Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேறு வேட்பாளர்களே கிடைக்கவில்லையா? - இது பாளையங்கோட்டை கலாட்டா!

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்தக் கட்சியினரே எதிர்ப்பு காட்டி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டு உள்ளார். குமரி மாவட்டத்தை சேர்ந்தவரான அவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ளார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பெருமளவில் வசிக்கும் இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என உள்ளூரைச் சேர்ந்த மகபூப்ஜான், அசன் ஜாஃபர் அலி, மாவட்ட மாணவரணிச் செயலாளரான ஜெரால்ட், மாநகராட்சி மண்டல சேர்மனான எம்.சி.ராஜன் உள்ளிட்ட பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெளியூரைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு இருப்பது கட்சிக்காரர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு பலரும் ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்கள். அத்துடன், வேட்பாளரை மாற்றக்கோரி போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்மகன் உசேனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அச்சம் அடைந்துள்ள அவர், இது பற்றி கட்சித் தலைமைக்கு புகார் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் பட்டியல் நேற்று (13-ம் தேதி) அறிவிக்கப்பட்டது. அதில் பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளராக ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவரான டி.பி.எம்.மைதீன்கான் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. நான்காவது முறையாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் இதனை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இந்த தொகுதியில் தனக்கு ‘சீட்’ கிடைக்கும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வகாப் கடும் அதிருப்தி அடைந்தார். அதனால், அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மைதீன்கானின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் வகாப் ஆதரவாளர்களான 10-வது வார்டு செயலாளர் பாபுகுமார், 16-வது வார்டு செயலாளர் ரகமத்துல்லா, மாநகர ஆதிதிராவிடர் நலக்குழுவை சேர்ந்த லாரன்ஸ் ஆகியோர், ‘‘கடந்த 15 வருடமாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வரும் டி.பி.எம்.மைதீன்கான் பொது மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரது பெயரைக் கேட்டாலே மக்களுக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் வேறு ஆளே இல்லையா? ஏன் அவருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்?

பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க.வின் கோட்டை. இங்கு யாரை நிறுத்தினாலும் சுலபமாக ஜெயித்து விட முடியும். அதனால் அவரை மாற்றி விட்டு வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த தொகுதியில் உள்ள 35 வார்டுகளில் 30 வார்டுகளின் செயலாளர்கள் சேர்ந்து அவரை மாற்ற வேண்டும் என்று தலைமைக்கு கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவரை மாற்றாவிட்டால் தோற்கடிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியே கிடையாது. அதனால் கட்சித் தலைமை இந்த பிரச்னையில் உடனே தலையிட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்’’ என்றார்கள்.

நெல்லை மாவட்டத்தில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக முக்கிய கட்சிகளை சேர்ந்த கட்சிப்பிரமுகர்களே கலகக் குரல் எழுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

-ஆண்டனிராஜ்

படம்: எல்.ராஜேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ