Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது?'

சென்னை: பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். அதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, விவசாயத்துக்கு கூடுதல் நிதியுடன் தனி பட்ஜெட், தடை இல்லா மின்சாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 156 தொகுதிகளிலும், மீதமுள்ள 78 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகமான கமலாலயத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்...


* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ளது போல், அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போடப்படும்.

* வட்டியில்லா பயிர்க் கடனும், விவசாயக் கருவிகள் வாங்கக் குறைந்த வட்டியில் தவணை முறைக் கடனும் வழங்கப்படும்.

* விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனும், அதற்குரிய வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

* விவசாயிகள் நஷ்டமடையும் வகையில் வெளிச் சந்தையில் விலை சரிவு ஏற்பட்டால், விவசாயிகளிடம் அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும்.

பூரண மதுவிலக்கு...


* ராஜாஜி அமல்படுத்திய, மகாத்மா காந்தி விரும்பிய பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அரசு குடிநீர் திட்டத்தின்படி தினசரி ஒரு குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

* பட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில், பட்டுக்கூடுகள் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தமிழகத்திலேயே அமைக்கப்படும்.

* உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

தடை இல்லா மின்சாரம்...


* 2 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்படும். 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மரபு சாரா முறைகளில் மின்சாரம் தயாரிக்க ஊக்கமளிக்கப்படும்.

* மின் சிக்கனத்தை முழுமையாக கடைபிடிக்க வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சி.எப்.எல். மற்றும் எல்.இ.டி. பல்புகள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

* காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள, காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்ல போதிய அளவு மின்பாதைகளும், மின் தொகுப்புகளும் அமைக்கப்படும்.

* வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமலாக்கப்படும்.

* தமிழகத்தில் தரிசாக உள்ள நிலங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள் பொருத்தப்பட்டு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும்.

* தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படும். காவல் துறை சீரமைக்கப்படும்.

* பயங்கரவாதத்தை ஒடுக்க மராட்டிய மாநிலத்தில் உள்ளது போன்று கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி...


* தமிழகத்தின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு வரும் தைத் திருநாளில் பாரம்பரிய மாடு பிடி, ஏறு தழுவல், மஞ்சு விரட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் கோலாகலமாக நடத்தப்படும்.

* கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை அதிகரிக்கும் வகையில், சென்னை, காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.

தாலிக்கு ஒரு பவுன் தங்கம் இலவசம்...


* பெண் குழந்தைப் பாதுகாப்புக்கு ஆவன செய்வதோடு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ரூ.1 லட்சம் வைப்புநிதி ஏற்படுத்தப்படும்.

* தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஒவ்வொரு மணமகளுக்கும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.

நதிகள் இணைப்பு...


* ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஆற்றங்கரை ஓரங்களில் 1967-ம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் முற்றிலும் மீட்கப்படும்.

* நிலத்தடி நீர்மட்டம் உயர பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுப்பட்டு இருப்பது போல், தமிழகத்தில் காவிரி போன்ற ஆறுகளின் குறுக்கே ஒரு லட்சம் தடுப்பணைகள் கட்டப்படும்.

* காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம், தென்பெண்ணை-செய்யாறு இணைப்புத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும்.

* நதிகள் இணைப்பு மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மாநில நீர் வழிப் போக்குவரத்து உருவாக்கப்படும்.

* நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும், மணல் எடுக்கும் உரிமத்தைத் தனியாருக்கு வழங்காமல், நுகர்வோர் பலன்பெறும் வகையில் அரசாங்கமே மணல் வியாபாரம் நடத்தும்.

சிறு, நடுத்தர தொழில்கள்...


* குறு, சிறு மற்றும் நடுத்தர வகை தொழில்களை பாதுகாக்க மத்திய அரசுடன் இணைந்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்படும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர வகை தொழில்களின் பொருட்களை சந்தைப்படுத்தவும் சர்வதேச அளவில் சந்தைகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈட்டித்தரும் பின்னலாடை தொழிலை மேம்படுத்த பின்னலாடை வாரியம் ஏற்படுத்தப்படும்.

புதிய ஜவுளிக்கொள்கை...


* ஜவுளித்துறையை ஊக்குவித்து தமிழகத்தின் பங்கை தேசிய அளவில் அதிகரிக்கும் வகையில் புதிய ஜவுளிக் கொள்கை வகுக்கப்படும்.

* கைத்தறி நெசவுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு பதில் ஒரு தறிக்கு 500 வாட்ஸ் வீதம் மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசு உதவி மூலம் சூரிய ஒளித் திட்டம் செயல்படுத்தப்படும்.

* 60 வயது கடந்த நெசவாளர்களுக்கான உதவித் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு குறையாத வகையில் அதிகரிக்கப்படும்.

* தமிழகத்தில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தேவையான மாவட்டங்களில் அமைக்கப்படும். ஜவுளித்துறைக்கு தனியாக ஒரு வங்கி உருவாக்கப்படும்.

* தமிழக அரசின் நூல் விற்பனை வரி 5 சதவீதம் என்பதை இரண்டு சதவீதமாக குறைக்கப்படும். விசைத்தறிக்கு மின் கட்டணம் அதிக அளவில் இருப்பதால் மானிய விலையுடன் கூடிய மின் கட்டணம் விதிக்கப்படும்.

டிஜிட்டல் கல்வி...


* அனைத்து அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் கல்வி கொண்டு வரப்படும்.

* மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்திற்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக கல்வி முறை சீரமைக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் யோகாசனம் மற்றும் தியான வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

ஆன்மிக சுற்றுலா...


* தமிழகம் ஒரு ஆன்மிக பூமி, கோவில்கள் நிறைந்த மாநிலம். தமிழகத்தின் ஆன்மிக மையங்களாக விளங்கும் நவக்கிரகத் தலங்கள், ஆறுபடை வீடுகள், வைணவத் தலங்கள் போன்றவற்றிற்கு பக்தர்கள் சென்று வரும் விதமாக ஆன்மிக சுற்றுலா திட்டம் கொண்டு வரப்படும்.

* 60 வயது நிரம்பிய மூத்தக் குடிமக்களுக்கு ஆன்மிக சுற்றுலாச் செல்ல மானியம் வழங்கப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றுகின்ற உரிமையாகாது. அச்சுறுத்தி, ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.

பசுவதை தடுப்புச்சட்டம்...


* மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியல் ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கனவே உள்ள இந்துகளின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும்.

* அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பசுவினத்தைப் பாதுகாக்க பசுவதை தடைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும்.

* கோடிக்கணக்கான கோவில் சொத்துகள் தனியார் மற்றும் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. மேற்படி விளைநிலங்கள், தரிசு நிலங்கள், வீட்டு மனைகள், காலியிடங்கள் 6 மாதங்களுக்குள் மீட்கப்பட்டு, ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும்.

கோவில் தரிசன கட்டணம் ரத்து...


* ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாத சிலரின் பிறந்தநாளுக்கு இனி மேல் இந்து கோவில்களில் சமபந்தி போஜனம் நடத்தப்பட மாட்டாது.

* 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்தநாள் இந்து கோவில்களில் சமபந்தி போஜன நாளாக நடத்தப்படும்.

* இந்து மத இறைப் பற்றாளர்கள் மட்டுமே கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவர்.

* கோவில்களில் அனைவரும் சமமான முறையில் வழிபாடு செய்யும் விதமாக தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின்படி, இந்து வழிபாட்டு தலங்களில் இருந்து ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் அமைய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படும்.

சமய வகுப்புகள்...


* அனைத்து ஆலயங்களிலும் இந்து சமயக் கருத்துகளையும், அற வழிபாடுகளையும் வளரும் குழந்தைகளுக்குப் போதிக்கும் விதமாக சமய வகுப்புகள் நடத்தப்படும்.

* வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள இந்துகள் ஆண்டுக்கொரு முறை குடும்பத்தோடு புனிதப் பயணம் செல்ல பயண சலுகை வழங்கப்படும்.

* தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஓவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நிறுவப்பட்டு, அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்...


* ஆங்கிலேயர் ஆட்சிக் காலந் தொட்டு தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.

* பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாரிசுகள் தமிழ் படிக்கவும், கலாசார உறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* முன்னாள் ராணுவத்தினருக்கும், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும்.

* அனைத்து அரசு ஊழியர்களும் 25 சதவீத தள்ளுபடியுடன் காதி பொருட்களை வாங்கிட ஊக்குவிக்கப்படுவர்.

மேற்கண்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

- படங்கள்: ஆ.முத்துக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close