Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டேய்... நான் முதலமைச்சர் தொகுதிடா, வேலைய கொடுடானு உரிமையோட கேளுங்க!' - அன்புமணி

 

பென்னாகரத்தில் என்னை வெற்றி பெற வைத்தால், நீங்களெல்லாம்,  'டேய் முதலமைச்சரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா' னு உரிமையோட கேட்கலாம் என்று பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி அனல் கிளப்பும் வகையில் பேசினார்.

பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, தான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை இன்று கூட்டினார். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலில் பேசிய முன்னாள் எம்.பி.யும், தருமபுரி வேட்பாளருமான டாக்டர் செந்தில், "50 ஆண்டுகளாக  மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால் எந்த மாற்றமும் வரவில்லை. அண்ணா ஆண்டாலும், கருணாநிதி ஆண்டாலும், ஜெயலலிதா ஆண்டாலும், யார் ஆண்டாலும் ஒன்றுதான். ஏனென்றால் இவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி செயல்படக்கூடியவர்கள். இதுவரை கிடைக்காத முதலமைச்சர் வேட்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். அன்புமணி நமக்கு கிடைத்திருப்பது வரலாற்று சாதனை. இதுவரை யாரும் சொல்லாததை அன்புமணி சொல்லியிருக்கிறார். விவசாயிகளை கடவுள் என்று சொல்லியிருக்கிறார்.

முதல்முறையாக ஒரு விவசாயி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை நாம் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும். விஜயகாந்துக்கு எதிராக பாலுவை நிறுத்தியிருக்கிறோம். விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது விருதாச்சலத்தில்தான். நமது வேட்பாளரை தோற்கடித்துதான் அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். நாம் செய்த தவறை நாம்தான் சரி செய்ய வேண்டும். வழக்கறிஞர் பாலு கட்டாயமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாம் வளர்த்துவிட்ட விஜயகாந்த்தை நாமே வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று முடித்தார்.

அடுத்ததாக பேசிய அன்புமணி, "யோசித்துப்பாருங்கள், உங்கள் தொகுதியில் போட்டியிடுவது முதலமைச்சர் வேட்பாளர். இதுவரை எந்த முதலமைச்சராவது இந்த தொகுதிக்கு வந்திருக்கிறார்களா? இல்லை. உங்கள் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலமே இருக்கிறது. இரண்டாவது முறையாக வாய்ப்புக்கேட்டு வந்துள்ளேன். முதல்முறை  நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்தேன். என்னை வெற்றி பெற வைத்தீர்கள். பென்னாகரம் தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அத்தனை கிராமங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் ஒரு சில பகுதிகளுக்கே செய்ய முடியும். ஆனால் முதலமைச்சராகிவிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் செய்யலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பார்த்தீர்களா..? எத்தனை சாலைகள், எத்தனை கோடி திட்டங்கள். ஸ்ரீரங்கம் என்ன, அதைவிட பிரம்மிக்கத்தக்க வகையில் பென்னாகரத்தை மாற்றுவேன். நீங்களெல்லாம், 'டேய் முதலமைச்சரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா' னு உரிமையோட கேட்கலாம்" என்று  அனலைக் கிளப்பிவர், "நாம் செய்யவிருக்கும் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், நாம் மகத்தான வெற்றிபெற வேண்டும்" என்ற படி முடித்தார்.

-எம்.புண்ணியமூர்த்தி

படம்:
க.தனசேகரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ