Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டத்தை தொடங்கிய அழகிரி...! தெறிக்கும் தென்மண்டல திமுக!

 

கடந்த இரண்டு வருடங்களாக திமுகவில் இருந்து விலகி இருந்த மு.க.அழகிரி தற்போது, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர் என்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேமுதிகவை, திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து திமுக தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை திமுக தலைமை எடுத்தது.

இதைத் தொடர்ந்து, திமுக தலைமையை தொடர்ந்து அழகிரி விமர்சித்து வந்தார். இதனை திமுகவும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி,  கருணாநிதியை திடீரென அழகிரி சந்தித்து பேசினார். தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு,  திமுகவில் மட்டுமின்றி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. "தந்தை என்ற முறையில் அவரை சந்தித்தேன்" என்று அழகிரி விளக்கம் அளித்தார்.

திமுக கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. இதனால், அழகிரி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில், அழகிரி இன்று  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "சூரியனுக்கு சொந்தங்கள் நாங்கள், ஆதரிப்பீர் உதயசூரியன்" என்று பதிவிட்டுள்ளார். அழகிரியின் இந்த பிரசாரம் அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. தங்களுக்கு 'சீட்'  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் யார் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற முடிவை தலைமை அழகிரிக்கு கொடுத்தாலும ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதனால், தென் மாவட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள் 'கிலி'யில் இருக்கிறார்கள்.

இதனிடையே அழகிரியின் இந்த அதிரடி பிரசார முடிவு,  திமுக தலைமையை உற்சாகப்படுத்தினாலும், ஸ்டாலினுக்கு இது தலைவலியே என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ