Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லாத்துக்கும் ஆன் -லைன் தானா...? - கதறலில் வேட்பாளர்கள்!

மிழக சட்டமன்றத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக  அரசியல் கட்சிகள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேர்தல் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த  அனுமதி பெறுவதற்கு நேரடியாக கணினியில் ஆன் -லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இந்த தேர்தலில்தான்  நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ''ஆன் -லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அல்லது சூழ்நிலை இல்லாதவர்கள் பழைய  நடைமுறைப்படி  வெள்ளைத் தாளில் டைப் செய்தோ, எழுதியோ விண்ணப்பத்தை அனுப்பலாம்'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் முதலில் யார் ஆன் லைனில் விண்ணப்பித்தார்கள் என்பது  உடனுக்குடன் கணினியில்  பதிவாகிவிடும் என்பதால், யார் முதலில் விண்ணப்ப மனு கொடுத்தார்கள் என்ற வாத விவாதங்கள், உள்ளூர்  'அரசியல் செல்வாக்கு' போன்றவைகள்  இதன் மூலம்  தவிர்க்கப்படும்.

ஆன் லைனில் விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள்  சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், மனு ஏற்பு, நிராகரிப்பு குறித்த முடிவை தெரிவித்தே ஆக வேண்டும். கணினியில் விண்ணப்பித்த நேரம் பதிவாகும் என்பதால், அதிகாரிகள் அதே  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டியதும் கட்டாயம்.

ஒரே இடத்தில் தேர்தல் அலுவலர், மின்வாரியத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாசு கட்டுப்பாட்டுத்  துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அத்தனை அரசுத்துறை அதிகாரிகளும் இருக்கும் ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறையினால்  வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பான  தங்களின் அத்தனை தேவைகளையும் துறைவாரியாக தனித்தனியே  போய்ப் பார்த்து அனுமதி கேட்க வேண்டியதில்லை என்பதும் இதில் சிறப்பு.

எல்லாமே நல்ல விஷயம்தானே... என்கிறீர்களா? ''யாருக்கு நல்ல விஷயம், எங்களுக்கு இல்லைங்க'' என்கிற எதிர்ப்புக் குரல் பெரும்பாலான வேட்பாளர்கள் மத்தியில் ஸ்ட்ராங்காகக் கேட்கிறது.

என்னதான் பிரச்னை, உங்களுக்கு? என்ற கேள்வியுடன் அவர்களிடம் பேசினேன்.

"எங்களுக்கு காலங்காலமா கட்சியோட லெட்டர் பேட்ல மனு எழுதிக் கொடுத்துதான் பழக்கம். போன தேர்தலில் இருந்துதான் மேட்டரை டைப் பண்ணிக் கொடுத்துக் கிட்டு வர்றோம்.  இந்த மாதிரி கம்ப்யூட்டர்லதான் மனு கொடுக்கணும்கறது எதுவும் தெரியாது. எல்லாம் புதுசா இருக்கு.

எந்த விபரமும் தெரியாததால எலக்‌ஷன் கமிஷனரை நேரடியாவே போய் எங்களில் பலர் பார்த்துப் பேசினோம். அவர், 'நீங்க போட்டியிடும் ஏரியா ஜோனல் ( Zonal) ஆபீசுக்குப் போங்க, அங்க உங்களுக்கு வழிமுறைகளை சொல்லித் தருவாங்க' ன்னு சொல்லி அனுப்பினாரு.

ஜோனல் ஆபீசுல போய் விசாரிச்சா, அவங்க பார்ம் எதுவும் கையில கொடுக்க மாட்டேங்கறாங்க. ஆன் லைன்லதான் டவுன் லோடு பண்ணனும், அது இதுன்னு ஏதேதோ சொல்றாங்க.  தெரியலைன்னா, பழைய படியே கையில எழுதிக் கொடுத்துட்டுப் போங்கன்னு சொல்றாங்க. கையில எழுதிக் கொடுத்துட்டுப் போனா அது கம்ப்யூட்டர்ல சீனியாரிட்டிபடி ரெஜிஸ்ட்டர் ஆகாதுன்னும் சொல்றாங்க.

நாங்க இதை சரி பண்றதா, பிரசாரத்துக்கு வேலை பண்றதான்னு ஒண்ணும் புரிபட மாட்டேங்குது.  பிரசார வண்டிகளில் கட்சிக் கொடி கட்டுவது, மைக் செட் கட்டுவதுன்னு எல்லாமே மொத்தமா முடங்கிடும் போலிருக்கே! இதுக்கு ஏதாவது ஒரு வழியை உடனே சொல்லுங்களேன்" என்கின்றனர் கதறலாக...

தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது.

ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close