Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனைத்து வீடுகளிலும் என்னை பற்றிதான் பேச்சு! - அசால்ட் அன்புமணி

அனைத்து வீடுகளிலும் ‘அன்புமணிக்கு வாய்ப்பளிக்க போகிறோம்’ என்று பேசுவதாக வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூடத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பேசினார்.

வேலூரில் பா.ம.க.வின் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. ஜெயலலிதா பாணியில் அன்புமணியும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 27 வேட்பாளர்களை ஒரே மேடையில் வேலூரிலேயே அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஆளும் கட்சி, ஆண்ட கட்சி அனைத்தும் தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் மற்ற கட்சிகளை நம்பி உள்ளன. எங்களுக்கு யாரும் வேண்டாம். கூட்டணி தேவையில்லை. 234 தொகுதிகளிலும் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நாங்கள் எதை செய்தாலும் எங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு முன்னோடி கட்சியாக பா.ம.க உள்ளது. 66 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட தி.மு.க எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு மெளன புரட்சி நடக்கிறது. அனைத்து வீடுகளிலும் பேசுகின்ற பேச்சு ‘அன்புமணிக்கு வாய்ப்பளிக்க போகிறோம்’ என்பது தான். ஓராண்டு காலமாக தமிழ்நாட்டின் பிரச்னைகளையும் தீர்வுகளையும் சொல்லி வருகிறோம். ஆக்கப்பூர்வமான அரசியல் நடத்தி வருகிறோம். மற்ற கட்சி போல் அநாகரிகமாக பேசுவது இல்லை. இந்த அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஐந்து ஆண்டு மட்டும் வாய்ப்பு கொடுங்கள் போதும். வேலூர் மாவட்டம் 200 கிலோ மீட்டர் நீளம், 37 லட்சம் மக்கள் தொகை என பெரிய மாவட்டம். நாடாக இருந்திருந்தால் 121வது இடத்தில் இருக்கும். இவ்வளவு பெரிய மாவட்டத்தை நிர்வகிப்பது கடினம். நாங்கள் வேலூரை மூன்று மாவட்டங்களாக பிரிப்போம். மாவட்டத்திற்கு 12 லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் சிறு சிறு மாவட்டங்களாக
பிரிப்போம். வேலூருக்கு வேளாண் பல்கலை. கொண்டு வருவேன். பாலாறில் தண்ணீர் தான் இல்லை என்று பார்த்தால் மணலும் இல்லை. இரண்டு கட்சிகளும் சுரண்டி எடுத்துவிட்டார்கள். என்னிடம் தமிழ்நாட்டுப் பிரச்னை எதை பற்றி கேட்டாலும் சொல்லுவேன். ஒவ்வொன்றுக்கும் விஞ்ஞான ரீதியில் தீர்வு காணுவோம்.
 

ஜெயலலிதா மூன்று நாளைக்கு ஒரு முறை பொதுக்கூட்டம் நடத்தி 2 பேரை பலியிடுகிறார். 300 ரூபாய் கொடுத்து கூட்டி வந்து உச்சி வெயிலில் கூட்டத்தை அடைத்து வைத்து வெளிவிடாமல் இதுவரை 5 பேர் இறந்து போயுள்ளனர். இதற்காக ஜெயலலிதா மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவிற்கு மக்கள் கஷ்டம் பற்றி தெரியாது. ஏன் என்றால் மக்களை சந்திப்பதே இல்லை. இப்படி பிரசாரம் என்ற பேரில் கொடுமை செய்வதற்கு பதில், டாய்லெட் முதற்கொண்டு பட்டன் அழுத்தி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தது போல் பிரசாரத்தையும் அப்படியே செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் நாலு வயது குழந்தையை குடிக்க வைக்கிறார்கள். இந்தியாவில் அதிக தற்கொலைகள், இளம் விதவைகள், பாலியல் பலாத்காரங்கள்  நடைபெறுவது தமிழ்நாட்டில்தான். காரணம் மது. மதுவை ஒழிக்க மருத்துவர் ராமதாஸ் 24 ஆண்டு காலமாக போராடுகிறார். ஆனால் கடந்த சட்டமன்றத்தில் மது விலக்கு கொண்டு வர முடியாது என்ற ஜெயலலிதா இப்போது படிப்படியாக மதுவிலக்கு என்கிறார். தி.மு.க மதுவிலக்கிற்கு தனி சட்டம் என்கிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக தான். ஊழலை தடுக்க லோக்பால் கொண்டு வருவோம் என்கிறார் ஸ்டாலின். அதை யார் சொல்ல வேண்டும் என்ற தகுதி வேண்டாமா? இந்தியாவிலேயே அதிகம் ஊழல் செய்யும் கட்சி ஆளும் அ.தி.மு.க. ஜெயலலிதாவிற்கு அதைப் பற்றி கவலையே இல்லை. நாலு ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். என் ஆட்சியில் ஒன்றுக்கும் உதவாத இலவச பொருட்களை கொடுக்க மாட்டேன். இலவச கல்வி, இலவச மருத்துவம் அளித்து கண்ணியமான வாழ்க்கை கொடுப்பேன்” என்றார்.

- அ.அச்சணந்தி

படங்கள்: ச.வெங்கடேசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ