Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!' -ஜெ.வை தாக்கும் சீமான்

ராமநாதபுரம்: இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி என்று முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி ராமநாதபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், ''அற்ப வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு இது. இவர்கள் அணு உலை வெடித்தால் எப்படி மக்களை காப்பார்கள். இறந்த பிணத்தை புணர்ந்த சிங்களர்களின் கொடூரத்தை கண்டுகொள்ள மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களின் துரோக செயலுக்கு துணை போனவர்கள் தி.மு.க-வினர். இதனை மறந்துவிடாமல் கவனத்தில் வைத்து கொண்டு இந்த தேர்தலை அணுக வேண்டும்.

தெற்கு ஆசியத்தில் தமிழனுக்கு நாடு இல்லை. ஆனால், அரசு இருக்கிறது. அதுதான் தமிழ்நாடு அரசு. ஆனால் இந்த அரசில் தமிழனின் சாவை பற்றி பதிவு செய்யக்கூட ஒரு தலைவனும் இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து எல்லை தாண்டும் மீனவர்கள் சுடப்படுவதில்லை, சிறைபிடிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழன் என்பதற்காக நம் மீனவர்களை சிறைபிடிக்கிறான், சுட்டு கொல்கிறான் சிங்களன். எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்றார் கலைஞர். அதே கலைஞர் இன்று மீனவர்களுக்கு 5 லட்சம் வீடு கட்டி தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். கடந்த ஆட்சியில் இதனை ஏன் நீங்கள் செய்யவில்லை?

சேதுபதி மன்னனின் சொத்தான கச்சதீவினை மீட்போம் என சொல்லும் தி.மு.க, கச்சதீவு கொடுத்தது கொடுத்ததுதான் என சொல்லும் காங்கிரஸுடன் கூட்டு வைத்திருக்கிறது. அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு எப்படி கச்சதீவை மீட்பார்கள். கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருக்கும் ஒரே கனவு தமிழர்களை எப்படியாவது ஆள வேண்டும் என்பதுதான். 94 வயதிலும், 70 வயதிலும் ஒரு தாத்தாவும், பாட்டியும் மறுபடியும் மறுபடியும் நம்மை ஆள துடிக்கிறார்கள். மீத்தேன் எரிவாயுவை எடுக்க அனுமதித்தது தி.மு.க, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஜெயலலிதா. இப்போது மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என சொல்கிறார்கள்.

மீத்தேன் எரிவாயுவை எடுப்பதை தடுப்பது அப்புறம், முதலில் நீங்கள் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தார் ரோடு போட்டு அங்கே ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை நிறுத்துங்கள். இதுவரை இருந்து வரும் தி.மு.க, அ.தி.மு.க இனி இருக்காது. அதுதான் புரட்சி. குடிக்கிற தண்ணீரை வியாபாரம் ஆக்கிய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. அது எப்படி உருப்படும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்கிறார்கள். விவசாயிகளை கடனாளியாக ஆக்கியது யார்? கல்வி கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார்கள். கடன் பெற்று கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார்? இதற்கு காரணமான கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் நாம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மதுவுக்காக பல போராட்டங்களை நடத்தியாச்சு. இந்த பயல்கள் சொல்லி நாம் கேட்க வேண்டுமா என்ற திமிர். அந்த திமிர் எங்கிருந்து வந்ததும்மா. எங்கள் ஆத்தா, அப்பன், இங்க இருக்கிற அண்ணனும், தம்பியும் தான். நாங்க ஒத்த விரலால் ஓட்டுப்போடு உயர்த்தலனா நீங்க மார்கெட் இழந்துபோன முன்னாள் நடிகை. உங்களை ஒருபய சீண்டமாட்டான். அரிசிக்கும், பருப்புக்கும், வேட்டிக்கும், சேலைக்கும் கையேந்தி நிற்கும் இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி.

உழைச்சி சம்பாதிச்சி சேலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த காசுல எங்களுக்கு அரிசி, பருப்பு, ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், சேலை, வேட்டி, ஃபேன் எல்லாம் இலவசமா கொடுத்தா மாதிரி, என்னம்மா எல்லாம் உங்க காசா?. அதெல்லாம் எங்கம்மா காசு, எங்க அப்பன் காசு என்ன கொடும இது. எல்லாத்துலயும் உங்க படத்தை ஒட்டுறீங்க இல்ல, இந்த குவாட்டரிலும், ஆஃப்லயும்கூட உங்க படத்த ஒட்டுனா என்ன?

பொண்ணு, மாப்பிள்ளை நெத்தியில ஜெயலலிதா ஸ்டிக்கர ஒட்டுறாங்க. என்ன கொடுமடா இது. வெள்ளச்சேதத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கர்நாடகாவில் இருந்து, ஆந்திராவில் இருந்து மனிதநேயத்தோடு அரிசி, பருப்ப லாரியில ஏத்திக்கிட்டு வந்தான். வழியில மறிச்சி எங்க அம்மா படத்த ஒட்டுன்னு சொன்னாங்க. உடனே தூக்கி தெருவில வீசிட்டு போயிட்டான். அவன் மானஸ்தன்.

இந்த இழிநிலையை போக்குவதுடன் மீனவர்களுக்கு என தனி தொகுதி ஏற்படுத்துவதும், தமிழ்நாட்டின் 235-வது தொகுதியாக ராமேஸ்வரம் தொகுதியை உருவாக்குவதும்தான் எங்கள் லட்சியம். மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளை சுற்றுலா பகுதிகளாக மாற்றுவோம். அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களின் நலனை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம். அதன் மூலம் வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்லும் தமிழர்களின் பணி பாதுகாக்கப்படும். 5-க்கும், 10-க்கும் அரிசிக்கும், பருப்புக்கும், வேட்டிக்கும், சேலைக்கும் கையேந்தி நிற்கும் மானமற்றவர்களாக தமிழர்களை ஆக்கி வைத்திருக்கின்றன இன்றைய அரசு. இதனை சாதனை என சொல்லி கொள்கிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வார் கலைஞர் என சொல்பவர்கள், கோட்டா கேட்டு நிற்கிறார்கள். நாட்டை நாய்களும், பேய்களும் ஆள விட்டு விட்டு 4 சீட்டுக்கும், 3 சீட்டுக்கும் குனிந்து கிடக்கின்றனர் நம் மக்கள். எந்த மாநிலத்திலாவது சாராயம் விற்கும் முதலமைச்சர் இருக்கிறாரா? ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் பல சாராய ஆலைகள் இருக்கின்றன. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைக்க காரணமாக இருந்த கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் முன்னாள் முதல்வர்கள் என அழைப்பதை விட்டு விட்டு இனி அவர்கள் முன்னாள் சாராய வியாபாரிகள் என்று அழைக்கப்படும் நிலையை நாங்கள் உருவாக்குவோம்.

இனி ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்படும் அதிகாரம் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் அதிகாரமாகத்தான் இருக்கும். கருணாநிதிக்கு கொடுக்கப்படும் அதிகாரம் அவரது மனைவிகள், பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் அதிகாரமாகத்தான் இருக்கும். இந்த நிலையை புரிந்து கொண்டு உங்கள் பிள்ளைகளுக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.

இந்த பிரசார கூட்டங்களில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் சிவக்குமார் (ராமநாதபுரம்), ராஜுவ்காந்தி (திருவாடானை), முகம்மது கடாஃபி (முதுகுளத்தூர்), ஹேமலதா பாண்டியன் (பரமக்குடி) மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close