Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூரில் வெற்றிக் கொடி கட்டுவாரா சரத்குமார்? - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்

வேட்பாளர் : சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்.

சிறப்புகள் : முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர், முன்னணி தமிழ் திரைப்பட நடிகர்

தொகுதி : திருச்செந்தூர்



தொகுதியின் இயல்பு : நாடார் சமுதாய மக்களும் மீனவ சமுதாயத்தினரும் பெருவாரியாக வசிக்கும் தொகுதி திருச்செந்தூர். வாழை விவசாயமும், பனைத் தொழிலும் மீன்பிடித் தொழிலும் முக்கியமான வர்த்தகம். திருச்செந்தூர் முருகன் கோவில், குலசேகரப் பட்டிணம் தசரா விழாக்கள், பழமையான தேவலாயங்கள் என்று சுற்றுத்தலமாக மாற்றுவதற்கு தகுந்த தொகுதி. ஆனால், இதுவரை ஆண்ட கட்சிகள் யாரும் அதைச் செய்யவில்லை. இந்தத் தொகுதி மக்கள், அ.தி.மு.கவில் இருந்து போட்டியிட்டபோதும், தி.மு.கவில் இருந்து போட்டியிட்ட போதும் அனிதா ராதாகிருஷ்ணனையே வெற்றி பெற வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

சரத்குமாரின் அரசியல் பயணம்: திரைப்பட நடிகராக இருந்தவர் 1996-ல் தி.மு.க-வில் இணைந்தார். திரைத்துறை பிரபலம் என்ற தகுதி,  கட்சித் தலைமையுடன் நெருக்கமாக உதவியது. அதனால், தி.மு.கவில் இணைந்த இரண்டே ஆண்டுகளில், 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், கட்சித் தலைமை, நேற்று வந்தவருக்கு வாய்ப்பு வழங்கியதால், உள்கட்சி அதிருப்தி உருவானது. தி.மு.கவினர் சரத்குமாருக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.


 
தி.மு.கவில், தென்மாவட்ட நாடார் சமூகத்தினரின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தினார் சரத்குமார். அதற்கு பலன் கிடைத்தது. 2002-ல் தி.மு.கவின் சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அங்கு அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்போது, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க, தனக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுத்தர வேண்டும் என்று சரத்குமார் எதிர்பார்த்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதோடு, கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடன் மனக்கசப்பு உருவானது. அதனால், தி.மு.கவில் இருந்து வெளியேறினார்.

தி.மு.கவில் இருந்து வெளியேறிய கையோடு, 2006-ம் ஆண்டு அ.தி.மு.கவில் ஐக்கியமானார். 2006 சட்டமன்றத் தேர்தலில், சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் அ.தி.மு.கவுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோற்றது. அடுத்த சில மாதங்களில், ராதிகாவை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலிதா. வேறு வழியில்லாமல் சரத்குமாரும் கட்சியில் இருந்து வெளியேறினார்.

 


 2011 சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடார் அமைப்புகள் அனைத்தும் ஒன்று திரண்டு ‘பெருந்தலைவர் மக்கள் கட்சி’ என்ற அமைப்பைத் தோற்றுவித்துக் களமிறங்கத் தயாராக இருந்தன. அந்தக் கட்சியின் தலைவராக சரத்குமாரை அறிவித்தன. ஆனால், தாது மணல் விவகாரத்தில் பெயர் அடிபடும் வைகுண்டராஜனின் பின்னணியில் அந்த கட்சியில் இருந்து வெளியேறிய சரத்குமார், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தார். இதனால் நாடார் அமைப்புகள் அதிர்ச்சி அடைந்தன.

அந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது, அ.தி.மு.க. அதன்படி, தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அவரது கட்சிப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமார் வெற்றி பெற்றார். தான் போட்டியிட்டால் தென்காசியிலேயே தங்கி இருந்து தொகுதி மக்களுக்காக பாடுபடுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், நடிகர் சங்கத் தலைவர், எம்.எல்.ஏ., நடிகர் என பிஸியாக இருந்ததால், தொகுதிக்குள் எட்டிப் பார்க்கவே இல்லை. தொகுதியையும் தொகுதி மக்களின் தேவையையும் சரத்குமார் புரிந்து கொள்வதற்குள், இதோ  2016 சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது.

இந்த முறை மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை அவர் முழுமையாக உணர்ந்து இருந்தார். அதேநேரத்தில், அ.தி.மு.கவும் அவரைக்  கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டது. கடைசிவரையிலும் போயஸ் கார்டனின் கதவை தட்டிக் காத்திருந்த அவருக்கு இது அதிர்ச்சியை கொடுத்தது. இதனிடையே அவருடன் எம்.எல்.ஏவாக இருந்த எர்ணாவூர் நாராயணன் கட்சியை உடைத்துக் கொண்டு சென்று விட்டார். இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தி.மு.க அழைப்பு விடுத்தது. அதைப் பயன்படுத்தி, தி.மு.க பக்கம் சென்று கன்னியாகுமரி அல்லது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெறலாம் என பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென மீண்டும் அ.தி.மு.கவிலிருந்தே  அவருக்கு அழைப்பு வந்தது. அரசியலில் அவமானம் பார்த்தால், எதையும் அனுபவிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட சரத்குமார், கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்தார்.  இந்த முறை சரத்குமாரின் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்று திருச்செந்தூரை மட்டும் ஒதுக்கியது  அ.தி.மு.க. அதில் அவரே போட்டியிடுகிறார்.


தேர்தல் டிராக் ரெக்கார்ட்: 

1998 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க சார்பில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 919 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜனார்த்தனன், சரத்தைவிட 6,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2002-ல் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் கருப்பசாமி பாண்டியன். கருப்பசாமி பாண்டியனைவிட சரத்குமார் 22,967 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டி.

சரத்குமாரின் ப்ளஸ்:

சினிமா பிரபலம்.
பணம் செலவு செய்வதற்கான பின்புலம்.
தொகுதிக்குள் இருக்கும் சொந்த ஜாதி செல்வாக்கு.

சரத்குமாரின் மைனஸ் :

*  2011 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தென்காசி தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் செய்யாதது.
 
* சொந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு.
 
* தி.மு.க. வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன், இத்தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். 
 
 

சரத்குமாரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்  பிளஸ்/மைனஸ்

 
அனிதா ராதாகிருஷ்ணன் - தி.மு.க. 
 
 
பிளஸ் 
மண்ணின் மைந்தன் இமேஜ்.
தொகுதி மக்களிடம் இருக்கும் நெருக்கமான அறிமுகம்.
உள்ளுர் நிகழ்ச்சிகள், திருமணம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது.
தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்பதை கணித்து 3 மாதங்களுக்கு முன்பே வேலைகளைத் தொடங்கியது.  
 
மைனஸ் 
 
அ.தி.மு.க, தி.மு.க என்று கட்சி மாறி மாறிப் போட்டியிட்டதால், இரு கட்சிகளிலும் தனக்கான நல்ல ஆதரவாளர்களை இழந்துவிட்டார்.
 
தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் பெரியசாமியுடன் அணுக்கம் இல்லை. அதனால், உள்கட்சியில் ஏகப்பட்ட எதிரிகள். 
 
கடந்த நான்காண்டுகளாக தொகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாதது.
 
செந்தில்குமார் - தே.மு.தி.க.  
 
பிளஸ்
 
தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணியின் வாக்குகள்.
 
விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்தத் தொகுதியில் உள்ள கணிசமான வாக்குகள்.
 
தி.மு.க, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மைனஸ் பாயிண்டுகளே இவருக்கு பிளஸ் பாயிண்டுகள்.
 
மைனஸ்
ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்.
 
அரசியல் அனுபவம் குறைவு.
 
தொகுதிக்குள் அறிமுகம் இல்லாதது.
 
செந்தில்குமார் ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர். அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைத்தது.
தே.மு.தி.கவில் அந்தப் பகுதியில் மாவட்டப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவர்கள் இவருடைய வெற்றிக்காக எவ்வளவு மெனக்கெட்டு உழைப்பார்கள் என்பதும் கூட்டணிக் கட்சிக்காரர்களை எவ்வளவு அனுசரித்துப்போவார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறி!
 
ஃபைனல் பன்ச் 
 
சரத்குமாரின் வெற்றி வாய்ப்பும் எதிரில் நிற்கும் தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாய்ப்பும் ஒருவகையில் சமமாக இருக்கிறது. ஆனால், இத் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு தாவியது, தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல்களில் சிக்கி, கடந்த சில வருடங்களாக ஒதுங்கி இருந்தது, கடந்த நான்கு ஆண்டுகளாக தொகுதிக்குள் எட்டிப்பார்க்காமல் போனது என்பவை அவருக்கு மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தி உள்ளன.
 
அனிதாவின் இந்த சறுக்கல்கள் சரத்குமாரை வெற்றிப்படிகளில் ஏற்றிச் செல்லும் வாய்ப்புகளாக இருக்கின்றன. அதுபோல, கடந்த முறை தி.மு.க கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகித்தது. அதில் கிடைத்த கணிசமான வாக்குகள் இந்தத் தொகுதியில் தி.மு.க வெற்றி பெறக் காரணமாக இருந்தன. ஆனால், இந்தமுறை, அந்த வாக்குகள் பிரிந்துவிட்டதும் சரத்குமாருக்குச் சாதகம். அத்துடன் அவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதும், சினிமா நடிகர் என்ற பிரபலமும் அவருக்கு கூடுதல் பலம்.
 
அதனால், இப்போதைய நிலவரப்படி தேர்தல் ரேஸில் நூலிழையில் முன்னணியில் இருக்கிறார் சரத்குமார். ஆனால், எதிரணியின் அதிரடி பிரசார வியூகங்கள் அதை முறியடித்தால், சரத் திக்கித் திணறத்தான் வேண்டியிருக்கும்!
 
-ஜோ.ஸ்டாலின், ஆண்டனிராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close