Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Non-Tamizhar சினிமா... நாம் தமிழர் சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசலாம். அதில் முதல் வாரம்.... வெற்றிவேல் வீரவேல் சீமான்!

 சீமான் மீது ஏன் இந்த கவனம்?

குரலால் கூட்டம் கூட்ட ஒரு காலத்தில் கருணாநிதி. அடுத்து வந்தார் வைகோ. இதோ இது சீமான் காலம்!

தமிழ்நாட்டு மேடையில் தெள்ளு தமிழ் வாடை பரவ சீமான் காரணமாய் அமைந்ததுதான் அவரது அரசியலின் முதல் வெற்றி. தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். அதனால், உணர்ச்சி வார்த்தைகளை முறையான உச்சரிப்புடன் உரக்கச் சொல்லும் தலைவர்களுக்குப் பின்னால் உடனடியாக அணி சேர்ந்து விடுவார்கள். சீமானின் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவரது கூட்டத்துக்குச் செல்பவர்களைவிட அவரது தமிழ் பேச்சை கேட்கலாம் என்று செல்பவர்களே அதிகம்.

சீமானின் ப்ளஸ்!

தமிழின் அருமையை, தமிழனின் பெருமையை, தமிழ்நாட்டின் கடந்த கால விழுமியங்களை பற்றிப் பேச,  அதைப்பற்றி மட்டும் பேச,  ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சியை சீமான் கட்டமைத்து உள்ளார். இந்த மூன்றுமே தமிழ் மக்களின் உள்ள வேட்கையோடு தொடர்புடையது என்பதால், எளிதில் சீமானால் உள்ளே போக முடிகிறது. இளைஞர்களை ஈர்க்க முடிகிறது. மாற்றாரையும் கவனிக்க வைக்க முடிகிறது. எதிர்கட்சிகளையும் விமர்சனங்கள் வைக்க விடாமல் தடுக்கவும் செய்கிறது. கருணாநிதி மீது சீமான் பாய்ந்தாலும், வைகோவை வசைபாடினாலும், திருமா மீது விழுந்தாலும் அவர்கள் இவருக்கு  பதில் சொல்லாமல் இருக்க காரணம், தமிழர்களின் உணர்ச்சி மீது கட்டமைக்கப்பட்ட கட்சி, நாம் தமிழர் கட்சி என்பதால்தான்!

மேலும், எல்லாப் பெரிய கட்சிகளின், எல்லா பெரும் தலைவர்களின் அடிமடியில் கைவைக்கிறார் சீமான். ‘‘நீங்கள் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழர் அல்லாதவர்களுக்கு வாழ உரிமை உண்டு. ஆனால், ஆள உரிமை இல்லை’’ என்கிறார் சீமான். அவரைப் பொருத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் போன்றவர்கள் ஆள உரிமை இல்லாதவர்கள். வைகோவுக்கும்தான்!

இந்த இனத்தூய்மை வாதம் இங்கும் புதியதல்ல. இந்தியாவுக்கும் புதிதல்ல. ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகமும், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கமும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதுதான். இறுதியில் இவர்கள் இருவரும் திராவிட இயக்கத்திடம் பதவிகள் பெற்று, பழசை மறந்ததே பழைய வரலாறு. இன்னும் மகாராஷ்டிராவில் சிவசேனாவும், கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜூவும் சொல்லிக் கொண்டு இருப்பதுதான். பீகாரியை விரட்டுகிறது சிவசேனா; தமிழர்களை விரட்டுகிறான் வாட்டாள். திருமலை நாயக்கர் மஹாலை இடிக்கச் சொல்கிறார் சீமான். அதனால்தான், பெரியாரைப் பிடிக்காத சீமானுக்கு ஹிட்லரைப் பிடிக்கிறது. பாசிசமும் நாசிசமும் பிறந்ததே இந்த, தூய்மை வாதத்தில்தானே.

தேர்தல் அரசியல் என்பதே தொகுதி பறிக்கும் அரசியல்தான். அந்த அரசியலுக்குள் இனத் தூய்மையும் இன வெறுப்பும் பேசுவதே மற்றவரை ஈர்க்கும் உத்திதான்.

அபத்த அடிப்படை!

கருணாநிதி எதிர்ப்பில் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டமைத்தது போல, இஸ்லாமிய எதிர்ப்பில் பாரதிய ஜனதா உயிர் வாழ்வது போல, ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற கருத்தாக்கத்தில் தன்னுடைய அரசியலை நிலை நிறுத்திக் கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார்.
 
‘‘தமிழர்கள் தங்களது உடமைகளையும் உரிமைகளையும் திராவிட கட்சிகளிடம் பறி கொடுத்து வருகிறார்கள். அதனை மீட்கவே நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இது தேர்தல் அல்ல. அடிமை தேசிய இனத்தின் உரிமை மீட்பு போர்’’ என்று பிரகடனப்படுத்தி உள்ள சீமான், ‘‘எந்தவொரு தத்துவமும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற தத்துவத்தின் கீழ் திராவிட இயக்கம் அழியும்’’ என்ற கண்டுபிடிப்பையும் செய்துள்ளார். இந்த புது தத்துவத்தை எந்த போதியில் கண்டடைந்தாரோ! மார்க்சியத்தின் வயதை யாராவது அவருக்கு படித்துச் சொல்லுங்கள். வயது மூப்பு வந்ததும் செத்துப் போக மனித உடல் அல்ல தத்துவம். காலங்கள் தோறும் புதுப்புது பொழிப்புரைகளால் உயிர்ப்பிக்கப்படுவதே தத்துவம். அந்த புரிதலே இல்லாமல் தத்துவத்துக்கு வைரவிழாவும் மணிவிழாவும் கொண்டாடுவது கோமாளித்தனம்.

திராவிடம் என்பதை இனச்சொல்லாக பெரியார் கட்டமைக்கவில்லை. ஆரியம் என்ற எதிர் சிந்தனைக்கு மாற்று சிந்தனையாக வைத்ததே திராவிடம். அந்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஒரு குடும்பத்தின் சொத்தாக தி.மு.க-வையும், ஒரு தனி மனுஷியின் விளையாட்டுப் பொம்மையாக அ.தி.மு.க-வையும் மாற்றி காட்டிய கீழ்த்தர அரசியலே தமிழகத்தின் இன்றைய அரசியல். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பண மலைகளின் அதிகாரப் பசி அரசியலை அம்பலப்படுத்தாமல் அவர்கள் இருவருக்குமே, ‘தத்துவார்த்த முகமூடி’ போட்டு மறைத்துக் குழப்புவதால் தான் சீமான் பேச்சு பொதுமக்களுக்கு புரியாமல் அந்நியமாய் இருக்கிறது.


சீமானின் மைனஸ்!

இந்த குழப்பம் போதாது என்று பச்சை துண்டு, பச்சை வேட்டியுடன் கையில் வேலுடன் கிளம்பிவிட்டார் சீமான். பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரியாரின் கைத்தடியை பிடித்திருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபாகரனின் துப்பாக்கியை ஏந்தியவர், இப்போது முருகனின் வேலை ஏந்தியுள்ளார். ‘முருகன் தமிழ் கடவுள், தமிழர் பண்பாட்டை மீட்கப் போகிறோம்’ என்கிறார். போகட்டும் - மீட்கட்டும். ‘முப்பாட்டன் முருகன்! எம்பாட்டன் சிவன்’ என்றால் என்ன பொருள்? முருகனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? இவர் சொல்லும் முருகன், மாயோனாக இருந்தபோது சிவன் என்ற அப்பா கிடையாதே? பழசை மீட்கிறோம் என்றால் பழசாக அல்லவா மீட்க வேண்டும். என்ன புரிதல் இது? இது தவறான புரிதல் அல்ல. தெளிவான குழப்பம்!

அழகான தமிழும், உணர்ச்சிமயமான குரலும், துடிப்பான இளைஞர்களும் இருந்தும் குறிப்பிட்ட சிலரைத்தாண்டி, பலரை சீமான் சென்றடைய முடியாமல் போவதற்கு தடைகற்கள் இவை. பெரியார் பிறந்த தினம் கொண்டாடி முடித்துவிட்டு கிராமப்பூசாரிகள் மாநாடு நடத்துவமும்,  ஏகாதிபத்தியங்களுக்கு சிம்ம சொப்பனமான சேகுவேரா படத்தோடு ஹிட்லர் படத்தை வைப்பதும், முத்துராமலிங்கதேவருக்கு முதல் மாதம் மாலைபோட்டு, இம்மானுவேல் சேகரனுக்கு இரண்டாம் மாதம் மாலை போடுவதும் , ‘பூஜா’வை வைத்து படம் எடுத்துவிட்டு, பின்னர் ராஜபக்சேவை எதிர்ப்பதும், மாதவனை, ‘தம்பி’யாக உருவாக்கிவிட்டு விஷால் ரெட்டியை வீழ்த்தக் கிளம்புவதும்,  வட இந்திய முதலாளிகள் மீது வெறுப்பைக் கிளப்பிவிட்டு வைகுண்டராஜனோடு சிரிப்பதும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றான அரசியலாக எப்படி மாறும்?

சினிமாக்காரர்கள் நாட்டை ஆளக்கூடாது என்கிறார். சரிதான். ஆனால் இவர் யார்? 2008-க்கு முன்பு வரை எங்கே இருந்தார்? பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் (1997 - 2008) என்று Non Tamizhar - கள் பலரை வைத்து படம் எடுத்த இயக்குநர்தானே? சினிமாக்காரர்கள் நடத்திய ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டத்தில் சினம் கொண்டு பேசியதால் கைதாகி, பிறகு ‘நாம் தமிழர்’ தொடங்கியவர்தானே. ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்ற சீமான் குரலை மறக்க முடியுமா? ‘வாழ்த்துக்கள்’ என்ற தனது படத்தின் பெயருக்கு ‘க்’ வருமா வராதா என்று கருணாநிதியிடம் ஐயம் கேட்ட காட்சிகள் மறக்கத்தக்கதா? எனவே, பல மாற்றங்கள் காட்டியவர்தான் இன்று புதுமாற்றம் காட்ட வந்துள்ளார்.

வரட்டும் தவறு இல்லை. வந்தவர் ஏதாவது ஒரு கட்சியுடன் அண்டிப் போய்விடாமல் ஐந்து, பத்து இடங்களுக்கு கை ஏந்தாமல்... தகுதி இல்லாதவரை முதலமைச்சர் ஆக்க, இல்லாத தகுதி எல்லாம் இருப்பதாக இட்டுக் கட்டி பேசித் திரியாமல்... தன்னையே நம்பி களத்தில் நிற்கும் தைரியத்தை பாராட்டவே வேண்டும்.

‘‘நமக்கு என்னதான் வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமே’’ என்று ஏதோ ஒரு இடத்தில் சீமான் சொல்லி இருக்கிறார். இந்த எதார்த்தம் ஒரு மனிதனுக்கு இருக்கத்தானே வேண்டும். இன்னும் கொஞ்சம் யதார்த்தத்துக்கு சீமான் வர வேண்டும். தடித்த வார்த்தைகளை விடுத்து தணிக்கும் தமிழை அவர் கை கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் சக்திகளையும் சக பயணிகளாக எதிர்கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். அடுத்தவரை அச்சுறுத்துவதற்காக தனது ரத்தத்தை கொதிநிலையில் வைத்திருப்பது எதிரிகளுக்கு அல்ல; அவருக்கே ஆபத்தானது. கருத்துக்களை விதையுங்கள். காலம் இருக்கிறது.

-ப.திருமாவேலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close