Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைதீன்கானுக்கு எதிராக உடன்பிறப்புகளின் போர்க் கொடி! - பாளை பரபரப்பு

 

நெல்லை மாவட்டம்,  பாளையங்கோட்டை தி.மு.க வேட்பாளரை மாற்றக்கோரி அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த மூன்று முறை,  இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால்,  அவருக்கு எதிரான கோஷ்டியை சேர்ந்த மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல்வகாப் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதனால் அறிவிப்பு வந்த நாள் முதலாகவே உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம், கருணாநிதி இல்லம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் தி.மு.க.வின் ஒரு பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களை கண்டு அஞ்சி மைதீன்கானை கட்சித் தலைமை மாற்றிவிடும் என அப்துல்வகாப் ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனாலும், கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மைதீன்கான் இன்று (16ம் தேதி) சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் ரயில் நிலையத்தில் சிறப்பான வகையில் வரவேற்பு கொடுத்தனர். அத்துடன், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார். இதனால் கடுப்படைந்த மைதீன்கானின் எதிர்ப்பாளர்கள், அவரது பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வகாப் ஆதரவாளரும் ஆதிதிராவிட நலக்குழுவின் துணை அமைப்பாளருமான லாரன்ஸ் சிவன் என்பவர்,  செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் அவரை கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த லாரன்ஸ் சிவன், ‘பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளைரை தி.மு.க தலைமை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டினார். அவருடன் தீயணைப்புத் துறையினர் பேச்சுவாரத்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர்.

இது பற்றி அவர் கூறுகையில், ‘‘கடந்த 15 வருடமாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் டி.பி.எம்.மைதீன்கான் கட்சியினருக்கும், தொகுதிவாசிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. தொகுதி மக்களை மதிப்பதும் கிடையாது. அவரை பொதுமக்கள் சந்திக்கவே முடியாத நிலைமைதான் கடந்த 15 வருடமாக இருந்தது. இந்த தொகுதியை பொறுத்தவரை தி.மு.க.வின் கோட்டை. அதனால் மறுபடியும் அவர் வெற்றி பெற்று விடுவார். ஆனால், அவரை பொதுமக்கள் சந்திக்கக்கூட முடியாது. அவர் மீது பொதுமக்களுக்கு கடுமையான அதிருப்தி இருப்பதால் அவரை உடனே மாற்ற வேண்டும். தொண்டர்களையும், தொகுதி மக்களையும் அரவணைத்து செல்வதுடன் எளிமையாக பழகக்கூடிய வேறு நபரை இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதனை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன்’’ என்றார்.

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் சிவனை கைது செய்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேட்பாளருக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள் தி.மு.க தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

-ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ