் நடந்தன. தொண்டாமுத்தூரில் காங்கிரஸும், கம்பத்தில் தி.மு.க.வும் வெற்றி பெற்றன.

13 ஆண்டுக்குப் பிறகு சட்டசபையில் நுழைந்த ம.தி.மு.க.!

கட்சி தொடங்கி 13 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2006-ல்தான் சட்டசபைக்குள் நுழைந்தது மறுமலர்ச்சி தி.மு.க. 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில்தான் முதன்முறையாக போட்டியிட்டது ம.தி.மு.க. அப்போது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு சேர்த்து தேர்தல் நடந்தது. இரண்டிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அத்தேர்தலிலும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க,  35 இடங்களில் நின்று 6 இடங்களைப் பிடித்தது.

‘பொடா’ கைதிகளில் ஒருவர் மட்டுமே வெற்றி!

2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் ‘பொடா’ வழக்கில் கைதான மூன்று பேர் தோற்றுப் போனார்கள். ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து வைகோ பேசிய விஷயம்,  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு,  ‘பொடா’ சட்டத்தின் கீழ் வைகோவை சிறைக்குள் தள்ளியது. அவருடன் ம.தி.மு.க பிரமுகர்கள் புலவர் செவந்தியப்பன், திருமங்கலம் இளவரசன், பூமிநாதன், கணேசமூர்த்தி உட்பட 8 பேர் மீதும் ‘பொடா’ சட்டம் பாய்ந்தது. 18 மாதங்களுக்கும் மேல் சிறையில் இருந்து கடைசியில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

2006 சட்டசபைத் தேர்தலில்,  அ.தி.மு.க. கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. இதில் நான்கு தொகுதிகளை ‘பொடா’ கைதிகளுக்கு ஒதுக்கினார் வைகோ. சிவகங்கை தொகுதியில் புலவர் செவந்தியப்பன், திருமங்கலத்தில் இளவரசன், மதுரை கிழக்கு தொகுதியில் பூமிநாதன், வெள்ளக்கோவில் தொகுதியில் கணேசமூர்த்தி ஆகிய நான்கு பொடா கைதிகள் போட்டியிட்டனர். இதில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளவரசன் மட்டுமே வெற்றி பெற்றார். புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், கணேசமூர்த்தி ஆகியோர் தோல்வியடந்தனர். 2009-ம் ஆண்டு இளவரசன் மரணம் அடைய,  திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க வெற்றி பெற்றது.

எடிட்டர் சாய்ஸ்