Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் இன்று ஒரே நாளில் 9 தொகுதிகளில் பிரசாரம்!

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்‌.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த சனிக்கிழமை சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அப்போது, நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட 13 தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார். திமுக தலைவர் கருணாநிதி இன்னும் தனது பிரசாரத்தை தொடங்கவில்லை.

தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படுவதற்கு முன்பே மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் 5வது கட்ட பிரசாரத்தையும் முடித்து விட்டனர். தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி, ஜி.கே.வாசனின் தமாகா கூட்டணி சேர்ந்த நிலையில் இந்த கூட்டணி கட்சியின் பிரசார மாநாடு மாமண்டூரில் நேற்று நடந்தது.

இதைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று ‌‌மாலை 4 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்குள்ள பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.

பின்னர் பொன்னேரி‌, மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த், அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் , பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் , ராயபுரம் ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ