Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டும் இரண்டு விரலுக்கும் என்ன வித்தியாசம்?- அர்த்தம் சொல்லும் பிரேமலதா!

 

எம்.ஜி.ஆர் இரண்டு விரலை காண்பித்தால் இரட்டை இலை என அர்த்தம், ஜெயலலிதா இரண்டு விரல் காட்டினால் இரண்டு பேர் இன்று பலி என அர்த்தம் என்று பிரேமலதா தெரிவித்தார்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் பாரதிநகர், கருமண்டபம் பகுதியில் தேமுதிக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டுவை ஆதரித்தும், சுப்பிரமணியபுரம் பகுதியில் கிழக்குத் தொகுதி மதிமுக வேட்பாளர் ரொஹையா ஷேக் முகமதுவை ஆதரித்தும், காட்டூர் பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து கல்கண்டார் கோட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார்.

தென்னூரில் பேசிய பிரேமலதா, மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் 3-வது அணி என பேசப்பட்டது. தற்போது முதலாவது அணியாக ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பெற்று விளங்குகிறது. தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்து விஜயகாந்த் முதல்வர் ஆனதும்  மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும். மணல் அள்ளுபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு தமிழக நதிகளை இணைப்பதுதான் முதல் வேலை.

படித்த மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். அரசு பள்ளிகளில் தற்போது கலர் உணவு தான் வழங்குகிறார்கள். சத்தான உணவு வழங்கப்படவில்லை. விஜயகாந்த் முதல்வர்  ஆனதும்  அரசு பள்ளிகளில் காலை மற்றும் மதியம் என இரண்டு வேளை சத்தான உணவு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும்.

சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சி விளங்கினாலும் எந்த வசதிகளும் இங்குமில்லை. துப்புரவு பணி இல்லை. தமிழகத்தில் இன்று நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவும், திமுகவும்தான் காரணம். வேறு யார் மீதும் குறை சொல்ல முடியாது.  அ .தி.மு.க., தி.மு.க. மாறி, மாறி 50 ஆண்டு காலம் ஆட்சி அமைத்தும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. மக்களுக்கு சிகிச்சையளிக்க நல்ல மருத்துவமனைகள் இல்லை, அடிப்படை வசதிகள்கூட இல்லை. திருச்சியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலை உள்ளது. மக்கள் சிந்தித்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

அடுத்து  கருமண்டபத்தில் பேசியபோது, எம்.ஜி.ஆர் இரண்டு விரலை காண்பித்தால் இரட்டை இலை என அர்த்தம், ஜெயலலிதா இரண்டு விரல் காட்டினால் இரண்டு பேர் இன்று பலி என அர்த்தம். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் என்கிற பெயரில் மக்களை சாகடிக்கிறார் ஜெயலலிதா என்றவர், தமிழகத்தில் இன்று என்ன இருக்கு என்று கேட்டால், டாஸ்மாக்தான் தெருவுக்குத் தெரு இருக்கிறது என்றுதான் பதில் வருகிறது. நாளைய தமிழகத்தை ஆளக்கூடிய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் எஜமானர்கள் நீங்கள்தான். அதற்கேற்ற வகையில், மாற்றத்தைக் கொண்டு வர சிந்தியுங்கள்.
ஓட்டுக்கு பணம்தான் அதிமுக, திமுகவால் தரமுடியும். நல்ல சாலை அமைத்துத் தரமுடியுமா, முறையாக ரேஷன் பொருள்களைத் தரமுடியுமா, நல்ல பேருந்து வசதியைத் தர முடியுமா என பல கேள்விகள் எழுந்தாலும், அவர்களால் எதையும் செய்து தரமுடியாது. கடந்த தேர்தலின்போது விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியவர் ஜெயலலிதா. ஆனால், பேருந்து, மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணம், வீட்டு வாடகை என எல்லா கட்டணங்களும் உயர்ந்துவிட்டன.

எனவே, ஜெயலலிதாவும், கருணாநிதியும் தரும் வாக்குறுதிகள் எல்லாம் பொய் வாக்குறுதிகள். மாற்றத்தை கொண்டு வந்தால்தான் மேம்பாட்டை பார்க்க முடியும். கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 3 முறையும் தமிழகத்தை ஆண்டிருந்தாலும், எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களியுங்கள். புதிய வாக்காளர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த முறையும் மாற்றத்தை கொண்டு வராவிட்டால் 100 ஆண்டுகள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது என உறுதி அளிக்கிறேன். விஜயகாந்திற்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். புதிய வாக்காளர்கள் ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். நாங்கள் நிச்சயமாக மாற்றத்தை கொண்டு வருவோம். மாற்றம் வந்தால்தான் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். தமிழகத்திலிருந்து இரு கட்சிகளையும் அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
 


அதிமுக, திமுக ஆகிய விஷச் செடிகளை தமிழகத்தைவிட்டு அகற்றி, லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு, கறை படியாத, நேர்மையான ஆட்சியைத் தரும் வகையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். எனவே, எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்றார் பிரேமலதா.

-சி.ய.ஆனந்தகுமார்

 

எடிட்டர் சாய்ஸ்