Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1000 கோடிக்கு 'நோ', 1500க்கு 'ஓகே'..!- கருணாஸ் என்ன சொல்கிறார்..?


 

"1000 கோடிக்கு அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவில்லை. வெறும் 1500 ரூபாய் கூட மதிப்பு இல்லாத எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் அம்மா" என்று ராமநாதபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நடிகர் கருணாஸ்  பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது அமைப்பின் ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கருணாஸுக்கு திருவாடனை தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். இது திருவாடனை தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்லாது, தேவர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. கருணாஸுக்கு கொடுத்த வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி,  மதுரையில் தேவர் அமைப்புகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இவற்றை கண்டு கொள்ளாத கருணாஸ் தனது பிரசார பணிகளை துவங்கிவிட்டார்.

ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுவினர், தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் திருவாடனை தொகுதியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான வ.து.நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, அன்வர்ராஜா எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் தாலுகா பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேன்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவர்கள் மத்தியில் உரையாற்றிய கருணாஸ், "அம்மா அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பினால் உங்களை சந்திக்கும் தருணம் கிடைத்திருக்கிறது. நான் திருவாடனை தொகுதியில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாளை வழிபடுபவன். அங்குதான் எனக்கு முதல் மொட்டை போட்டார்கள். மக்கள் பணி செய்ய அங்கீகாரம் கேட்ட எனக்கு,  நான் வணங்கும் பாகம்பிரியாள் கோயில் அடங்கியுள்ள திருவாடனை தொகுதியினையே தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த மண்ணின் மைந்தனான நான் நடுநிலையோடும், உறுதியோடும் இருப்பேன்.

கோடீஸ்வரர்கள் எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருந்தார்கள். 1000 கோடிக்கு அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவில்லை. வெறும் 1500 ரூபாய் கூட மதிப்பு இல்லாத எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் அம்மா. நான் பொய் சொல்ல மாட்டேன். எந்த நிலையிலும் விலை போக மாட்டேன். எனது பெயரை புரட்சித்தலைவி அம்மா அறிவித்த போதே நான் பிறந்த பயனை அடைந்துவிட்டேன். எனது பிறப்பு, இறப்பு எல்லாம் அம்மாவுக்காகதான். நான் ஒரு குழந்தை. என்னை யார் வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். ஆனால் அம்மாவின் பாதையாக இருக்க வேண்டும்.

என்னை நடிகனாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித பூமியான ராமேஸ்வரம்தான். அங்கே உருவான சுயம்புதான் இப்போது அதே மாவட்ட மண்ணில் வேட்பாளராக உருவெடுத்திருக்கிறது. எனவே வரும் நாட்களை எல்லாம் விரத நாட்களாக கருதி உழைக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் அடிமையான என்னை வெற்றி பெற வையுங்கள்" என்றார்.

-இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close