Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.க., த.மா.கா. உடைவதற்கு வைகோதான் காரணம்... அடித்து சொல்லும் மு.க.ஸ்டாலின்!

சென்னை: த.மா.கா.வாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும் அவை உடைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோதான் காரணம்.என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  3-வது நாளாக நேற்று சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை விளக்கும் வகையில், ‘‘ஐந்தாண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு’’, ‘‘சொன்னாங்களே, செஞ்சாங்களா?’’, ‘‘முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்’’, ஆகிய தலைப்புகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்போது மதுவிலக்கை படிப்படியாக 10 வருடத்தில் அமல்படுத்தப்போகிறோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பை, ஒருவேளை செய்கிறார்களோ இல்லையோ, முன்கூட்டியே அறிவித்திருந்தால் சசிபெருமாள் என்கிற ஒரு காந்தியவாதியை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆக, தேர்தலில் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ஐந்தாண்டு காலமாக துருப்பிடித்துப் போயிருக்கக் கூடிய ஜெயலலிதா ஆட்சியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. கடந்த தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தார். அதனால்தான் “சொன்னாங்களே, செஞ்சாங்களா?” என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, அதில் தலைப்புச் செய்திகளாக, இந்த 5 வருட ஆட்சியில் என்னென்ன அக்கிரமங்கள் நடந்து  கொண்டிருக்கிறது, எதை எதை சொன்னார்கள், எதை எதை செய்யவில்லை என்பதையெல்லாம் படம் பிடித்து, சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது, ஏறக்குறைய 94 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யாமல், அவர்களது சுழல் நிதி கடனும், பொருளாதார கடனும் கூட தரமுடியாத நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

எப்படி 2011-ல் வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்து அதையெல்லாம் நிறைவேற்றவில்லையோ, அதேபோல இந்த தேர்தலிலும் நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அவர் வாக்குறுதிகளை அள்ளி வழங்க தொடங்கி இருக்கிறார். இன்னும் என்னென்ன வாக்குறுதிகளை சொல்லப்போகிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியத்தான் போகிறது. அறிவித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளதற்கு பெயர்தான், “அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு”. கருணாநிதியை பொறுத்தவரையில் ‘‘சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்’’, என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.க.வில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுவதை நீங்கள் அங்கு போய்தான் கேட்க வேண்டும். ஏற்கனவே தே.மு.தி.க. அங்கு சென்று இணைந்ததும் உடைய ஆரம்பித்தது, இப்போது த.மா.கா. இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது. இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வைகோ கருணாநிதியும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

ஆக, த.மா.கா.வாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோ தான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால், அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close