Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணை உள்ளத்தோடு தி.மு.க முன்னாள் அமைச்சரை ஏற்றுக் கொண்டாராம் ஜெயலலிதா!

 திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் மற்றும் தமாகா மூத்த துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசனுடன் சேர்ந்து, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் வெளியேறினார். இதைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய வாசனுடன் தொடர்ந்து இருந்து வந்தார் எஸ்.ஆர்.பி.

இந்த நிலையில், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியுடன் ஜி.கே.வாசன் கூட்டணி அமைத்தார். அதிமுக கூட்டணிக்கு தமாகா செல்லும் என்று எண்ணியிருந்த எஸ்.ஆர்.பி.க்கு, ஜி.கே.வாசனின் இந்த முடிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கூட்டணி தொடர்பாக கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஆர்.பி. மேலும், தமாகாவில் இவருக்கு சீட்டும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் எஸ்.ஆர்.பி இன்று சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜிக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்த செல்வராஜ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார்.

இது குறித்து. அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் த.மா.கா-வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கே.மனோகரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.கதிரவன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
 

அதே போல், ஜெயலலிதாவை, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மற்றும் திமுகவைச் சேர்ந்த குளித்தலை ஒன்றிய முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் மருதூர் திருநாவுக்கரசு, தொட்டியம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இ.பி.ரெத்தினம், முசிறி ஒன்றிய முன்னாள் செயலாளர் பெ.சோழன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஏ.ஆனந்தன், முன்னாள் அரசு வழக்கறிஞர் துறையூர் த.ராமசாமி, என்.எஸ்.கே.கலைராஜா,  என்.எஸ்.கே கருணைராஜா, என்.டி.சந்திரமோகன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

கருணை உள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்