Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியை எதிர்த்து அமைச்சர் காமராஜ்? வேட்பாளர் மாற்றத்திற்கு தயாராகும் அதிமுக

 

அதிமுக வேட்பாளர் பட்டியலை 7 முறை மாற்றி அமைத்த அதிமுக தலைமை, 8 வது முறையாக திருவாரூர் தொகுதிக்கு மாற்று வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் திருவாரூர் தொகுதி அதிமுகவினர்.

திருவாரூர் தொகுதியில், திமுக தலைவர் கருணாநிதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே,  திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம். திருவாரூர் மாவட்ட பொருளாளராக பொறுப்பு வகிக்கும் இவருக்கு,  நன்னிலம் அருகேயுள்ள மாப்பிள்ளைகுப்பம் சொந்த ஊர். நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட இவர், அதிமுக தலைமையின் நேர்காணலுக்கு அழைக்கப்படாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

திருவாரூர் மாவட்டத்திலிருந்து  நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, மூன்றாம் நாள்தான் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில்தான் அதிமுகவினரே எதிர்பாராத நிலையில் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அடிப்படையில் இவரது தொழில் காண்ட்ராக்டர். கட்சியினுடைய அனுதாபியாக மட்டுமே இருந்தவருக்கு பொருளாளர் பதவி, எம்எல்ஏ சீட் கிடைத்ததெல்லாம் அமைச்சர் காமராஜின் தீவிர ஆதரவாளர் என்பதுதானாம். கருணாநிதியை எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு இவர் வலிமையான நபர் கிடையாது என அதிமுகவினரே பேசுகிறார்கள்.

இந்நிலையில் நன்னிலம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜூக்கு எதிராகவும், ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டினார்கள் அதிமுகவினர்.

நன்னிலம் தொகுதி,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. எனவே, அமைச்சர் காமராஜ் மட்டுமல்லாமல் யாரை நிறுத்தினாலும் நன்னிலத்தில் அதிமுக வெற்றி பெறும் என்கிறார்கள். ஆனால், திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவதற்கு தகுதியானவர் கிடையாது. தொகுதிக்கு அதிகம் அறிமுகம் இல்லை, கட்சிகாரர்களுடன் இணக்கமும் கிடையாது. எனவே கருணாநிதி எதிர்த்து போட்டியிட வேண்டுமென்றால் தொண்டர்கள் பலத்துடனும், பணபலத்துடனும் இருக்கும் ஒருவரைத்தான் தலைமை அறிவித்திருக்கிற வேண்டும். இதையெல்லாம் கார்டனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறார்கள்.

எனவே, கருணாநிதியை எதிர்த்து அதிமுகவில் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் காமராஜ்தான். அவர் இங்கு போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். கருணாநிதிக்கு இணையாக தேர்தலை சந்திக்க முடியும் என்பதால், அதிமுக தலைமையிலிருந்து எந்தநேரம் வேண்டுமானாலும் திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் காமராஜ் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இன்று அல்லது நாளை வேட்பாளர் மாற்றம் இருக்கலாம்.

-ஏ.ராம்

 
 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ