Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களைச் சந்திக்காத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை! -அடடே ஸ்டாலின்

சிதம்பரம்: தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மக்களை தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். அப்படி எந்த எம்.எல்.ஏ.யாவது மக்களை சந்திக்கவில்லை என்றால், அவரை நீங்கள் தண்டிப்பதற்கு முன் தி.மு.க. தலைமை தண்டிக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.செந்தில்குமாரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சிதம்பரம் மேலவிதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''கடந்த இரண்டு மாதத்துக்கு முன் நமக்கு நாமே பயணத்தின் போதும், வெள்ள சேத பாதிப்பின் போதும் உங்களையெல்லாம் சந்திக்க வந்தேன். மீண்டும் தற்போது உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு இங்கே வந்துள்ளேன். ஜெயலலிதாவை போல தேர்தலுக்கு தேர்தல் வரும் தலைவர் அல்ல நான். அவர் சீசனுக்கு சீசன் மட்டும் மக்களை சந்திப்பார்.

நமக்கு நாமே பயணத்தின்போது நிறைய கல்லூரி மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் கூறிய பெரிய பிரச்னை, 'கல்விக்கடன் வட்டியை பெற்றோர்களால் செலுத்த இயலவில்லை. அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்' என்று கூறினார்கள். இதை தலைவர் கலைஞரிடம் கூறியதும், வட்டி என்ன முழு கல்விக் கடனையும் ரத்து என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

பொய்களை பேசி மக்களை ஏமாற்றிவிடலாம் என ஜெயலலிதா எண்ணுகிறார். ஜெயலலிதா அம்மையார் செய்த ஒரே சாதனை, வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்ததுதான். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. எதையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து, மது விலக்கினை கொண்டு வருவதாகதான் இருக்கும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே இயற்கை பேரிடர்களும், உயிரிழப்புக்களும் ஏற்படும்.

சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்புக்களை ஜெயலலிதா நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினாரா? கடும் தொடர் மழையின்போதும், வெள்ள பாதிப்பின்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வோ, எம்.பி.க்களோ இங்கே வந்தார்களா? அப்படி அவர்கள் வந்தாலும், வெளிமாவட்டத்தில் இருந்து வந்த நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவதற்குதான் அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

மேலும், இந்த தொகுதியில் கொள்ளிடம், பாலமான், வீராணம் ஏரியின் உபரி நீரால் விவசாயம் என்ன பாடுபடுகிறது என்று உங்களுக்கு தெரியும். இதற்காக, இந்த பகுதியில் உள்ள அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார். இந்த தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கையான உணவு தானிய சேமிப்பு கிடங்கு, பரங்கிபேட்டை முதல் வல்லம்படுகை வரை பிச்சாவரம் சுற்றுலா மையத்தை விரிவு படுத்தபடுத்துதல், பரங்கிபேட்டையில் துறைமுகம் அமைத்தல். முதலை கடிக்கு நிறந்தர தீர்வு, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடுதல், சிதம்பரம் பாதளசாக்கடை திட்டத்தை விரிவு படுத்துதல், தேரோடும் விதியில் கான்கிரட் போட்டு தரப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மக்களை தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். அப்படி எந்த எம்.எல்.ஏ.யாவது மக்களை சந்திக்கவில்லை என்றால், அவரை 5 வருடத்திற்கு பின் தான் நீங்கள் தண்டிப்பீர்கள். ஆனால், தி.மு.க. தலைமை அவர்கள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கும்.

இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் அறிந்து அதனை வெளியிட்டுள்ளது எங்கள் கட்சி மட்டுமே. இதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதா அம்மையார் செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களை பார்த்து கேட்டார். நான் அவரை பார்த்து கேட்கிறேன். செஞ்சிங்களா? எதையாவது உருப்படியா செஞ்சிங்களா?" என்றார். அப்போது, அங்கு கூடியிருந்த தொண்டர்களின் கரகோகஷம் காதைக் கிழித்தது.

செய்தி, படங்கள்:
மு.ஜெயராஜ்
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close