Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடதுசாரிகளுக்கு என்னதான் ஆச்சு...?

தேர்தல் வெற்றி தோல்விகளை தாண்டி வெகுமக்களுக்கு எப்போதும் இடதுசாரிகள் மீது ஒரு நல் அபிப்ராயம் இருக்கும். ஏன் தீவிர வலதுசாரிகள் கூட, இடதுசாரிகளின் அர்ப்பணிப்பை மெச்சுவார்கள். வார்டு அளவில் ஏதாவது பிரச்னை என்றால் கூட முதலில் தட்டப்படும் கதவுகள் இடதுசாரிகளின் வீட்டு கதவுகளாகதான் இருக்கும். இடதுசாரிகள் போராட்டம் நடத்தாத வாராந்திர குறை தீர்ப்பு கூட்டத்தை எந்த மாவட்டத்திலும் பார்த்திருக்க முடியாது.

தமிழகத்தில் உங்களுக்கு  பிடித்த ஐந்து தமிழக அரசியல் தலைவர்களை பட்டியிலிடுங்கள் என்றால், அதில் நிச்சயமாக நல்லக்கண்ணுவும் இருப்பார். நாம் ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும் இன்றும் அரசியலில் எளிமையாக இருப்பவர்கள் இடதுசாரிகள்தான். ஆனால், இவ்வளவு நேர்மறையான குறிப்புகள் இருந்தும், இன்று பலர் எழுப்பும் கேள்வி, ‘இடதுசாரிகளுக்கு என்னதான் ஆச்சு...?’ என்பதுதான்.

திராவிட கட்சிகளை இனி நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள்?:

பாலபாரதி, டில்லிபாபு, நல்லக்கண்ணு ஆகியோருக்கு போட்டியிட கட்சி சட்ட திட்டங்கள் அனுமதிக்காததால் மட்டும் எழும் கேள்வி அல்ல இது. வாய்ப்பு தருவதும், மறுப்பதும் அவர்கள் உட்கட்சி விவகாரமாக இருக்காலாம். ஆனால், வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசியல் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் உட்கட்சி விவகாரம் அல்ல.

தளி ராமசந்திரனைதான் குறிப்பிடுகிறேன். பல கொடும் வழக்குகள் நிலுவையில் உள்ள, கனிம வளங்களை சுரண்டுவதாக தொடர் குற்றசாட்டுக்கு உள்ளான, குண்டர் சட்டத்தில் கைதான ஒருவரை இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி, தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது என்பதை எப்படி சாமான்யன் எடுத்துக் கொள்வது?. கம்யூனிஸ்ட்களின் கரங்களும் கறைபடிந்துவிட்டது என்றா... அல்லது கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தேர்தல் வெற்றி மட்டும்தான் முக்கியம் என்றா...?

'ஏன் எங்களை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள் ?  திமுக, அதிமுகவில் எத்தனை குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் இருக்கிறார்கள் ?' என்கிற உங்கள் வாதம் நிச்சயம் சாமான்யனிடம் எடுபடாது. ஏனென்றால் மக்கள் உங்கள் இருவரையும் சமமாக எக்காலமும் பார்க்கவில்லை. தேர்தல் வெற்றி தோல்விகளை தாண்டி,  உங்களை எப்போதும் தன் சக தோழனாகதான் பார்த்து இருக்கிறார்கள். சாமான்யன் அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருப்பதும் உங்களால்தான் என்னும் போது, நீங்கள் அதிக நேர்மையாக இருப்பது உங்கள் கடமை ஆகிறது.

ஏன் உங்களிடம் நேர்மையான வேட்பாளர்கள் இல்லையா...?  எளிமையான வேட்பாளர்களாகிய பவானிசாகர் சுந்தரம்,  திருத்துறைப்பூண்டி உலகநாதனை அடையாளம் காட்டியது போல் உங்கள் கட்சியில் இன்னொரு எளிமையான வேட்பாளரை அடையாளம் காட்ட முடியாதா  அல்லது நீங்களும் திராவிட கட்சிகள் போல் தேர்தல் செலவுகளை சமாளிக்க சமரசம் செய்து கொள்ளப் பழகிவிட்டீர்களா? 


மாற்றத்தை அனைத்து தளங்களிலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்:

ராமசந்திரன் மலைக் கிராமங்களுக்கு சாலை போட்டார், பாலம் கட்டினார். ஆமாம்தான். ஆனால் சாலை போடுவது, பாலம் கட்டுவது மட்டுமல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பணி. அதுவும் ஒரு இடதுசாரி இதை மட்டும் தன் சாதனையாக சொல்லக்கூடாது. கனிம வளக் கொள்ளைக்கு எதிரானவனாக இருக்க வேண்டும், வளத்தை சுரண்டுபவனாக இருக்கக் கூடாது. எளிய மக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டுமே தவிர எளிய மக்களை அச்சுறுத்துபவராக இருக்கக்கூடாது. 

இடதுசாரி,  மக்களோடு மக்களாக இருப்பவன். ஆனால், தளி ராமசந்திரனால் ஒரே வாகனத்தில் ஓசூரிலிருந்து சென்னை வரை பயணிக்க முடியுமா ? குறைந்தபட்சம் சேலம் வரை பயணிக்க வேண்டுமென்றால் கூட இரண்டு வாகனங்கள் மாற வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு தம் எதிரிகள் குறித்து அச்சம். ஆனால் அவர்கள் யாரும் அரசியல் எதிரிகள் அல்ல.

மாற்றத்தை முன்மொழிபவர்கள், இத்தகையவருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதன் மூலம் பொது சமூகத்திற்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார்கள்.

எனவே கூட்டணியில் மட்டும் அல்ல, மக்கள் அனைத்து தளங்களிலும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை ஆரம்பித்திலேயே கருக்கி விடாதீர்கள்.


- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close