Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கறார்' கார்டன்: உற்சாகம் குறைந்த ஓ.பி.எஸ்... நொந்து நிற்கும் நத்தம்!

நெற்றியில் குங்குமமும், முகத்தில் எப்போதும் புன்னகையோடும் வலம் வந்து கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்தில் இப்போது களையில்லை. 'கார்டனின் அதிரடிகளால் நொந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ். இதே கதிதான் நத்தத்திற்கும்' என்கிறார்கள் தேனி அ.தி.மு.கவினர்.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் ஜெயலலிதா. 'இன்று காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் இருக்கும் தேர்தல் பணிமனைகளில் வேலைகள் தொடங்கியாக வேண்டும். அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் பூஜை செய்துவிட்டு, நிர்வாகிகள் களமிறங்க வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டார் ஜெயலலிதா. தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப, மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அ.தி.மு.கவினர் நிரம்பி வழிந்தார்கள். போடிநாயக்கனூர் தொகுதியில் பூஜையை முடித்துவிட்டு பிரசாரத்திற்குக் கிளம்பினார் ஓ.பி.எஸ்.

" இன்றைக்கு நாங்கள் பார்த்தது பழைய ஓ.பி.எஸ் அல்ல. ரொம்பவே சோகத்தோடு இருந்தார். சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டார். கட்சி நிர்வாகிகளும் அவருக்குப் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என வேதனையோடு பேசினார் தொண்டர் ஒருவர்.


'என்ன நடக்கிறது தேனி மாவட்ட அ.தி.மு.கவில்?' என்ற கேள்வியை அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். நடக்கும் விவகாரத்தை விரிவாகவே நம்மிடம் விளக்கினார்.

" தேனி மாவட்டத்தில் கட்சி வேலை பார்க்கக் கூடாது என ஓ.பி.எஸ்க்கு அம்மா நேரடியாகவே உத்தரவு போட்டுவிட்டார். இனி எது என்றாலும், மா.செ தங்கத் தமிழ்ச்செல்வன் மூலம்தான் நடக்கும். ஏற்கனவே, இருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை விமானநிலையத்திற்கு ஓ.பி.எஸ் வந்தாலும் யாரும் வரவேற்க போகக் கூடாது என அம்மா சொல்லிவிட்டார். அதனால், விமானத்தைவிட்டு வெளியே வந்ததும் பெரியகுளம், தென்கரை அக்ரஹார வீட்டுக்கோ, போடி வீட்டுக்கோ போய்விடுகிறார். அவர் எந்தக் காரில் செல்கிறார் என்பதை உளவுத்துறை போலீஸ் முழுக்க கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கட்சியின் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்குப் போவார். அதற்கும் அம்மா தடைபோட்டுவிட்டார். மாவட்டத்தில் எந்த மரியாதையும் இப்போது அவருக்கு இல்லை. அவருக்கு பழனியில் சீட் கொடுத்து ஒதுக்கிவிட வேண்டும் என்றுதான் அம்மா நினைத்தார். நீண்டநாள் விசுவாசத்திற்காகத்தான் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார். தேர்தல் பிரசாரத்தில் ஓ.பி.எஸ் வலம்வந்தாலும், தங்கத் தமிழ்செல்வன் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தேர்தல் நாளைக் கடப்பதே பெரிய சோதனையாகத்தான் கருதுகிறார் ஓ.பி.எஸ். தனது மகனுக்கு சீட் வாங்கிக் கொடுக்க நினைத்தார். அதற்கும் கார்டன் தடைபோட்டுவிட்டது. போடியில் ஜெயித்தாலும், மீண்டும் கார்டனின் குட்புக்கில் ஓ.பி.எஸ் வருவது சந்தேகம்தான்" என்றார் அவர்.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். தி.மு.கவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து வெற்றி பெறுவது பெரிய சவால் என்றாலும், மாவட்ட நிர்வாகம் முழுக்க நத்தம் கையைவிட்டுப் போய்விட்டது.  மாவட்டம் முழுக்க திண்டுக்கல் சீனிவாசனின் கையே ஓங்கியிருக்கிறது. 'இனி எது என்றாலும், சீனிவாசனிடம்தான் கேட்க வேண்டும்' என கார்டன் கறார் உத்தரவு பிறப்பித்துவிட்டது.

நத்தம் தொகுதியில் விஸ்வநாதனோடு நட்பில் இல்லாத ஷாஜகானுக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா. சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் வரும் நத்தத்தை வரவேற்க கட்சிக்காரர்கள் யாரும் போவதில்லை. அவரும், ரயிலைவிட்டு இறங்கியதும் வேம்பார்பட்டியில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். தொகுதியில் ஆர்வம் இல்லாமல்தான் பிரசாரம் செய்து வருகிறார். ஒருகாலத்தில், சீனிவாசனிடம் கைகட்டி இருந்தார் நத்தம். இப்போது சீனிவாசன் நினைத்தால்தான் நத்தத்திற்கு தேர்தல் வேலையே பார்ப்பார்கள் என்ற நிலை.

தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு தேன் கூட்டைக் கலைத்துவிட்டதும், திண்டுக்கல்லில் நத்தத்திற்கு பெரிய பூட்டை மாட்டிவிட்டதும், கார்டனின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயங்கள்தான்.

-ஆ.விஜயானந்த்


படம்:
வீ.சக்திஅருணகிரி


 

எடிட்டர் சாய்ஸ்