Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நீதிதேவதையே, பராசக்தியே'- அதிமுக வேட்பாளரை மாற்ற இப்படி ஒரு கலாட்டா!

 

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் தமிழ்மகன் உசேனை மாற்றக்கோரி அக்கட்சியினரே போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பி உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர் அக்கட்சியினர். பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளராக வக்ஃப் வாரியத் தலைவரும், அகில இந்திய எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், சென்னையில் செட்டில் ஆனவர். ஏற்கெனவே இந்த தொகுதியை குறி வைத்து உள்ளூர்வாசிகள் பலரும் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். ஆனால், உள்ளூர் நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் வெளியூரைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர். இதனால் அவருடைய பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதை உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பலரும் புறக்கணித்து வருகிறார்கள். அத்துடன், தேர்தல் சமயத்தில் உள்ளடி வேலைகளைச் செய்யவும் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள். இது தமிழ்மகன் உசேனை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் தமிழ்மகன் உசேன், "நான் வெளியூர்காரன் என்பதால் கட்சியினர் என்னை புறக்கணிக்கிறார்கள். எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒருவருமே வருவதில்லை. நான் மாநில நிர்வாகியாக இருக்கிறேன். அதனால் தலைமையில் இருந்து பலரும் என்னிடம் தேர்தல் பணிகள் பற்றி கேட்டு அறிந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து என்னை புறக்கணித்தால் அப்படிப்பட்ட நிர்வாகிகள் பற்றி கட்சி மேலிடத்தில் புகார் செய்யவும் தயங்க மாட்டேன்" என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் காட்டம் அடைந்த அ.தி.மு.க.வினர், தமிழமகன் உசேனுக்கு எதிராக தொகுதியின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். அதில், ‘நீதி தேவதையே' தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமற்ற தமிழமகன் உசேனை மாற்றினால் பாளையங்கோட்டை அம்மாவின் கோட்டை. 'பராசக்தியே' பாளையங்கோட்டையில் வெளியூர் வேட்பாளரை மாற்றி யாரேனும் அறிவித்தால் தாய்க்கே வெற்றி உறுதி’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய அதிருப்தியாளர்கள் யார் என்பது பற்றி உளவுத்துறையினரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் ஒலித்துள்ள இந்த அதிருப்தி குரலால் அதிர்ந்து போய் இருக்கிறார் வேட்பாளர் தமிழ்மகன் உசேன்.

-ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்       

எடிட்டர் சாய்ஸ்

MUST READ