Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்பாராத முற்றுகை... கலகலத்து போன அதிமுக எம்எல்ஏ!

 

பிரசாரத்துக்கு வந்த அரியலூர் அதிமுக எம்எல்ஏ துரை.மணிவேலை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், ஆத்திரம் அடைந்த அவர், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் துரை.மணிவேல். தற்போது, இந்த தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக எம்எல்ஏ துரை.மணிவேல் இன்று தேளூர் கிராமத்திற்கு பிரசாரத்திற்கு வந்தார். அப்போது, எம்எல்ஏ துரை.மணிவேலை பொதுமக்கள் முற்றுகையிட்டதோடு, 'வெற்றி பெற்ற பிறகு கிராமத்துக்கு வராத நீங்கள் எப்படி இப்போது வரலாம், ஒரு மாதமாக குடிதண்ணீர் வரவில்லை'  என்று ஆவேசத்துடன் கேட்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கும், எம்எல்ஏ துரை.மணிவேலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடமே பரபரப்பு உள்ளானது. இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ வை முற்றுகையிட்டவர்களில் ஒருவரான  கார்த்தி என்பவரிடம் பேசியபோது, "கைகாட்டி அருகே அமைந்துள்ள தேளூர் ஊராட்சியில் 750 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே சரியாக குடிநீர் வரவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதியிடம் நாங்கள் பலமுறை புகார் செய்தோம். ஆனால் அவர்,  'நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எனக்கு ஓட்டுபோடாதவர்கள் நீங்கள். உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது' எனக் கூறினார். எங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல்  இவர்கள் சிமெண்ட் ஆலைகளுக்கு தண்ணீர் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
 

இதை எதிர்த்து கலெக்டர் ஆபீஸ், எம்.எல்.ஏ ஆபீஸ்னு பல இடங்களில் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கடுப்பான நாங்கள் ஆத்திரமடைந்த பொதுமக்களோடு இன்று திருச்சி - சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.  அப்போது அந்த வழியாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அரியலூர் அதிமுக எம்எல்ஏ துரை.மணிவேலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, பொதுமக்களுக்கும், எம்எல்ஏ மற்றும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'கடந்த 5 வருடங்களாக இப்பகுதிக்கு வராமல் தற்போது எதற்கு வந்தீர்கள்?' என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினர்.

இதனால் எம்.எல்.ஏ தரப்பினருக்கும் பொதுமக்கள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து,  எம்எல்ஏ பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்" என்றார்.

குடிதண்ணீர் வழங்காததால் பிரசாரத்திற்கு வந்த அதிமுக எம்எல்ஏவை,  பொதுமக்ககள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

-எம்.திலீபன்

எடிட்டர் சாய்ஸ்