Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சுழியை திரும்பவும் கைப்பற்றுமா திமுக? தொகுதி நிலவரம்

 

வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை

தொகுதி புராணம் :

திருச்சுழி தொகுதிக்கு 2011-ம் ஆண்டு தேர்தல்தான் முதல் தேர்தல். அதற்குமுன்பு திருச்சுழி தொகுதி கிடையாது. அருப்புக்கோட்டை தொகுதியாக 1951-ம் ஆண்டு முதல் இருந்த இந்தத் தொகுதி, ஒன்றிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. அதிலிருந்து விருதுநகர் தனியாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, மாவட்டத்தின்  கடைக்கோடி தொகுதியாக இன்றைய திருச்சுழி, அன்றைய அருப்புக்கோட்டைத் தொகுதி.
வானம் பார்த்த வறண்ட பூமியாகத் திகழும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுதான் எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூட்டிக் கொண்டார்.

 

 

அப்போது எம்.ஜி.ஆரை எதிர்த்துப்போட்டியிட்டவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வை. அதன்பிறகு, இந்தத் தொகுதியில் 1980,1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றது. ஆனால், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஜா அணி, ஜெ அணி என்று பிரிந்ததால், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தி.மு.கவுக்கு சாதகமாக இருந்தது. அந்தத் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட தங்கப்பாண்டியன்(தற்போதைய எம்.எல்.ஏ தங்கம் தென்னரசுவின் தந்தை) வெற்றி பெற்றார். ஆனால், மீண்டும் 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,  அ.தி.மு.க வேட்பாளர் மணிமேகலை வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1996-ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கவின் தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவின் கே.கே.சிவசாமி வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் தி.மு.கவின் தங்கம் தென்னரசு வெற்றி பெற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு நடைபெற்ற 2011 தேர்தலில், தமிழகம் முழுவதும் தி.மு.க தோற்றாலும் திருச்சுழி தி.மு.கவையும், தங்கம் தென்னரசுவையும் கைவிடவில்லை.

1951 முதல் 2006-ம் ஆண்டு தேர்தல் வரை அருப்புக் கோட்டைத் தொகுதி நிலவரம். 2011 நிலவரம் மட்டுமே திருச்சுழித் தொகுதி நிலவரம்.   
   
தேர்தல் ஆண்டு - வெற்றி - வேட்பாளர்

1951 - ஜெயராம ரெட்டியார் - காங்கிரஸ்
1957 - எம்.டி.ராமசாமி - சுயேட்சை
1962 - கடம்பவன சுந்தரம் - காங்கிரஸ்
1967 - எஸ்.எஸ்.பாரதி - சுதந்திரா கட்சி
1971 - எஸ்.எஸ்.பாரதி - பார்வார்டு பிளாக்
1977 - எம்.ஜி.ஆர் - அ.தி.மு.க
1980 - பிச்சை - அ.தி.மு.க
1984 - பிச்சை - அ.தி.மு.க
1989 - தங்கப்பாண்டியன் - தி.மு.க
1991 - மணிமேகலை - அ.தி.மு.க
1996 - தங்கப்பாண்டியன் - தி.மு.க
2001 - கே.கே.சிவசாமி - அ.தி.மு.க
2006 - தங்கம் தென்னரசு - தி.மு.க
2011 - தங்கம் தென்னரசு - தி.மு.க

தொகுதி பிரச்னைகள்!
   
வறண்ட பிரதேசம் என்பதால், தண்ணீர் பிரச்னை எப்போதும் உள்ள தொகுதி. சாலைகள், போக்குவரத்து, மருத்துவமனை, மின்சார வசதிகளற்ற நிலையில், இங்குள்ள கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரானபோதும் இந்த நிலை மாறவில்லை. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு அமைச்சராக இருந்தபோதும் இந்த நிலை மாறவில்லை.

வானம் பார்த்த பூமியில் வசிக்கும் இந்த மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய பெரிய தொழிற்சாலைகள், விவசாயம் செய்வதற்கான பாசன வசதிகள் இல்லை. திருச்சுழி தொகுதியில் உள்ள திருச்சுழி யூனியன், நரிக்குடி யூனியன் பகுதி மக்கள், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை இன்றும் நிலவுகிறது. நரிக்குடி யூனியனில் உள்ள  சில கிராமங்களில் இன்னும் கண்மாய்களில் குழி  தோண்டி, அதில் ஊறும் தண்ணீரை தேங்காய் சிரட்டையில் எடுத்துக்குடிக்கும் அவலம் நிலவுகிறது.


300 ஏக்கர் பாசன பரப்பளவுக்கு விவசாயிகளுக்கு வாழ்வளிக்ககூடிய கம்பிக்குடி-நிலையூர் கால்வாய் திட்டம் உள்பட எல்லாத் திட்டங்களும் தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன.

அதிருப்தி அழகிரி ஆதரவாளர்:

1977-ல் எம்.ஜி.ஆரை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர் 29 வயது இளைஞரான காரியாபட்டி யூனியன் முன்னாள் சேர்மன் எஸ்.எம்.போஸ். மறைந்த மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டியனின் நிழல் போல் வலம் வந்தவருக்கு, அவரது மகனான தங்கம் தென்னரசுவோடு ஒத்துப்போகவில்லை. அழகிரியின் தீவிர ஆதரவாளரான காரியாபட்டி எஸ்.எம்.போஸ், சமீபத்தில் சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதனால் இந்தத் தேர்தலில், திருச்சுழியின் தி.மு.க ஓட்டுக்களுக்கு எஸ்.எம்.போஸ் கண்டிப்பாக வேட்டு வைப்பார்.

காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கிறது. காலையில் திறக்கப்படும் அந்த அலுவலகம், சில மணி நேரங்களில் மூடப்பட்டு விடும். தங்கம்தென்னரசுவின் வீடு, காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் இருப்பதால் பொது மக்கள், கட்சி பிரமுகர்கள் சனி, ஞாயிறுகிழமைகளில் அங்குபோய் எம்.எல்.ஏவைச் சந்திப்பார்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் திருச்சுழி தொகுதிக்கு இந்த ஆட்சியில் அவரால் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

   
ஆறுதலான விஷயங்கள் : இன்றைய எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு,  கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி போன்ற பகுதிகளில் பல அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். இந்தப் பகுதிகளுக்கு அவர் காலத்தில்தான் சாலை வசதிகள் செய்யப்பட்டன. அவைதான் இன்றுவரை அந்தப் பகுதி மக்களுக்கு மிகப்பெரியளவில் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. அதை இன்றும் அந்தத் தொகுதி மக்கள் நன்றியோடு நினைவுகூர்கின்றனர்.

களம் காணும் பிரதான வேட்பாளர்கள்

தி.மு.க - தங்கம் தென்னரசு

அ.தி.மு.க - தினேஷ்பாபு

ம.தி.மு.க -

தங்கம் தென்னரசுவின்
(+)



திமுக விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்.


கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை வீசிய போதே,  திருச்சுழி தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.


தொகுதி மக்களால் எளிமையாக அணுக முடிவது.


அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய வாக்குறுதிகள்.

(-)

3-வது முறையாகவும் தி.மு.க சார்பில் களம் இறங்குவது, லோக்கல் கட்சிக்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த முறை, தொகுதிக்குள் சிறப்பாக செயல்படாதது.


தினேஷ்பாபுவின் (+)



முதல்முறை தேர்தலைச் சந்திப்பதால், பெரியளவில் குற்றச்சாட்டுகள் இல்லை.

தேவர் சமூகத்தின் உட்பிரிவில்,  அகமுடையார் சமுகத்தைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. திருச்சுழியில் அகமுடையார் சமூக மக்கள் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக உள்ளனர். அது தினேஷ் பாபுவுக்கு பிளஸ்.

(-)

அதிமுக சார்பில் திருச்சுழியில் போட்டியிட, காரியாபட்டி யூனியன் சேர்மன் கரியனேந்தல் ராமமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் முருகன், பாலமுருகன் உள்பட பலர் நமக்குத்தான் சீட்டு என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென்று அருப்புக்கோட்டையை சேர்ந்த அதிமுக மாவட்ட இளைஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர் வக்கீல் தினேஷ்பாபுவை வேட்பாளராக தலைமை அறிவித்தது. இது,  திருச்சுழி பகுதி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யானைக்குப் போட்டி பூனையா? என்று லோக்கல் அதிமுகவினர் முணுமுணுக்கின்றனர்.


தி.மு.க, அ.தி.மு.க-வுக்கே இங்கு நேருக்கு நேர் போட்டி. மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க, சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி இங்கு டெபாசிட்டை தேற்றுவதே கடினம்.

வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி!

திருச்சுழி தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், நாடார், தாழ்த்தப்பட்டோர், முஸ்லீம்கள் குறிப்பிட்ட அளவில் கணிசமாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முக்குலத்தோரில் உட்பிரிவான மறவர் சமுதாயத்தை விட அகம்படியர் சமுதாய ஓட்டுக்கள் அதிகம். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அந்த ஒட்டுக்களே. தங்கம் தென்னரசு மறவர் பிரிவை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் தினேஷ்பாபு அகம்படியர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே இந்த பிரச்னைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். ஆனால், தங்கம் தென்னரசுவின் எளிமையான அணுகுமுறை, ஆளும்கட்சி மீதான வெறுப்பு போன்றவை தங்கம் தென்னரசுவை வெற்றி பெற வைக்கலாம். இன்றைய சூழலில் தங்கம் தென்னரசுக்கு சாதகமாகவே காற்று வீசுகிறது.



எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ