Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆலயம் தொழுத வானதியை சிக்க வைத்த 'வாட்ஸ் அப்'..!

 

தேர்தல் விதிமுறையை மீறி, கோவை தெற்கு தொகுதி பா. ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன்,  கோயில் வளாகத்தில் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரிப்பது போன்ற புகைப்படம்,  வாட்ஸ் அப்பில் பரவியதைத் தொடர்ந்து,  அவர் மீது 3 பிரிவுகளில் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில்,  பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், வித்தியாசமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். வழக்கமான பிரசாரமாக இல்லாமல் நூதன பிரசாரங்களை பா.ஜனதா கட்சியினர் செய்து வருகிறார்கள். கல்லூரி மாணவ, மாணவிகளுடன் விவாதிக்கும் வகையில், 'காபி வித் வானதி' என்ற நிகழ்ச்சியை தனியார் ஷாப்பிங் மாலில் நடத்திய வானதி சீனிவாசன், மலையாள மக்களின் பண்டிகையான விஷூ பண்டிகையையொட்டி, கோவையில் வசிக்கும் மலையாள மக்களுக்கு மலையாளத்தில் அச்சிடப்பட்ட, வாழ்த்து மற்றும் வாக்கு சேகரிப்பு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு கேட்டார்.

மேலும் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற விஷூ விழாவிலும்,  தனது தொண்டர்களுடன் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், அங்கும் வாழ்த்து மற்றும் வாக்கு சேகரிப்பு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை கேரள மக்களிடம் விநியோகித்து,  வாக்கு கேட்டார். ‘ஆலயம் தொழுவோம் வானதியுடன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, மேலும் சில கோயில்களிலும் அடுத்தடுத்து நடைபெற்றது. இதனிடையே சித்தாபுதூர் ஐயப்பன்கோயில், வாசவி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி,  கோயில் வளாகத்துக்குள் சென்று அவர் வாக்கு சேகரித்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
 

இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, "கோவையில் கேரள மக்களின் வாக்குகள் அதிகமிருப்பதாலும், விஷு பண்டிகையை முன்னிட்டும் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி வாக்கு சேகரித்தேன். அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுவதற்காகவும், வழிபாட்டுக்காகவும் மட்டுமே கோயிலுக்குள் சென்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்பதால், துண்டு பிரசுரத்தில் மலையாளத்தில் எழுதியிருப்பதை படித்துக் காட்டுமாறு பெண் ஒருவரிடம் கேட்டேன். மற்றபடி கோயில்களுக்குள் எங்கும் வாக்கு சேகரிக்கவில்லை. அது விதிமீறல் என்பதும் எனக்குத் தெரியும். அடுத்ததாக ‘உங்களுடன் வானதி’ என்ற நிகழ்ச்சி மூலம் பெண்கள், துப்புரவுப் பணியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்" என்றார்.

இதற்கிடையே வானதி, கோயில் வளாகத்தில் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரிப்பது போன்ற புகைப்படம் வாட்ஸ் அப்பில் பரவியதால், தேர்தல் விதிமுறையை மீறி வானதி சீனிவாசன் வாக்கு சேகரித்ததாக,  அவர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி ருக்மணி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வானதி சீனிவாசன் மீது  3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


-ச.ஜெ.ரவி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close