Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுவிலக்கு பற்றி பேசுபவர்களே மது ஆலைகளை நடத்துகிறார்கள்! -சுளீர் விஜயகாந்த்

ஓசூர்: மதுவிலக்கு பற்றி பேசுபவர்களே மது ஆலைகளை நடத்துகிறார்கள் என்று ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று இரவு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது ''இந்த தேர்தலில் நான், வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய 6 பேரும் ஒன்றாக சேர்ந்துள்ளோம். இந்த தேர்தல் ஒரு புனிதப்போர் ஆகும். எங்கள் அணியில் உள்ளவர்கள் நல்லவர்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீயவை. அவர்கள் இந்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தார்கள். இப்போது தி.மு.க. மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறது. அ.தி.மு.க.வோ படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறுகிறது. அந்த கட்சியின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டசபையில் மதுவிலக்கு கொண்டு வர மாட்டோம் என்கிறார். இதில் எதை மக்கள் நம்புவார்கள்.

மதுவிலக்கை பற்றி பேசக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். அதனால், மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தகுதி இல்லை. இன்று மதுவால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட கூடிய மக்களுக்குகூட, ஆறுதலாக இருப்பது நாங்கள் தான்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம் தருவதாகவும், ஏற்றம் தருவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியில் மாற்றம் வந்ததா? ஏற்றத்தை தான் தந்தாரா? உங்கள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. உங்களை சந்தித்துள்ளாரா? ஆனால் நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தருவோம். மாணவிகளுக்கு என்று மாலை நேர கல்லூரி தொடங்குவோம். தமிழ்நாடு முழுவதும் கல்வி தரத்தை மேம்படுத்த பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம். மருத்துவமனைகள் அனைத்தும் நவீன மயமாக்கப்படும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது, மதுவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இந்த தேர்தலில் நீங்கள், தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ