Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்தாவது ஹிட் அடிப்பாரா துரைமுருகன்? - காட்பாடி தொகுதி நிலவரம்வாக்காளர்கள்  எண்ணிக்கை:

 


தொகுதி புராணம்:

குடியாத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1962-ல் காட்பாடி தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதியில் ஆரம்பத்தில் காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றியங்கள் இடம் பெற்றிருந்தன. 2011 ம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியத்தின் சில பகுதிகள், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள வஞ்சூர், ஜாப்ராப்பேட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து கே.வி.குப்பம் புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. காட்பாடி தொகுதியில் வாலாஜா வட்டத்தில் உள்ள வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம், லாலாப்பேட்டை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. தவிர வேலூர் மாநகராட்சியில் 15 வார்டுகள், தண்டலம், கிருஷ்ணாபுரம் முதல் பொன்னை, தெங்கால் ஊராட்சி வரை தொகுதி எல்லை பரந்து விரிந்து கிடக்கிறது.

தி.மு.க. கோட்டை:

வன்னியர்களே பெரும்பான்மை. 40 சதவீதம் வன்னியர், தலித்துகள் 18 சதவீதம், 20 சதவீத முதலியார்கள் தொகுதியில் உள்ளனர். இதனால், பிரதான கட்சிகள் அனைத்தும் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

1962-ம் ஆண்டு காட்பாடி தொகுதி ஏற்படுத்தப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜகோபால் நாயுடு வெற்றிபெற்றார். இதுவரை நடந்துள்ள 12 சட்டப்பேரவை தேர்தல்களில் தி.மு.க 7 முறையும், அ.தி.மு.க 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. தி.மு.க சார்பில், காட்பாடி தொகுதியில் 1996, 2001, 2006, 2011 வருட சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார் துரைமுருகன். 2011 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அப்பு என்கிற ராதாகிருஷ்ணனிடம் வெறும் 2,900 வாக்குகள் என சொற்ப வித்தியாசத்திலேயே வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்தார் துரைமுருகன். 

1996 தி.மு.க(துரைமுருகன்) 75,439 அ.தி.மு.க பாண்டுரங்கன் 34,432
2001 தி.மு.க துரைமுருகன் 64,187 பா.ம.க ஏ.கே.நடராஜன் 56,185
2006 தி.மு.க துரைமுருகன் 86,824 அ.தி.மு.க நாராயணன் 51,677
2011 தி.மு.க துரைமுருகன் 75, 064 அ.தி.மு.க அப்பு 72,091தொகுதியின் தலையாய பிரச்னைகள்:

தொகுதி முழுக்கவே தண்ணீர் பிரச்னை. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் இருந்தாலும், வாரத்திற்கு ஒருமுறைதான் தண்ணீரையே மக்கள் பார்க்கிறார்கள். காட்பாடி தாலுகாவாக இருந்தாலும், தாலுகா மருத்துவமனை இன்னமும் அமைக்கப்படவில்லை. பெண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதனால், கல்வி கற்க வேலூருக்குச் செல்லும் அவஸ்தை மாணவர்களுக்கு. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் துறைகள் குறைவாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் முக்கிய ரயில்வே சந்திப்பு இருக்கும் காட்பாடியில் டெல் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. பீடி சுற்றுதல், விவசாயம், நெசவு போன்றவை முக்கியமான தொழில்களாக இருக்கிறது. ஆனால், புதிய தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. வேலைக்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். காட்பாடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் போக்குவரத்து வசதி உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ துரைமுருகன்..?

* திருவள்ளூர் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டு வந்தார்.

* காட்பாடியை தாலுகா மாற்றியது, ஒருங்கிணைந்த நீதிமன்றம், ரேசன் கடைகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியது ஆகியவை பறைசாற்றிக் கொள்ளக்கூடிய சாதனைகள். 


துரைமுருகனுக்குப் பாதகமான அம்சங்கள்!

* வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கமே வராமல் இருப்பது.

* பத்தாண்டுகளாக பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மக்கள் எளிதில் அணுக முடியாத எம்.எல்.ஏ. என்ற நிலை. 

* கட்சிக்காரர்களிடம் மட்டும் பேசுவது, சட்டமன்றத்தில் காட்பாடிக்காக குரல் கொடுக்காதது, பெரியண்ணன் மனோபாவம், கோபம் எனப் பல நெகட்டிவ் புள்ளிகளைக் குவிக்கின்றனர். 

ஆனால், இத்தனை மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் மீண்டும் தெம்பாகக் களம் காண்கிறார் துரைமுருகன்.


பிரதான எதிரணி வேட்பாளர்களின் பலம்/பலவீனங்கள் 

1) அப்பு என்கிற ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)(+)

* தொகுதியில் அறிமுகமான முகம்.

* பணபலம் பிளஸ் முதலியார் சமூக ஆதரவு.

* கட்சி நிர்வாகிகளை அனுசரிக்கும் பாங்கு.

* சென்ற முறை சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைய நேரிட்ட்டது. அதை இந்த தேர்தலில் சரி செய்யும் வேட்கையுடன் வேலை பார்ப்பது.

(-)

கூட்டுறவு சங்கப் பணத்தில் கையாடல் என்ற சர்ச்சையில் சிக்கி ’மாவட்ட செயலாளர்’ பதவியை இழந்தது.  

2) டி.எஸ் சிவானந்தம் (த.மா.கா)


(+)

* காட்பாடி தொகுதியைச் சேர்ந்தவர்.

* மிகவும் எளிமையானவர்.

(-)

* உள்ளூர்வாசிதான் என்றாலும், பரவலான அறிமுகம் இல்லாதவர்.

* தென்னை சின்னம் மக்களிடம் சென்று சேராதது. 

3) என்.டி.சண்முகம் (பா.ம.க)

 

(+)

முன்னாள் மத்திய அமைச்சர் என்பது மட்டுமே ஒரே சாதகம். 

(-)

* வேலூர் தொகுதியைச் சேர்ந்தவர்.

* பா.ம.க சார்பில் எந்தக் கூட்டமும் நடத்தியதில்லை.

* கட்சிக்காரர்களுக்கு பணத்தை செலவு செய்ய மாட்டார்.

* தொகுதியில் இவருக்கென்று எடுத்துப் போட்டு வேலை செய்ய ஆட்களே இல்லை. 


வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி!  

காட்பாடி தொகுதியில் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்று நாயகனாகத் திகழ்கிறார் துரைமுருகன். ஆனால், இந்த முறை கட்சிக்காரர்களே அவரது கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் அழுது புலம்பி, சென்டிமென்ட் மழையில் நனைந்து, சமாளித்து வைத்திருக்கிறார். மக்களிடம் இந்த சென்டிமென்ட் எடுபடுமா என்பது கேள்வி.

ஆனால், இருக்கும் வேட்பாளர்களில் அதட்டலுடன் தொகுதிக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்வார் என்ற பிம்பம் துரைமுருகனிடம் மட்டுமே இருக்கிறது. வேலூர் மாநகராட்சியின் குப்பைகளை காட்பாடிக்குட்பட்ட 66 புத்தூர் கிராமத்தில் கொட்டும் முயற்சியின்போது,  'விவசாய நிலம் பாழாகும்' என்பதால் போராட்டக் களத்தில் குதித்தார் துரைமுருகன். புத்தூரில் விளைந்த கீரைக்கட்டுகளை தூக்கிக் கொண்டு கலெக்டரிடம் சண்டை போட்ட சம்பவமும், குப்பைக் கொட்டும் முயற்சி நின்று போனதையும் இன்றளவும் மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள்.

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக அவர் காட்டிய முனைப்பும் மிக முக்கியமானது. அதே சமயம், தேர்தலில் வெற்றி பெற்றதும் முகத்தை மக்களிடம் காட்டாமல் வேறுபக்கம் தூக்கி வைத்துக் கொள்வதும், உதவி என்று வீட்டுக்கு வருபவர்களைப் புறக்கணிப்பதும் மக்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்துள்ளது.

இதனாலேயே கடந்த தேர்தலில் 35 வயது அப்புவிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது துரைமுருகனால். இந்த முறையும் தி.மு.க, அ.தி.மு.க பிரதானமாகக் களத்தில் இறங்குவதால், ஐந்தாவது முறையும் துரைமுருகன் வெற்றி பெறுவாரா என்பது தொகுதியில் பேசு பொருளாக இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளரும் வன்னியர் என்பதால், சாதிப் பாசம் தாண்டி நீண்டகால தீர்வுகளுக்கு தொகுதி மக்கள் முன்னுரிமை கொடுத்தால், துரை முருகனுக்கு வெற்றி அவ்வளவு சீக்கிரம் வசப்படாது என்பதே... தற்போதைய நிலவரம்! 

 

- ஆ. விஜயானந்த் & அச்சணந்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close