Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தோப்பு வெங்கடாசலம் vs கே.பி.சாமி - ஈரோட்டில் யார் ஜெயித்தாலும் இருண்ட காலம்தான்!

ஜாதக, நட்சத்திர, கோச்சார, பாரம்பர்ய, பொருளாதார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் தேர்தலில் வென்றால் நாட்டுக்கு நல்லது எனும் பரந்த மனப்பான்மையை அப்பாவி பொதுமக்கள் புரிந்து கொண்டே தீரவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அல்லது ம.ந.கூட்டணியோ, அக்கட்சித் தலைமைகள் மேற்கொள்ளும் வேட்பாளர் மாற்ற நடவடிக்கைகள் மக்கள் நல்லதுக்காகத்தான் என்கிறார்கள். ஆனாலும், மக்களே விரும்பி எதிர்பார்க்கிற ஓரிரு வேட்பாளர்கள் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தி.மு.க வேட்பாளர் கே.பி.சாமி. தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த என்.கே.பி.பி.ராஜாவின் தீவிர ஆதரவாளர். ஸ்டாலின் ஆசியினால் பெருந்துறை வேட்பாளராகி இருப்பவர்.  இவருக்கு எதிராக இதே பெருந்துறையின் வேட்பாளராக அ.தி.மு.க.வில் நிறுத்தப்பட்டிருப்பவர் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.

இந்த இருவர் குறித்தும் கழகத் தலைமைகளுக்கு, புகார் மனுக்கள்  பறந்து கொண்டிருக்கின்றன.

கார்டனுக்குப் போன புகாரில், கொஞ்சம் இங்கே...

"அம்மா, 2006-11 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், தி.மு.க அமைச்சர் என்.கே.பி.பி.ராஜாவும், இப்போது நம்முடைய அமைச்சராக இருக்கும் தோப்பு வெங்கடாசலமும் கைகோர்த்து செயல்பட்டனர்.

அப்போது, கொம்மக் கோவில் சின்னக்கண்ணு என்கிற கே.ஆர்.சேனாதிபதியின் பெயரிலும், நம்முடைய அமைச்சர் தோப்பின் ஊரான தோப்புப்பாளையத்தைச் சேர்ந்த டி.சி.சுப்பிரமணியம் பெயரிலும் நல்லாம்பட்டி மற்றும் தென்முகம் வெள்ளோடு ஆகிய கிராமங்களில் மண் எடுக்க தி.மு.க.வினர் அனுமதியை கொடுத்தனர். அனுமதி பெற்ற இடத்தில் இவர்கள் மண் அள்ளாமல் மணிமலைகரடு என்ற பெரிய மலையில் முறைகேடாக மண் எடுத்து கோடிக்கணக்கில் அதை விலை வைத்து விற்றனர்.

அன்று தி.மு.க அமைச்சர் ராஜாவின் தயவால் மண் அள்ளிய இந்த சேனாபதி, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர். இந்த சேனாபதிக்கு பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் வருகிற பெருந்துறை நில அடமான வங்கித் தலைவர் பதவியை நம்முடைய ஆட்சியில் அமைச்சர் 'தோப்பு' இப்போது வாங்கிக் கொடுத்துள்ளார். முன்னாள் தி.மு.க அமைச்சர் என்.கே.பி.பி.ராஜாவின் ரூட்டில்தான் நேற்று வரையில் நம்ம தோப்பு பயணம் செய்தார். இப்போது என்.கே.பி.பி.ராஜாவின் பினாமியான கே.பி.சாமி என்கிற பி.மோகனசுந்தரம் ரூட்டில் நம்ம தோப்புவின் பயணம் இருக்கிறது." - இவ்வாறு போகிறது அந்தக் கடிதம்.

கே.பி.சாமி பற்றி அறிவாலயத்துக்குப் போகும் புகார்கள்...

'வணக்கம், தலைவர் அவர்களுக்கும், தளபதி அவர்களுக்கும்! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போட்டியிட கே.பி.சாமிக்கு சீட் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி, அது உங்களைப் பொறுத்தவரை  நல்ல விஷயம்தான், எங்களுக்கல்ல.

பழனிச்சாமி- மலர்விழி தம்பதியர் மற்றும் அவர்களின் மகன் சிவபாலன் ஆகியோரைத் தாக்கியும், அவர்களின் தோப்பில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழிக்கவும் அன்றைய நம்முடைய அமைச்சர் என்.கே.பி.பி.ராஜா உறுதுணையாக இருந்தார். பெருந்துறை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்த நில அபகரிப்பு வழக்கில் நம்முடைய அமைச்சர் என்.கே.பி.பி.ராஜா வசமாகச் சிக்கிக் கொண்டதால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீங்களே (தி.மு.க தலைமை) தூக்கி எறிந்தீர்கள். அந்த வழக்கில் அவர், 14-வது குற்றவாளி.

இப்போது நீங்கள் பெருந்துறை வேட்பாளராக சீட் கொடுத்திருக்கும் கே.பி.சாமி என்கிற பி.மோகன சுந்தரம் 2-வது குற்றவாளி. 14-வது குற்றவாளியையே தூக்கி எறிந்த நீங்கள், நில அபகரிப்பு, கொலை மிரட்டல், ஆட்கடத்தல் வழக்குகளில் (இ.பி.கோ.வின் 13 பிரிவுகளில்) சிக்கியிருக்கும் 2-வது குற்றவாளியான கே.பி.சாமிக்கு சீட் எப்படிக் கொடுத்தீர்கள்?

தொகுதியில் நல்லவர்களே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அ.தி.மு.க அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் தீவிர ஆதரவாளர், பிசினஸ் பார்ட்னர் என்று பல முகங்கள் கொண்டவர்களை எப்படி தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுக்கிறீர்கள்?'" - இப்படி நீள்கிறது, அறிவாலயத்துக்கான கடிதம்.

சமூக ஆர்வலர் சி.கே.நந்தகுமார் என்பவர், அரசின் அனுமதியின்றி நிலத்தைச் சுரண்டி எடுக்கப்பட்ட மணல் குறித்த விவரங்களை ஆர்.டி.ஐ.யில் விடாமல் சேஸ் செய்து வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உரிய விசாரணையை நடத்தி,  மணல் சுரண்டல் ஆசாமிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

''தமிழக அரசுக்கு குறைந்த பட்சம் 25 கோடி ரூபாய் அளவுக்கு  இந்த மண் சுரண்டலால் (பெருந்துறையில் மட்டுமே) இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 800 கனமீட்டர் அளவிற்கு மண்ணை வெட்டியுள்ளதாக புல தணிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது'' என்று  இதுகுறித்து நம்மிடம் பேசியபோது நந்தகுமார் தெரிவித்தார்.


இரண்டு பெரிய கட்சிகளிலும் பெருந்துறையில் சீட் கொடுத்திருப்பவர்களைப் பார்த்து சொந்தக் கட்சிக்காரர்களே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டனர். இவர்களில் யார் ஜெயித்து வந்தாலும் தொகுதிக்கு எந்த நல்லதும் நடக்காது என்று இப்போதே தொகுதிவாசிகள் அங்கலாய்க்கத் துவங்கிவிட்டனர்!
 


- ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close