Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7 பேர் விடுதலைக்கு தடை தமிழருக்கு மத்திய அரசு செய்த துரோகம்: ராமதாஸ் காட்டம்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கு விடுக்கப்பட்ட தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது தமிழருக்குச் செய்த துரோகம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 24 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை  மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதற்காக மத்திய அரசு கூறும் காரணம் ஏற்க முடியாதது ஆகும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களும் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் ஆவர். இராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி இவர்களை விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனடிப்படையில் இவர்களை விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடந்த மாதம் 2 ஆம் தேதி கடிதம் எழுதினார். அக்கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் தான்,‘‘ 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்க முடியாது. அதனால் 7 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்யக்கூடாது’’ என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் தமிழர்களுக்கு எதிரான அதன் நயவஞ்சகத் தனத்தையே காட்டுகிறது.   உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 7 பேர் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவிக்க மத்திய அரசு மறுப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும். 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு அதற்காகத் தேடிக் கண்டுபிடிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு யாரோ தொடர்ந்த ஒன்றல்ல. 2014 ஆம் ஆண்டில் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தான் அது. 

தமிழர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு  அவர்களின் விடுதலைக்கு ஒப்புதல் அளித்திருக்கலாம். இல்லாவிட்டால் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று நீதிமன்றத்திலேயே கூறி அவர்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்ய தவறியது மட்டுமின்றி, நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி 7 தமிழர்களின் விடுதலைக்கு தடை போடுவதிலிருந்தே தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் துரோகத்தை அறிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம் மத்திய அரசின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அதனால் தான் இச்சிக்கலில் மத்திய அரசிடம் விண்ணப்பிப்பதை விட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் எளிதாக விடுதலை செய்யலாம் என்று பா.ம.க. தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசோ இந்த வழியை கடைபிடிக்காமல் மத்திய அரசிடமே திரும்பத் திரும்ப விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசுக்கும் விருப்பம் இல்லை என்பது தான். 7 தமிழர் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஜெயலலிதா அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், உடனடியாக தமிழக அரசு செய்வதற்கு எதுவுமில்லை.இவ்வழக்கில் 7 தமிழர்களும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதால் அவர்கள் அனைவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு சம்மதிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ