Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விஜயகாந்த் வீணா போய்விட்டார் என்று வருத்தமாக உள்ளது!' - ஈ.வி.கே. எஸ் இளங்கோவனின் தடாலடி பேட்டி

.வி.கே. எஸ். இளங்கோவனின் வீடு இருக்கும் மணப்பாக்கம் பகுதியே உற்சாகமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சூரியன் விழிப்பதற்கு முன்பே, அவரது கையின் அரவணைப்பிற்கு ஏங்கி வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள். தேர்தல் களைப்புகளை தாண்டி வரும் தொண்டர்கள் அனைவருடனும் உற்சாகமாக பேசுகிறார். சலசலப்புகளும் இல்லாமல் இல்லை. தொண்டர்கள்,  யாரோ ஒருவரின் பெயரை உரக்க கத்தி, அவருக்கு ‘சீட்’ தரவில்லை என்றால், இங்கேயே தர்ணா இருப்போம் என்று கோஷமிடுகிறார்கள்.

வெகு நேரமாக காத்திருக்கும் நம்மை பார்த்ததும், "கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுகிறீர்களா... அங்கே நிச்சயமாக பேசலாம்" என்கிறார்.  கட்சி அலுவலகத்திற்கு செல்கிறோம்.
 

தமிழகத்தின் தேர்தல் அடையாளங்களில் ஒன்று சத்தியமூர்த்தி பவன். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக இருந்தால், அது தேர்தல் காலம் என்று அர்த்தம். ஆம். அது தேர்தல் காலங்களில் மட்டும் பரபரப்பாக இருக்கும். நூற்றுக்கணக்கான தொண்டர்கள், ஆடம்பர கார்களின் அணிவகுப்பு என்று பரபரப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் முகத்தில் அறையும் எதார்தத்தை பேசக் கூடிய தலைவர்களில் ஒருவர் நம்முடன் பேச தொடங்குகிறார். அறையின் குளிர்ச்சியையும் தாண்டி, அவரது உரையாடலில் அனல் கக்குகிறது.  திராவிட அரசியல், ஜெயலலிதா, காமராஜர் ஆட்சி, ஜோதிமணி, கூடா நட்பு, வைகோ, விஜயகாந்த் என அனைத்து கேள்விகளுக்கும் கள எதார்தத்தை பதிலாக்குகிறார்.


அவருடனான அந்த உரையாடலில் இருந்து...

இதில் வஞ்சக புகழ்ச்சி எதுவும் இல்லை. சொல்லுங்கள் எப்படி நீங்கள் தலைமையேற்கும் போது மட்டும், காங்கிரஸ் இவ்வளவு உற்சாகமாக இயங்குகிறது...?

(மெல்லிய சிரிப்பை படர விடுகிறார்) காங்கிரஸ் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறது. தொண்டர்கள் எப்போதும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள், மக்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் களத்தில் வேலை செய்ததன்  காரணமாகதான், நாடாளுமன்ற  தேர்தலில் ஏற்பட்ட தொய்வு நிலை என்பது மாறி இன்று காங்கிரஸ் உற்சாகமாக இருக்கிறது.

திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்று குரல் ஒலிக்கும் இத்தருணத்தில், நீங்கள் அந்த மாற்றத்தை முன்னெடுக்காமல் இன்னும் திராவிட கட்சிகளின் முதுகிலேயே பயணிக்கிறீர்களே...?

திராவிட கட்சிக்கு மாற்று என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம் என்பது இன்றைக்கு சமூகத்தில் நிலவும் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும்.  மக்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும்.  மது விலக்கு கொண்டு வர வேண்டும். லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஏறத்தாழ தொண்ணூற்று நான்கு லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், விவசாய கடன் ரத்து செய்யப்பட வேண்டும்.  இவையெல்லாம் தமிழகத்தின் அவசர தேவைகள். இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். அதற்காகதான் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். அப்போதுதான் ஜெயலலிதா ஆட்சியை தோற்கடிக்க முடியும்.

திமுக,  மக்கள் விரும்பும் நல்லாட்சியை தரும் என்று நம்புகிறீர்களா ?

கண்டிப்பாக செய்வார்கள் என்று நம்புகிறோம். கடந்த முறை நடந்த தவறுகள் எல்லாம் இனிமேல் நடக்காது என்று ஸ்டாலின் அவர்களே சொல்லி இருக்கிறார். நாங்களும் கூட இருக்கிறோம். கண்டிப்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வருவோம்.


மாநில கட்சியான பாமகவிற்கு கூட, தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் துணிவு இருக்கிறது. மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லும் தேசியக் கட்சியான காங்கிரஸை, எது தனித்து நிற்க விடாமல் தடுக்கிறது ?

பாமக விளையாட்டு களமாக தேர்தலை பார்க்கிறது. அவர்களிடம் வேண்டிய அளவு பணம் இருக்கிறது,  அதனால் தனியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை. ஆனால்  மக்கள் விரோத ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் செயல்படுகிறது. அவரை தோற்கடிக்க கூட்டணி அவசியம். 

 ‘கூடா நட்பு’ என்று விமர்சனம் வைத்த திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதில், மாற்று கூட்டணியை நீங்களே முன்னெடுத்து இருக்கலாமே ?

ராஜாஜியும் திமுகவும் கரம்கோர்க்கவில்லையா... பெரியார் கூட துவக்க காலத்தில் காங்கிரஸை ஒழிப்பதுதான் தன் வேலை என்று சொன்னார். ஆனால், கடைசி காலத்தில் காமராஜரை ஆதரிக்கவில்லையா....? சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிலைமை மாறும். ஹைதர் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் சொன்னதையெல்லாம் பேசிக் கொண்டிக்க முடியாது. மனிதனின் சிந்தனை வளரும் போது, முன்பு சரியெனப்பட்டது, இப்போது தவறாகப்படும். கள எதார்த்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கருத்துகளை சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்வதில் தவறு கிடையாது.

சமூக ஊடகங்களில் அதிகம் நகைப்பிற்கு உள்ளாவது திமுகவும், காங்கிரசும்தான். காங்கிரஸை , அதுவும் குறிப்பாக காமராஜரை பற்றி  மிக மோசமாக விமர்சனம் செய்த திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு,  காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று பேசுவது முரண் என்கிறார்களே புதிய தலைமுறை வாக்காளர்கள் ?

புதிய தலைமுறை வாக்காளர்கள் விமர்சனம் வைத்தாலும் சரி, பீகார் வாக்காளர்கள் விமர்சனம் வைத்தாலும் சரி... நான் ஏற்கெனவே சொன்னதுதான். முன்பே சொன்னதையே பிடித்து கொண்டு இருப்போம் என்று சொல்வது எதார்த்தம் இல்லை.

சரி,  பின்பு எப்போதுதான் காமராஜர் ஆட்சி ?

வரும் போது வரும் (சிரிக்கிறார்)...  யார் நல்லாட்சி கொடுத்தாலும், அது காமராஜர் ஆட்சிதான்.

சரி நீங்கள் சொல்லியதுபோல் எதார்த்தத்தை பேசலாம். தொகுதி பங்கீட்டில் நீங்கள் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டீர்கள் என்கிறாரே ஜோதிமணி?

அழுத்தம் கொடுக்கவெல்லாம் தவறவில்லை. இது குலாம் நபி ஆசாத்தும், கருணாநிதி அவர்களும் எடுத்த கொள்கை முடிவு.

கொள்கை முடிவு?

அதாவது ஏற்கெனவே அவரவர் வெற்றி பெற்ற தொகுதிகளை, அவரவரே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.  காங்கிரஸ் வெற்றி பெற்ற ஐந்து தொகுதிகளை காங்கிரசிற்கு கொடுத்துள்ளார்கள். இருந்தாலும், நாங்கள்  அரவக்குறிச்சி தொகுதியை பெற திமுகவிற்கு கடும் அழுத்தம் கொடுத்தோம்.

ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் மாநில தலைமையிடம் அழுத்தம் கொடுத்தும், மாநில தலைமை.... (கேள்வியை முடிக்கும் முன்பே பேச துவங்குகிறார்...)

ராகுல் காந்தி அது போல் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ராகுல் காந்தி கொடுத்த ஒரே அழுத்தம் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும்தான்.

ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?

அதைபற்றியெல்லாம் எங்களுக்கு அக்கறை கிடையாது. எங்களை பொருத்த வரையில், மக்கள் விரோத சக்தியாக இருக்கிற அதிமுக - ஜெயலலிதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.


ஐந்து ஆண்டு ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்கிறீர்களா?

சாதனையா...? இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மக்களை சந்திக்கவே இல்லை. மக்களை சந்திக்காத ஒருவர் எப்படி மக்களுடைய முதல்வராக இருக்க முடியும்.

அதிமுக ஆட்சிக்கான உங்கள் மதிப்பெண்?

சைபருக்கு கீழ் ஏதாவது இருந்தால் நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக எப்போதும் காங்கிரஸ் நடந்து கொள்கிறதே?

காங்கிரசை போல் தமிழர்களுக்கு நல்லது செய்த கட்சி, தமிழகத்திலும் இல்லை. அகில இந்தியாவிலும் இல்லை.

இங்கு மீண்டும் தலை தூக்கும் சாதி அரசியலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கட்சிகள்தான் தேர்தல் காலங்களில் சாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்களிக்கும் மக்கள் எப்போதும் சாதிக்கு அப்பாற்பட்டுதான் வாக்களித்து வருகிறார்கள்.

வைகோவின்  சமீபத்திய பேச்ச்சுகள்?

அது விஜயகாந்த்துடன் சேர்ந்ததும் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன்.

விஜயகாந்த் உங்கள் நெருங்கிய நண்பர்தானே?

நெருங்கிய நண்பரும் வீணாக போய்விட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது.

நீங்கள் தனிப்பட்ட முறையில் விஜயகாந்துடன் பேசி, அவரை உங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லையா?

இல்லை... கூப்பிடவில்லை. கூப்பிடுவதாக எந்த எண்ணமும் இல்லை. வருவதாக இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் இல்லை.

தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களே?

ஆம். அது அதிமுக அரசின் கைக்கூலியாக மாறிவிட்டது. பணம் பட்டுவாடாவிற்கான அனைத்து உதவிகளையும் தேர்தல் ஆணையமே செய்கிறது. நியாயமான தேர்தல் நடத்த ராணுவத்தை அழைக்க வேண்டும்

என்று காரசாரமாக பேட்டியை முடித்தவர்,  தமிழ் மாநில காங்கிரஸில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “வாசன் சீட்டுக்காக பிஜேபி- யுடன் கூட பேச்சு நடத்தி உள்ளார். காமராஜர் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் மீண்டும் தாய் வீட்டிற்கே திரும்புங்கள். தாய் வீடு உங்களை அரவணைத்துக் கொள்ள காத்திருக்கிறது” என்றார்.

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ