Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துாசி தட்டப்படும் எம்.ஜி.ஆரின் பிரசார வேன்...விஜயகாந்தின் சென்டிமென்ட்!

 

 மிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தேர்தல் பிரசார வேனை,  தனது 2016 தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கட்சி அலுவலகமான கோயம்பேட்டில் அந்த வேனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் பிரபலமான TN w -2005 என்ற எண் கொண்ட வெளிர் நீல நிறம் கொண்ட இந்த வேனை,  எம்.ஜி.ஆர் கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தினார். ஏ.சி செய்யப்பட்டு,  படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட இந்த வேனின் நடுமையத்தில் உள்ள துளையின் வழியாக எம்.ஜி.ஆர்,  பிரசார பாயின்ட்டுகளில் ஏறி நின்று, கூம்பு வடிவ மைக் அல்லது ஒயர் மைக்கில் பேசுவார்.

பிரசாரம் முடிந்ததும் வேனின் பின்புறமுள்ள இடத்தில் ஓய்வு எடுத்துக்கொள்வார். பேசுகிறபோது வேனின் இருபுறமும்,  அவருக்கு நெருக்கமான ஸ்டண்ட் ஆட்கள் பாதுகாப்பாக நின்றுகொள்வர். திமுகவிலிருந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர் பல்வேறு தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.

மதுரையில் ஒருமுறை,  பிரசாரத்தின்போது மலையூர் மம்பட்டியானின் ஆட்கள் எம்.ஜி.ஆரை தாக்கவிருந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது உண்டு.

பின்னாளில் திமுகவிலிருந்து பிரிந்துவந்தபின் எதிர்க்கட்சியினர்  கற்களை வீசுவது, கம்பு எரிவது என திடீர் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். இதன்பின்னா்தான் எம்.ஜி.ஆர் தனக்கு பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துக்கொண்டதோடு,  ஸ்டண்ட் ஆட்களுடன் பிரசாரம் செய்யத்துவங்கினார். பிரசாரத்தின்போது எந்த ஊர்களிலாவது தொண்டர்கள் கொடிக்கம்பத்தை நிறுவி,  அதில் எம்.ஜி.ஆரை கொடிஏற்ற வற்புறுத்துவர். நிகழ்ச்சி நிரலில் அது இல்லையென்றாலும் தொண்டரின் மனதை கஷ்டப்படுத்தவிரும்பாத எம்.ஜி.ஆர்,  வண்டியில் இருந்தபடியே கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துவிட்டு கிளம்புவார்.

சில இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டச்சொல்லி குரல் கொடுப்பர். இதை கவனிக்கும் எம்.ஜி.ஆர், அருகிலிருக்கும் பாதுகாவலர்களிடம் சொல்ல அவர்கள் குழந்தையை மிக பத்திரமாக மேலே கொண்டுவருவர். குழந்தையை பெண்ணா அல்லது ஆணா என நாசூக்காக கவனித்து, பெயர் சூட்டிவிட்டு,  பத்திரமாக குழந்தை பெற்றோரிடம் சென்று சேர்வதை பிரசாரத்திற்கு நடுவேவும் கவனமாக பார்ப்பார்.

ஒரு பாயிண்ட்டுக்கும் அடுத்த பாயிண்டுக்கும் நடுவே அவர் எடுக்கும் ஓய்வுதான் அன்றைய ஓய்வு. மீண்டும் அடுத்த பாயிண்ட் வந்ததும் தொண்டர்களிடம் பழைய உற்சாகத்துடன் பேசத்துவங்குவார் எம்.ஜி.ஆர். எவ்வளவு சோர்வு தென்பட்டாலும் தொண்டர்களை கண்டுவிட்டால் உற்சாகமாகிவிடும் அவரது முகம். இதுதான் எம்.ஜி.ஆரின் பிரசார பாணி.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் அந்த வாகனம், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வாகனங்களின் வரிசையில் பின்னாளில் ராமாவரத்தில் உள்ள வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இயல்பிலேயே எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த்,  96- ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாருடன் நட்புடன் இருந்த ஒரு சமயத்தில்,  எம்.ஜி.ஆர் நினைவாக தனக்கு அந்த வேனை தரும்படி கேட்டுப்பெற்றார்.

இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தாலும் ஜானகி அம்மையார் உறுதியாக இருந்தார். ராமாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட வேன், விஜயகாந்தின் கோயம்பேடு மண்டபத்தில் வெறுமனே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

2005- ம் ஆண்டு, தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்த், மதுரையில் நடந்த தனது கட்சி மாநாட்டிற்கு ராசியாக கருதி, இந்த பிரசார வேனில் மேடைக்கு வந்தார்.

 

விருதாச்சலம் தொகுதியில் பிரசாரத்தின்போது அந்த வேனில், சில இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதன்பின், மீண்டும் ஷெட்டுக்கே சென்றது வேன். வேனை கேட்டுப்பெற்ற விஜயகாந்த், அதை முறையாக பராமரிக்கவில்லை என அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் எழுந்தது.இப்போது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கவனம் மீண்டும் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வேன் மீது திரும்பியுள்ளது. 77 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆருக்கு,  அதன்பின் தொடர்ந்து அரசியலில் வெற்றிமுகமாகவே இருந்ததால் இந்தமுறை எம்.ஜி.ஆரின் ராசி தனக்கு ஒத்துழைக்கும் என நினைக்கும் விஜயகாந்த்,  மீண்டும் வேனை தூசி தட்ட உத்தரவிட்டுள்ளார்.

வேன் தயாரானதும்,  சம்பிரதாயமாக தான் பிரச்சாரம் செய்யும் ஓரிரு இடங்களில் மட்டும் அதில் ஏறி நின்று பேசி மக்களிடையே ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் இந்த வேன் சென்டிமென்ட் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பது மே 19 ல் தெரிந்துவிடும்.

- எஸ்.கிருபாகரன்
-- படங்கள்:.ப.சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்