Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரி வேட்பாளராக ஆஸ்டின்... பதற்றத்தில் தளவாய் சுந்தரம்?

ருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளர்களை கடந்த 4-ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். அதில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு கன்னியாகுமரி தொகுதிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். நேற்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.வுமான ஆஸ்டினை கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்திருக்கிறது.

''இது தளவாய் சுந்தரத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரை பிரசார வண்டியிலேயே நின்று கையசைத்து வாக்கு சேகரித்த தளவாய் சுந்தரம், தற்போது வண்டியில் இருந்து கீழே இறங்கி வாக்கு சேகரிக்கத் தொடங்கி இருக்கிறார். ஆஸ்டின் வேட்பாளரானது அவருக்கு கொஞ்சம் பயத்தை உண்டுபன்னியுள்ளது.

"ஆஸ்டின் கடனில் இருக்கிறார் அவரால் உங்களுக்கு எந்தளவு நன்மை கிடைக்கும் என தெரியாது. எனக்கு பயந்து, என்னோடு மோத தைரியம் இல்லாமல் சுரேஷ்ராஜன் தொகுதியை மாற்றி கொண்டு நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்" என தளவாய் சுந்தரம் வீதிக்கு வீதி பேசுகிறார். அம்மாவின் நலத்திட்டங்களை சொல்வதற்கு பதிலாக மற்ற கட்சி வேட்பாளர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார்" என்கிறார்கள் குமரி அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க.வினர் சொல்வதுபோல் உண்மையிலேயே தளவாய் சுந்தரத்திற்கு பயமா? அதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, அ.தி.மு.க.வினரே தளவாய் சுந்தரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வாசிக்கின்றனர். ''ஆஸ்டின், பார்த்தசாரதி, கேட்சன், ஜெ.ஜெ.ஆர்.ஜஸ்டின், பூதலிங்கம் பிள்ளை, எம்.எம்.பால்ராஜ் போன்றவர்கள் குமரி அ.தி.மு.க.வின் பவர்ஃபுல் மனிதர்களாக வலம் வந்தனர். இவர்கள் தளவாயின் நெருக்கடியினாலே தி.மு.க.வுக்கு சென்றுவிட்டார்கள்.

தளவாய் சுந்தரத்திற்கு யாராவது ஆக்டிவ்வாக செயல்பட்டாலே பிடிக்காது. உடனே அவர்கள் தனக்கு நிகராக வந்து விடுவார்களோ என எண்ணி கட்டம் கட்டிவிடுவார். அதனால் ஏற்படும் மன உளைச்சலினால் மாற்றுக் கட்சிக்கு அ.தி.மு.க.வில் இருந்து பலரும் போய் விட்டனர்.

அதில் தி.மு.க. கூடாரத்திலே தஞ்சமடைந்தவர்கள் தான் அதிகம். அதிலும் பலர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இப்போதும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் செல்வாக்கு உண்டு.

ஆஸ்டின் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால், கன்னியாகுமரி தொகுதியில் போட்டி கொஞ்சம் கடுமையாகதான் இருக்கும். அதனல் தான், ''ஆஸ்டின் கிறிஸ்தவ நாடார், குமரியில் இதுவரை இந்துக்களே போட்டியிட்டுள்ளனர்.

ஆஸ்டினுக்கு தி.மு.க.வினரிடமே எதிர்ப்பு உள்ளது என தி.மு.க. தலைமையிடம் முறையிடுங்கள்" என்று தி.மு.க.வின் குமரி தொகுதிக்கு உட்பட்ட மூன்று ஒன்றிய செயலாளர்களை வளைத்து சென்னைக்கு அனுப்பி உள்ளார் தளவாய் சுந்தரம். இதற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை கைமாறியுள்ளது.

இது தவிர, தளவாய் சுந்தரம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் பிரபலமான மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வாங்கி கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அது அம்மாவின் கவனத்தை திசை திருப்பி அனுமதி கொடுத்ததாம்.

தற்போது, அது சம்பந்தமான பைல்கள் தி.மு.க.விடம் சிக்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள். அதனாலும் தளவாய் சுந்தரம் தேர்தல் பயத்தில் இருக்கிறார்" என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

- த.ராம்
படங்கள்:
ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ