Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுவிலக்கை பற்றி கருணாநிதி பேசக்கூடாது- தருமபுரி பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெ. பேச்சு !

யார் வேண்டுமானாலும் மதுவிலக்கை பற்றி பேசலாம். ஆனால், கருணாநிதி பேசக்கூடாது, திமுகவினர் பேசக்கூடாது என்று தருமபுரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசினார்.

தருமபுரியில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த தேர்தல் பொதுக்கூட்டத்தின் வாயிலாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். தமிழகம் அமைதி பூங்காவாக மாற வேண்டும், தமிழக மக்கள் எவ்வித அச்ச உணர்வின்றி வாழ வேண்டும், தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும், அந்த வளர்ச்சியின் பயனை ஒருசிலர் மட்டும் பெறாமல் ஒரு குடும்பத்தினர் மட்டும் பெறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன் அடைய வேண்டும்.

ஏழை, எளியவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிட வேண்டும், ஏழைகள் தங்கள் சொந்த கால்களிலேயே நிற்க திறன் பெற்றிட வேண்டும், அதுவரை அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு அளித்திட வேண்டும், என்னும் காரணங்களுக்காக தமிழகத்திலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய நீங்கள் 2011ல் வாக்களித்தீர்கள். நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தால் உங்கள் வாழ்வு ஏற்றம் பெற்றது. தமிழகம் வளர்ச்சி பாதையில் விரைந்துள்ளது. இந்த வளர்ச்சியும், தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியும் தாெடர்ந்து நிலைத்திட எனது தலைமையினான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு தொடர வேண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி நீடித்திட வேண்டும். எனவே வருகின்ற மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும்.

இப்போது அண்மை காலமாக யாரை பார்த்தாலும் மதுவிலக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் திமுக தலைவர் கருணாநிதி மதுவிலக்கை பற்றி மிகவும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும் மதுவிலக்கை பற்றி பேசலாம். ஆனால், திரு கருணாநிதி பேசக்கூடாது, திமுகவினர் பேசக்கூடாது. மதுவிலக்கு கொண்டு வருவதை பற்றி பேசுவதற்கு திரு கருணாநிதிக்கும் அருகதை இல்லை, திமுகவினருக்கும் அருகதை இல்லை. ஏனென்றால் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்தது. அதை நீக்கியதே திரு கருணாநிதிதான். 1971ம் ஆண்டு திரு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான் பூரண மதுவிலக்கை நீக்கும் உத்தரவை வெளியிட்டு அதன் பின்னர் ஒரு தலைமுறையையே குடி பழக்கத்திற்கு ஆட்படுத்தியுள்ளார். எனவே, திரு கருணாநிதி மதுவிலக்கை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமான காரியம். அவர் இதை பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தபடும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும், பின்னர் சில்லறை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரணமதுவிலக்கு என்ற லட்சியத்தை நாம் அடைவோம். (இதைத் தொடர்ந்து தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை புள்ளி விவரத்துடன் அவர் பேசினார்)

நான் கூறிய புள்ளி விவரங்களில் இருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. கடந்த ஐந்தாண்டில் உங்கள் சகோதரி அரசு ஆளும் கட்சியின் தொகுதி, எதிர்க்கட்சிகளின் தொகுதி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை சமமாக நிறைவேற்றி உள்ளது என்ற உண்மை இப்போது உங்களுக்கு தெரிவாக தெரிந்திருக்கும். அனைத்து மக்களும் என் மக்கள், அனைத்து தொகுதிகளும் என் தொகுதிகள் என்ற உணர்வோடுதான் நான் பணியாற்றி வருகிறேன். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து நான் பணியாற்றி வருகிறேன். உங்களால் நான், உங்களுக்காகவே நான். உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியை கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியை கொடுக்கிறதோ, அதுபோல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்திருக்கிறது. இந்த வசந்தம் தொடர்ந்திட, ஏழைகள் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்திட மின்வெட்டே இல்லை என்ற நிலை நீடித்திட, பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திட, தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்திட, தொழிலாளர் நலன் பெருகிட, விவசாயம் விருத்தி அடைந்திட, சேவைத்துறை மேலும் செழித்திட, தமிழகம் தாெடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றிட, தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்பட, தற்போது உள்ள நலத்திட்டங்கள் நீடித்திட, அமைதி வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட வருகின்ற மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிற அஇஅதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

சென்னையிலும், விருத்தாசலத்திலும், தருமபுரியிலும் ஜெயலலிதா ஒரே விதமான பேச்சையே பேசினார். புதிதாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம், கெயில் திட்டம் பற்றி பேசினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ