Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துறைமுகத்தில் மீண்டும் கரை சேருமா தி.மு.க.?! - துறைமுகம் தொகுதி நிலவரம்


 

 

வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை:




 

தொகுதி புராணம்:    
   
1951-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு உருவாக்கப்படவில்லை. மெட்ராஸ் மகாணம்தான் இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், மலபாரின் சில பகுதிகள் அதற்குள் இருந்தன. ஆனால், அதற்குள்ளும் துறைமுகம் தொகுதி இருந்தது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இருந்து, 2016 மே 16-ம் தேதி நடைபெறப்போகும் தேர்தல் உள்பட அனைத்துப் பொதுத் தேர்தல்களையும் சந்திக்கிற தொகுதி துறைமுகம். ஆக, தமிழ்நாடு தோன்றாக் காலத்தே உருவான தொகுதி துறைமுகம்!



சென்னை மாநகராட்சியின் 13 வார்டுகளைக் கொண்ட சிறிய தொகுதி இது. சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை குறைந்த அளவிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியும் இதுதான். ‘போரா’ முஸ்லிம்களும், ஜெயின் சமூகத்தினர், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்தத் தொகுதிக்குள் அமைந்திருக்கும் சௌகார் பேட்டையைச் சுற்றிவரும்போது, குட்டி ராஜஸ்தானுக்குள் சென்று வந்த அனுபவத்தைப் பெற முடியும். மளிகைப் பொருள்கள், மின்னனு சாதனங்கள், மருத்துவப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், பட்டாசு, அழைப்பிதழ்கள், காலண்டர்கள், பிளாஸ்டிக் பொருள்களுடன் தங்கமும் வைரமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.  இந்தத் தொகுதியில் வியாபாரமே பிரதானம். வியாபாரிகளும் வணிகமும் பரபரப்பாக நடக்கக்கூடிய தொகுதி. அதனால் பணப்புழக்கமும் அதிகம் உள்ள தொகுதி.

தமிழகத்தை நிர்வாகம் செய்கிற தமிழக அரசின், தலைமைச் செயலகம் துறைமுகம் தொகுதிக்குள்தான் வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம், பாரிமுனை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் அமையப்பெற்றுள்ள பாரம்பரியப் பெருமை வாய்ந்த தொகுதி இது. பிரிட்டிஷ்காரர்கள் சென்னை நகரை உருவாக்க முக்கியக் காரணமே, துறைமுகம் தொகுதியில் இருக்கும் துறைமுகம்தான். அப்படி உருவாக்கிய சென்னை நகரை அவர்கள், ‘கருப்பர் நகரம்’ என்றழைத்தனர்.



தி.மு.க. கோட்டை!

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கி அடுத்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது. 1977-ல் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் உதிக்கத் தொடங்கிய சூரியன், அதன்பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களிலும் இங்கு அஸ்தமனம் அடையவே இல்லை. 8 முறையும் தொடர்ந்து, துறைமுகம் தொகுதி தி.மு.வின் வசமே இருந்தது. 1977-ம் ஆண்டு அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் ஏ.செல்வராஜ், 1980,1984 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.



தி.மு.க வேட்பாளர் ஏ.செல்வராஜ் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த துறைமுகம் தொகுதியில், 1989-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு, 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் கருணாநிதி துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க வேட்பாளர் ஏ.செல்வராஜ் வெற்றி பெற்றார். அதன்பிறகு, தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன்  1996,2001,2006 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் ஏ.செல்வராஜ் நான்குமுறையும், தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மூன்று முறையும் கருணாநிதி இரண்டுமுறையும் வெற்றி பெற்று தி.மு.க-வின் கோட்டையாகத் திகழ்ந்த துறைமுகம் தொகுதியை 2011-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க கைப்பற்றியது. இந்த தேர்தலில் துறைமுகத்தை மீண்டும் தங்கள் கோட்டையாக்க தி.மு.க. தரப்பு எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் வேலை செய்கிறது!
     

 

தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர் பெயர்
1951 இந்திய தேசிய காங்கிரஸ் டாக்டர் கிருஷ்ணாராவ்
1957 இந்திய தேசிய காங்கிரஸ் டாக்டர் கிருஷ்ணாராவ்
1962 இந்திய தேசிய காங்கிரஸ் ராஜா ஷெரிப்
1967 சுயேட்சை பெய்க்
1971 சுயேட்சை ஏ.எம்.மொய்தீன்
1977 தி.மு.க ஏ.செல்வராஜ்
1980 தி.மு.க ஏ.செல்வராஜ்
1984 தி.மு.க ஏ.செல்வராஜ்
1989 தி.மு.க மு.கருணாநிதி
1991 தி.மு.க மு.கருணாநிதி
(இதே தொகுதியில் 1991-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வேட்பாளர் ஏ.செல்வராஜ்)
1996 தி.மு.க க.அன்பழகன்
2001 தி.மு.க க.அன்பழகன்
2006 தி.மு.க க.அன்பழகன்
2011 அ.தி.மு.க பழ.கருப்பையா


தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளும் நிரந்தரப் பிரச்னைகளும்!


பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளான குடிநீர், கழிவுநீர், மின்தடை, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் இந்தத் தொகுதியின் நிரந்தரப் பிரச்னைகளாக காலம் காலமாக நிலவுகின்றன. சரியான அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததால், கழிவுநீர், துறைமுகத்திற்குள் இருந்து செயல்படும் எண்ணெய் நிறுவனங்களின் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை குடிநீரில் கலந்துவிடுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.



சௌகார் பேட்டையில் ஃபேன்ஸி பொருட்கள், ஜவுளி, நகைக் கடை, அடகுக் கடை என எல்லாமும் மொத்த வியாபாரமாக நடக்கிறது. கறுப்புப் பணம், சட்ட விரோத வியாபாரங்கள், கடத்தல் பொருள் விற்பனை போன்றவை இங்கு கனஜோராக நடக்கின்றன. இந்தத் தொகுதி எம்.எல்.ஏ பழ.கருப்பையா, கலெக்டர் அலுவலகத்திலேயே பான்பராக், குட்கா, சிகரெட் போன்றவை சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கென தனயாக கூலிப் படைகள் வைத்துள்ளனர். அதனால், அடிக்கடி சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்கள் இந்தத் தொகுதியில் அதிகம். அவற்றை ஒழுங்குபடுத்தவே முடியாமல் அரசாங்கமும் நீதிமன்றங்களும் திணறுகின்றன.  போக்குவரத்து நெருக்கடி தீர்க்கப்பட முடியாத விவகாரமாக இந்தத் தொகுதியில் இருக்கிறது.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ...? 
2011-ம் ஆண்டுத் தேர்தலில் ஜெயலலிதா துறைமுகம் தொகுதியை பழ.கருப்பையாவுக்கு ஒதுக்கினார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட அல்தாப் ஹூசைனைத் தோற்கடித்து பழ.கருப்பையா வெற்றிபெற்றார். ஆனால், அவர் தன்னால், துறைமுகம் தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை. அதனால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார்.

 

அத்துடன், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். அதற்காக இந்தத் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு, நாம் தொகுதிக்குள் எம்.எல்.ஏ செய்தது என்ன என்பதை அலசத் தேவையில்லை. 
துறைமுகம் சட்டமன்ற  உறுப்பினருக்கு வடக்கு கோட்டை சாலையில் ராஜா அண்ணாமலை மன்றம் எதிரே, பழைய திருவள்ளுவர் பஸ் நிலையத்தில், பத்து லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது.  ஆனால், எம்.எல்.ஏவை அங்கு பார்த்ததே இல்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

ஆறுதல் தரும் விஷயங்கள்...

நகரின் இதயப்பகுதியாக இருப்பதால், போக்குவரத்து வசதி சிறப்பாக இருக்கிறது. தொழில் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் உள்ள பகுதி என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.

களம் காணும் பிரதான வேட்பாளர்கள்

அ.தி.மு.க - கே.எஸ்.சீனிவாசன்,

 


ப்ளஸ்

* 2006-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு பூங்கா நகர் தொகுதி எம்.எல்.வாக இருந்தவர். *வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். அதனால், தொகுதி நிலவரம் அத்துப்படி.

மைனஸ்

*உட்கட்சி அதிருப்தி.  

* பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது, சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு மைனஸ்.

தி.மு.க - பி.கே.சேகர்பாபு

 


அ.தி.மு.கவில் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர். அதன்பிறகு, அங்கிருந்து தி.மு.கவிற்கு தாவியவர். 2011-ம் ஆண்டு தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவருக்கு இந்த முறையும் தி.மு.க வாய்ப்பு வழங்கி உள்ளது.

ப்ளஸ் 

கூட்டணியில் உள்ள முஸ்லீம் லிக், மனிதநேய மக்கள் கட்சியின் வாக்குகள் இவருக்கு பிளஸ்.

மைனஸ்

இவர் இன்னும் அ.தி.மு.கவில் தான் இருக்கிறார் என்று நினைத்து, இரட்டை இலை சின்னத்திலேயே  பெரும்பாலானோர் வாக்களித்துவிடுகிறார்கள். அது இவருக்கு மைனஸ்.

ம.தி.மு.க - புகாரி

 


ப்ளஸ்

சிறுபான்மை மக்களின் வாக்குகளும் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கும் ஓட்டுக்களும் இவருக்கு பிளஸ்.

மைனஸ்

தொகுதிக்குள் செல்வாக்கு இல்லாதது மைனஸ்.

 ஃபைனல் பன்ச்:- 

துறைமுகம் தொகுதியைப் பொறுத்தவரை திமுகவின் வெற்றி என்பது மார்ஜினில்தான் இருந்திருக்கிறது. 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மதிமுகவின் சீமா பஷீருக்கு ஒதுக்கப்பட்டது. எதிர்த்து நின்ற தி.மு.க வேட்பாளர் பேராசிரியர்  க.அன்பழகன் அப்போது வெறும் 400 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவிடம் தொகுதியைப் பறி கொடுத்தது தி.மு.க. எனவே, ’நம் கோட்டையில் கொடி நாட்டி விடலாம்’ என்ற இறுமாப்பில் தி.மு.க. இருக்க முடியாது. ஆளுங்கட்சி என்ற மிதப்பில் அ.தி.மு.கவும் வலம்வர முடியாது.


ஏனெனில், தொகுதியில் மார்வாரிகள், இஸ்லாமியர், குடிசைவாழ் மக்கள் என சம அளவில் பலதரப்பினர் உள்ளனர். குடிசைப்பகுதி வாக்குகளும், இஸ்லாமியர் வாக்குகளும் வெற்றியை தீர்மானிப்பவை. அவற்றை திமுக எப்போதும் மிஸ் பண்ணியதே இல்லை என்கிறார்கள். அதே சமயம், வட இந்தியர்களான மார்வாரிகளின் வாக்குகள் மட்டும் அப்படி இப்படி என மாறி வரும்.



அடிப்படை வசதிகள் முழுமையாக தன்னிறைவு அடையாத பகுதி என்பது துறைமுகத்தின் அடையாளம், ஆனால், அது மட்டுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில்லை. இங்கே உணர்வுப்பூர்வமான மக்கள்தான் எதையும் தீர்மானிக்கிறார்கள் எனலாம்.

தொகுதி மறு சீரமைப்பின் காரணத்தால் இப்போது பூங்கா நகர்  தொகுதியின் பெரும்பகுதியும், எழும்பூர் தொகுதியின் ஒரு வார்டும் துறைமுகம் தொகுதியில் சேர்ந்துவிட்டது. பூங்கா நகரின் முந்தைய எம்.எல்.ஏ.வான கு.சீனிவாசன்தான் இங்கே (துறைமுகம்) போட்டியிடுகிறார் என்பதால் அது அதிமுகவுக்கு ப்ளஸ். அதே வேளையில் துறைமுகம் தொகுதியின் சீனியர் கட்சிக்காரரான வழக்கறிஞர் கிரிநாத்துக்கு சீட் கிடைக்காததும், அவரோடு சீனிவாசன் இணக்கமாக இல்லாததும் மைனஸ்.

மேலும் சீனிவாசனின் தொகுதியில் வருகிற 9 வட்டச் செயலாளர்களையும் மாற்றச் சொல்லி சீனிவாசன் தலைமையில் கொடுத்த மனு வாசலிலேயே நின்று விட்டது. யாரும் மாற்றப் படவில்லை. அவர்கள் அனைவரும் இப்போது திமுகவில் இருக்கும் பி.கே.சேகர்பாபுவால் அன்றைக்கு போஸ்டிங் போடப்பட்ட வட்டங்கள். அதில் ஒரு வட்டமான தக்காளி ரவி, வேட்பாளர் சீனிவாசனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதும் சீனிவாசனுக்கு கூடுதல் மைனஸ்.

இந்த கள நிலவரத்தை வேட்பாளர்களின் அதிரடி பிரசாரமும் கடைசி நிமிட வாக்காளனின் மனநிலையும் எத்திசை நோக்கியும் நகர்த்தும்! 

- ஜோ.ஸ்டாலின்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ