Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒன்பதாவது முறையும் இரட்டை இலை வெல்லுமா? ஆண்டிபட்டி கள நிலவரம்!

 

வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை:

 

தொகுதி புராணம்!     

தமிழகத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் பரிச்சயமான தொகுதி எது என்றால் அது ஆண்டிபட்டிதான். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே தேர்தலில் நின்ற எம்.ஜி.ஆரை, வெற்றி பெற வைத்த தொகுதி. அதே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, இரட்டை புறா சின்னத்தில் நின்றபோது தோற்கடித்த தொகுதி. எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றி பெறச் செய்த தொகுதி என பல தேர்தல்களில் நட்சத்திரத் தொகுதியாக வரலாற்றில் பதிவான தொகுதி ஆண்டிபட்டி.



இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் 1952 முதல் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், முதல் தேர்தலில் ஆண்டிபட்டி பகுதியானது கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும், 2-வது தேர்தலில் (1957) தேனி தொகுதிக்கு உட்பட்டதாகவும் இருந்தது. அதன் பின் 1962 தேர்தலில்தான் ஆண்டிபட்டி என்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அந்த தேர்தலில் தனி தொகுதியாக இருந்தது, அடுத்த தேர்தல் முதல் பொதுத்தொகுதியாக உருமாறியது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளாக ஆண்டிபட்டி தாலுகா, கூடலூர் நகராட்சி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சிகள், கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி, வண்ணாத்திப்பாறை வருவாய் கிராமங்கள் ஆகிய பகுதிகள் உள்ளன.  இந்த தொகுதியில் முக்குலத்தோர் 30 சதவீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதத்தினர் உள்ளனர். கவுண்டர் சமுதாயத்தினர் 14 சதவீதமும், நாயுடு சமுதாயத்தினர் 10 சதவீதமும் உள்ளனர். நெசவு தொழில் செய்யும் சாலியர் சமூகத்தினர் 4 சதவீதம் உள்ளனர்.

விவசாயமே பிரதான தொழில். ஆண்டிபட்டி தாலுகா பகுதிகளில் முருங்கைக்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் நெல், வாழை, திராட்சை சாகுபடி நடக்கிறது. மேலை பகுதியில் பெருமளவில் தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆரால் கொண்டுவரபட்ட அண்ணா நுாற்பாலையும் இந்த தொகுதியில் செயல்பட்டு வருகிறது. கானாவிலக்கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், அண்ணா கூட்டுறவு நூற்பாலையும் செயல்பட்டு வருகிறது. மேகமலை, ஹைவேவிஸ், மேல் மணலாறு, கீழ் மணலாறு, மகாராஜாமெட்டு ஆகிய மலை கிராமங்களில் தேயிலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஹைவேவிஸ் மலை, சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. கூடலுார் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் முல்லைபெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் நீர் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இங்குதான் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது

அ.தி.மு.க. கோட்டை!


ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.கவின் கோட்டை என்றே சொல்லலாம். கடந்த 1962 முதல் 2011 வரை 12 தேர்தல்களில் காங்கிரஸ், சுதந்திரா கட்சி தலா ஒரு முறை, தி.மு.க. 2, அ.தி.மு.க. 8 என வெற்றி பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரின் வெற்றி தொகுதியாக இன்றுவரை அ.தி.மு.க வினர் இந்த தொகுதியை பார்க்கி்ன்றனர். 2006-ல் ஜெயலலிதா வெற்றி பெற்றார். தற்போதைய எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன்(அ.தி.மு.க.). 

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

2011 தங்க. தமிழ்ச்செல்வன்,  அ.தி.மு.க.
2006 ஜெ. ஜெயலலிதா, அ.தி.மு.க.
2002 ஜெ. ஜெயலலிதா, அ.தி.மு.க.
2001  தங்க. தமிழ்ச்செல்வன்,  அ.தி.மு.க.
1996 பி. ஆசையன் தி.மு.க.
1991 கே. தவசி, அ.தி.மு.க.
1989 பி. ஆசையன், தி.மு.க.
1984 எம். ஜி. இராமச்சந்திரன், அ.தி.மு.க.
1980 எஸ். எஸ். ராஜேந்திரன், அ.தி.மு.க. 
1977 கே. கந்தசாமி, அ.தி.மு.க.
1971 என்.வி.குருசாமி, சுதந்திரா கட்சி
1967 எஸ்.பரமசிவம், சுதந்திரா கட்சி
1962 அ.கிருஷ்ணவேணி, இந்திய தேசிய காங்கிரஸ்

* 2001-ல், ஆண்டிபட்டி உட்பட நான்கு தொகுதிகளில்  போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரால் தேர்தலில் போட்டியிடாமல் போனது. எனவே அவருக்கு டம்மியாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலை ஆகி,  2002 -ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

*  ஜெயலிலதா முதல் முறையாக இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன், (2002 - 2006 ) ஆண்டிபட்டி தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, ஆண்டிப்பட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், தங்கங்கம்மாள்புரம் கொட்டை முந்திரி பதப்படுத்தல், விற்பனைக் கூடம், உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அடிக்கடி தொகுதி பக்கமும் ஜெயலலிதா தலை காட்டி வந்தார். 2006 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால், தொகுதிக்கு விசேஷ கவனிப்பு எதையும் வழங்க முடியவில்லை.  

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ..? 

ஆண்டிபட்டியின் தற்போதைய எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)

 

நட்சத்திர அந்தஸ்து பெற்ற, இரண்டு முறை முதல்வர் வேட்பாளர்களை எம்.எல்.ஏக்களாகக் கொண்ட தொகுதியாக இருந்தாலும்,                                                               இன்னும் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது ஆண்டிபட்டி. சமவெளி பகுதியும் மலைப்பகுதியும் இணைந்த தொகுதியாக இது இருப்பதால் பல இடங்களில் இன்னும் சாலை வசதிகள் சீர் செய்யபடவில்லை என்ற புலம்பல் மக்களிடையே உள்ளது. லோயர்கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம், தேக்கம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு புதிய சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் செல்வதற்கு  புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அதுவும் தொங்கலில்தான் உள்ளது. இந்த சாலையை மலைப் பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரம்  மக்கள் எதி்ர்பார்த்துக் காத்துள்ளார்கள்.

 
மக்கள் எதிர்பார்ப்பு: ஆண்டிப்பட்டி அருகே உயர் மட்ட ஜவுளி பூங்கா திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். குடிநீர் பிரச்னை சில இடங்களில் உள்ளது. அதை தீர்க்க வேண்டும் என்பது உள்ளூர்வாசிகள் கோரிக்கை. 

களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்..!


1) அ.தி.மு.க. -  தங்க தமிழ்ச்செல்வன் (தற்போதைய எம்.எல்.ஏ.)


2) தி.மு.க. -    எல்.மூக்கையா


3) தே.மு.தி.க ----- கிருஷ்ணமூர்த்தி



கள  நிலவரம். ..


"எம்.ஜி.ஆரின் தொப்பியை வைத்தால் கூட ஜெயித்துவிடும்” என்று எதிர்க்கட்சியினரே சொல்லும் அளவுக்கு ஆண்டிபட்டியில் இரட்டை இலை சின்னத்துக்கு மவுசு இன்னும் இருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் இந்த தொகுதியில் அதிகமாக உள்ள பிறன்மலை கள்ளர் வகுப்பை சார்ந்தவர். அ.தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு கட்சியினரிடம் நல்ல பெயர் உள்ளது.  ஓ.பி.எஸ்.இவரை ஓரம்கட்டி வைத்தார். ஆனால் அதையும் மீறி திமிறி எழுந்து மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். தொகுதியி்ல் பெரிய அதிருப்தி இவர் மீது இல்லை. தி.மு.க வேட்பாளராக மாவட்டச் செயலாளர்  மூக்கையா நிற்கிறார். கடந்த முறையும் நின்று தோல்வியை தழுவியவர்.

இந்த முறை ஜெயித்தால் அமைச்சராகலாம் என்று கனவில் உள்ளார். கட்சியினரிடமே நெருங்கிப் பழகாமல் இருந்துவிட்டதால், மக்களிடமும்  நெருங்கி செல்லமுடியாமல் திணறுகிறார். தே.மு.தி.க சார்பில் நிற்கும் கிருஷ்ணமூர்த்தி தலித் உள்ளிட்ட பிற சமுதாய வாக்குள் தமக்கு விழும் என்று எதிர்பார்க்கிறார். வெற்றிபெறாவிட்டாலும், கௌரவமான வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனாலும், எட்டு முறை இரட்டை இலை ஜெயித்த தொகுதிக்கு, ஒன்பதாவது முறையும் வெற்றி கிட்டும் என்பதே தற்போதைய நிலை! 



-அ.சையது அபுதாஹிர். சன்.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ