Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது ஒழிப்புப் போராளி சாம்பு உயிருடன் இருக்கிறாரா? போலீசுக்கு நெருக்கடி முற்றுகிறது!

மது ஒழிப்புக் கொள்கையில் உறுதியாய் நிற்கிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.  செல்போன் கோபுரம் மீதேறி மதுவிலக்குப் போராட்டத்தை நடத்திய   சசிபெருமாள் அதே போராட்டக் களத்தில்தான் தன்னுடைய உயிரை  தியாகம் செய்தார்.

சசிபெருமாளோடு தொடர்ந்து மது விலக்குக் கொள்கைக்காக பயணித்த சாம்பசிவராவ் என்கிற போராளி, கடந்த 6-ம் தேதியில் இருந்து மர்மமான முறையில் தொலைந்திருக்கிறார்.
ஆளுங் கட்சியான அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பாக,  மதுவிலக்கு அமல் கோரி இரவு 10 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவரை,  ராயப்பேட்டை போலீசார் கைது செய்து போலீஸ் ஜீப்பில் கொண்டு போயுள்ளனர்.

அங்கிருந்தபடியே தன்னுடைய  சக போராளி நண்பர்களுக்கு ' நான் இப்போது ராயப்பேட்டை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் போலீஸ் ஜீப்பில் இருக்கிறேன்' என்ற குறுஞ் செய்தியை செல்போனில் அனுப்பியுள்ளார்.


நண்பர்கள் பதறியடித்து போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து தகவல் கேட்க, " அவரை விடுவித்து விட்டோம், காலாற காற்று வாங்க கடற்கரைப் பக்கம் போவதாக சொல்லிப் போனார்" என்ற தகவலைக் கொடுத்துள்ளனர்.

காற்று வாங்கப் போன (?!) சாம்பசிவராவ் இதுவரை திரும்பவில்லை...

'சாம்பசிவராவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுங்கள்' என்ற கோரிக்கையுடன்  பல மாவட்டங்களில் இருந்து மது ஒழிப்பு ஆர்வலர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர். அதில் ஒருவர் பவானிசாகரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு.

அவரிடம் கேட்டபோது, "சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை  போலீசாரிடம் போனில் பேசினேன், இன்ஸ்பெக்டரிடமும் பேசினேன். அவர்களும், 'அவரை விசாரித்து விட்டு உடனே அனுப்பி விட்டோம். அவர் பீச்சுக்குப் போவதாக சொல்லி விட்டுப் போனார். அதற்குப் பின்னால்  எங்கே போனார் என்று தெரியாது' என்கின்றனர். போலீஸ் உதவி. கமிஷனர் சங்கரும்  அதையேத்தான் சொன்னார்.

சாம்பசிவ ராவ் மாயமான  6.04.2016 அன்று, காலை மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்திருக்கிறது. அதில் கைதானவர்களில் சாம்பசிவராவும் ஒருவர். கைதான அனைவரையும் அன்று மாலையே போலீசார் விடுவித்துள்ளனர்.
சாம்பசிவராவ் மட்டும் போலீசார் விடுவித்த பின்னரும் மதுவிலக்கு கோரிக்கையை முன் வைத்து அதே இடத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.  இதனால் அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அப்போது இரவு 10 மணி இருக்கும். அதற்குப் பின்னர்தான் அவர் போலீஸ் பிடியில் இருந்து கொண்டே அனைவருக்கும் தன்னுடைய செல்போனில் மெசேஜை அனுப்பினார்.  நாங்கள் ஒவ்வொருவராக பல ஊர்களில் இருந்து எங்கள் போராளி சாம்பசிவராவைத் தேடி வந்து கொண்டிருக்கிறோம்...
இனிமேலும் அவர் கிடைப்பாரா என்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், அவரால் மதுவுக்கு எதிராக ஒருநாள் கூட பேசாமல் சும்மா இருக்க முடியாது. ஒருவாரமாக அவர் அமைதியாகி இருக்கிறார் என்பதே எங்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது" என்கிறார் தங்கவேலு.

என் மீது இதுவரையில் எத்தனை வழக்குகளை இந்த அரசுகள் போட்டிருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு எண்ணிக்கைகள் போய்க் கொண்டேதான் இருக்கிறது' என்கிறார் மதுரை சட்ட மாணவி நந்தினி.
மதுவுக்கு எதிராக நடந்து நடந்து இப்போது நடக்கவே முடியாதபடி தளர்ந்து போய் கிடக்கிறார் இன்னொரு போராளி குமரி அனந்தன்.

சசிபெருமாள் என்ற பிம்பம் தொலைந்தே தொலைந்து விட்டது.

சாம்பசிவராவ், இந்த மதுவிலக்குப் போராட்டப் பயணத்தின் மிச்சமிருந்த முக்கிய அடையாளம் !

பெற்றோர், உறவினர் என்று யாருமில்லாத இந்த  பிரம்மச்சாரி போராளிக்கு அவர் வசித்து வந்த குரோம்பேட்டை, லூர்து மாதாகோவில் தெரு இளைஞர்கள் வைத்திருக்கும் பெயர், சாம்புமாமா...

போராட்டக் களத்துக்கு சாம்பு மாமா மீண்டும் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்...!


  - ந.பா.சேதுராமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ