Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாழ்வா, சாவா போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

விருதுநகர்: அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுக்கும் இந்த தேர்தலில் வாழ்வா, சாவா என்ற நிலையில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., இதே அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு 4 முறைக்கு மேல் வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமாக பழகிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்., நீண்ட அரசியல் அனுபவங்களுக்கு சொந்தக்காரர். அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க.வில் சேர்ந்து, இதே தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர், கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சொக்கேஸ்வரன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு 20 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தொடர் வெற்றியால் ஆச்சரியமடைந்த ஜெயலலிதா, இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, அருப்புக்கோட்டை தொகுதியில் தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த 25 ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன.

தேவாங்கர் சமுதாயத்தினர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பக்கபலமாக இருக்கின்றனர். அ.தி.மு.க. சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும், அவர்களை விலைக்கு வாங்கி விடுகிறார். இல்லையென்றால் மிரட்டி தேர்தல் வேலைகள் செய்யவிடாமல் தடுத்து விடுகின்றனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து களம் இறங்கும் சாதாரண கட்சி நிர்வாகிகள் கூட அவருக்கு பயந்து கொண்டு படுத்து விடுகின்றனர் என்று நிதர்சனமான உண்மையை போட்டு உடைத்திருக்கின்றனர்.

இதை புரிந்து கொண்ட ஜெயலலிதா, கடந்த 2011-ம் சட்டசபை தேர்தலில் தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த அப்போதைய அ.தி.மு.க.வின் மாநில இலக்கிய அணிச்செயலாளரான வைகை செல்வனை அழைத்து நீங்கள்தான் இந்த முறை கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதேபோல் அருப்புக்கோட்டை தொகுதிக்கு புது முகமான வைகை செல்வன், களத்தில் இறக்கப்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை 11 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கு பரிசாக அவரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதே நேரம் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஜூனியரான முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார். கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் மீதமுள்ள 6 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறவில்லை. இது தி.மு.க. தலைமையிடம், கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்ற தங்கம் தென்னரசுக்கு கட்சி தலைமையிடம் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கூட இடம் பெற்றார்.

இதற்கிடையே அ.தி.மு.க.வில் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன் மீது சில புகார்கள் கிளம்பவும், அவர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டம் கட்டப்பட்டார் வைகை செல்வன். 2016 சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.வான வைகை செல்வனுக்கு தலைமை இடம் அளிக்கவில்லை.

அவருக்கு பதிலாக ஏற்கனவே தேர்தலில் தோற்ற சொக்கேஸ்வரனின் தம்பியான அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா என்பவருக்கு அ.தி.மு.க. தலைமை அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட்டு வழங்கியது. வைகை செல்வனுக்கு சீட்டு இல்லை என்றதும், தி.மு.க. தரப்பில் உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓட ஆரம்பித்து உள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, ஒரு முறை வாய்ப்பு மறுக்கப்பட்டால் மீண்டும் எழுந்து வருவது என்பது பெரும் கஷ்டம் தான் என்பது அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி சாதாரண பொது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக முத்துராஜாவை நீக்கிவிட்டு திடீரென்று வைகை செல்வனுக்கு அருப்புக்கோட்டையில் சீட்டு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.

சீட்டு கிடைக்காத சோகத்தில் இருந்த வைகை செல்வன் மீண்டும் உற்சாகமடைந்துள்ளார். இதனால், தற்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். தரப்பு கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளது. மேலும், போயஸ்கார்டனுக்கு வைகைச்செல்வனை அழைத்த ஜெயலலிதா, மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று கறார் காட்டி அனுப்பி இருக்கிறாராம்.

அதனால், இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அரசியலில் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற கட்டாயம் வைகை செல்வனுக்கு உள்ளது. அதேபோல், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் இத்தனைக் கால அரசியல் அனுபவத்திற்கும் நல்ல மரியாதையும், எதிர்காலமும் கிடைக்கும் என்ற நிலை கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த தேர்தல் இருவருமே ஒரு 'வாழ்வா, சாவா' என்ற போராட்டம் தான் என்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். இரு தரப்பிலும் வேஷ்டியை மடித்துக் கொண்டு வெற்றியை நோக்கி தேர்தல் களத்தில் இறங்கி உள்ள நிலையில், வெற்றிக் கனியை யார் பறிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close