Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்டனை சமரசம் செய்தாரா தம்பிதுரை? -பழனியப்பனுக்கு சீட் கொடுத்த மர்மம்

ருமபுரி அ.தி.மு.கவில் மீண்டும் புகைச்சல் எழ ஆரம்பித்திருக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் மீண்டும் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுவதுதான் சர்ச்சைக்குக் காரணம். இதற்குப் பின்னால் நடந்தேறிய வேலைகளும் மலைக்க வைக்கிறது.

தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதன்முறையாக ஜெயலலிதா அறிவித்தபோது, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பெயர் அதில் இடம்பெறவில்லை. கார்டன் டீமின் விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ் வசமாக சிக்கியபோது, பழனியப்பனும் சேர்ந்தே சிக்கினார். அதிலும், பழனியப்பனின் வடமாநில அரசியல்வாதிகளுடனான வர்த்தகத் தொடர்புகள் கார்டனை ரொம்பவே அதிர வைத்தது. 'நீண்ட நாட்கள் வீட்டுச் சிறையிலேயே அவர் வைக்கப்பட்டிருந்தார்' என்கின்றனர் தருமபுரி அ.தி.மு.கவினர்.

வேட்பாளர் பட்டியலில் பழனியப்பன் பெயர் இல்லாததால், கிடா விருந்து வைக்கும் அளவுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். காரணம், அமைச்சராக இருந்தபோது, கட்சிக்காரர்களை மதிக்காமல் போனதுதான். இந்நிலையில், இன்று வெளியான அறிவிப்பில்,  'பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பன் போட்டியிடுவார்' என அ.தி.மு.க தலைமை தெரிவித்தது. கார்டனின் 'திடீர்' மனமாற்றத்தை நம்ப முடியாமல் தவிக்கின்றனர் தருமபுரி அ.தி.மு.கவினர்.

'மீண்டும் பழனியப்பன் வருவதற்கு என்ன காரணம்?'  என தருமபுரி மாவட்ட அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் கேட்டோம்.

" எல்லாவற்றுக்கும் காரணம் தம்பிதுரை மட்டும்தான். கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் தம்பிதுரை இருக்கிறார். மாவட்டத்திற்குட்பட்டு பாலக்கோடு, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்த ஐந்து தொகுதிகளுக்கும் வலுவாக செலவு செய்ய, பழனியப்பனைத் தவிர வேறு யாருக்கும் துணிவில்லை. அந்தளவுக்கு பசையோடு இருக்கிறார் அவர். சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காவிட்டாலும், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார் பழனியப்பன். இந்தக் கூட்டத்தில் அவருக்கு எதிராக கட்சிக்காரர்கள் சிலர் பொங்கினார்கள்.

' எம்.எல்.ஏ சீட் கிடைக்கறதுக்கு முன்னாடி உனக்கு எவ்வளவு சொத்து இருந்துச்சு. இப்ப எவ்வளவு இருக்குன்னு எங்களுக்குத் தெரியும். அதை உன்னால சொல்ல முடியுமா?' என மேடையை நோக்கி சிலர் கையை உயர்த்த, ' வாங்கடா வந்து அடிங்கடா' என எதிர் சவால் விடுத்தார் பழனியப்பன். இந்தக் கூட்டத்தில் அவருக்கு அடி விழுந்தததாகவும் தகவல் பரவியது. ' பதவி இல்லாவிட்டால் பழனியப்பனைக் கொன்றே விடுவார்கள்' என கார்டனுக்கு அனுதாப கடிதங்களும் பறந்துள்ளது. இதுவும் பழனியப்பனின் கைங்கர்யம்தான். தவிர, ஏப்ரல் 13-ம் தேதி ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில்,  மேடைக்கு மட்டும் நாற்பது லட்ச ரூபாய் வரையில் செலவழித்தார் பழனியப்பன். அந்தக் கூட்டத்திற்கு திரட்டப்பட்ட வாகனம் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.2 கோடி வரை ஏற்பட்ட செலவைப் பற்றி பழனியப்பன் கண்டுகொள்ளாததால், முழிபிதுங்கிப் போனார் மாவட்டச் செயலாளர் அன்பழகன்.

இந்நிலையில், மீண்டும் பழனியப்பனுக்கு சீட் கிடைக்க களத்தில் இறங்கினார் தம்பிதுரை. மா.செ அன்பழகனிடம், ' பாலக்கோட்டை விட்டுக் கொடுத்துவிட்டு, பென்னாகரத்தில் போட்டியிடு' என்று சொல்ல, மறுத்துவிட்டார் அன்பழகன். பெண்ணாகரத்தில் கே.பி.முனுசாமி பலியாக்கப்பட்டுவிட்டார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர் பிடிவாதமாக இருந்ததால், மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடுகிறார் பழனியப்பன். அங்கு ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குப்புசாமியைக் கழட்டிவிட்டுவிட்டார்கள். இத்தனைக்கும் பழனியப்பனின் வேளாளக் கவுண்டர் சமூகத்திற்கு முப்பதாயிரம் ஓட்டுக்கள் மட்டுமே தொகுதியில் உள்ளது. 55 சதவீதம் வன்னியர்கள் நிரம்பியுள்ள பகுதி.

மீண்டும் சீட் கிடைப்பதற்காக, தம்பிதுரையிடம் அவர் கொடுத்த ரகசிய வாக்குறுதி என்னவென்றால், ' மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான். அடி வாங்கிய அனுதாபமும் கரன்சியை இறைக்கக் கொடுத்த வாக்குறுதியும்தான் பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பன் கொடி பறக்கக் காரணம். தம்பிதுரையின் சமாதானத்தை கார்டனும் ஏற்றுக் கொண்டது" என்றார் அவர் விரிவாக. 

'தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வார் பழனியப்பன்?' என தருமபுரி அ.தி.மு.கவில் பட்டிமன்றம் நடந்தாலும், அவரது எதிர்த்தரப்பு இன்னமும் புகைச்சலில் இருக்கிறது.

ஆ.விஜயானந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close